கோலாலம்பூர்-
தீ விபத்தின்போது ஏற்படும் பாதிப்புகளையும் சேதங்களயும் குறைப்பதற்கு ஏதுவாக அனைத்து வீடுகளிலும் தீயணைப்பு கருவி பொருத்துவது கட்டாயமாக அமல்படுத்தப்படலாம்.
கூட்டரசு அளவில் சில மாநிலச் சட்டங்களில் மட்டுமே இடம்பெற்றிருக்கும் இந்தப் பாதுகாப்பு விதிமுறையை அனைத்து வீடுகளிலும் அமல்படுத்த தீயணைப்பு மற்றும் மீட்பு பிரிவு திட்டமிட்டு வருகிறது.
2012ஆம் ஆண்டு கட்டடச் சீர் துணை சட்டத்தில் கட்டடங்களுக்கான தீத் தடுப்பு பாதுகாப்பு கீழ் வரையறுக்கப்பட்ட இந்த விதிமுறை, ஏற்கனவே சபா, சிலாங்கூர், திரங்கானு, பினாங்கு ஆகிய மாநிலங்களில் கட்டட சட்டத்தின் கீழ் அமலில் உள்ளது. இருப்பினும், குறிப்பிட்ட மாநிலங்களில் இந்த விதிமுறைகள் முழுவதுமாக அமல்படுத்தப்படவில்லை.
இதனிடையே 18 மீட்டர் உயரத்திற்கு கீழுள்ள வீடமைப்பு பகுதிகளில் 2012ஆம் ஆண்டு முதல் குறைந்தது ஒரு தீயணைப்புக் கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்று 1988ஆம் ஆண்டு தீயணைப்பு சட்டத்தில் தீத் தடுப்பு பாதுகாப்பு அம்சத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதேபோன்று 30 மீட்டர் உயரத்திற்கு மேல் அல்லது 10 மாடிகள் கொண்ட வீடமைப்பு பகுதிகளில் தீத் தடுப்பு பாதுகாப்பு அம்சமாக தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்று இந்தப் புதிய விதிமுறையில் கூறப்பட்டிருக்கிறது.
இந்த விதிமுறை ஏற்றுக் கொள்ளப்பட்டால், 2012ஆம் ஆண்டு முதல் வீடு வாங்கியவர்கள் தங்களது வீடமைப்பு மேம்பாட்டாளர்களிடமிருந்து தீயணைப்பு கருவியைப் பெற்றுக் கொள்ளலாம். மற்றவர்கள் தீயணைப்பு கருவிகளைச் சுயமாக வாங்கிக் கொள்ளவேண்டும் என தீயணைப்பு மற்றும் மீட்புப் பிரிவு பொது இயக்குனர் டத்தோ வான் முகமட் நோட் இப்ராஹிம் கூறினார்.
தீச் சம்பவத்தின்போது தீயை அணைப்பதற்கு உகந்த வழிமுறை கடைபிடிக்கப்படாததால் பல நேரங்களில் பெரும் சேதமும் உயிரிழப்பும் நிகழ்கின்றன.
No comments:
Post a Comment