Friday, 15 September 2017

மருத்துவமனை, மசூதி, கோவில்,முதியோர் இல்லம் பாதிப்பு: பினாங்கில் வரலாறு காணாத வெள்ளம்

சுகுணா முனியாண்டி
செபெராங் ஜெயா-
பினாங்கில் பெய்த இடை விடாத அடைமழையினால் பினாங்கு மாநிலம் வரலாறு காணாத வெள்ளத்தில் ஸ்தம்பித்தது.  பல  பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையிலும் சில மலைபகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.

வாகன நெரிசல் ,வாகன பழுது ,வியாபாரங்கள் விரயம், மருத்துவமனையில் அசெளகரியம், முதியோர் இல்லங்களில் முதியவர்கள் அவதி என பினாங்கு மக்களளின் வாழ்வாதாரமே இந்த அடைமழை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதும் திரும்புவதும் ,இஸ்லாமியர்களின் வெள்ளிக்கிழமை தொழுகையில் சிரமம், சாலை போக்குவரத்து  நெருக்கடியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கோவில்களிலும் வெள்ள நீர் புகுந்துள்ளது.
இந்த தொடர் மழையினால் பினாங்கு தீவு குறிப்பாக ஜாலான் பி.ரம்லி, ஆயர் ஈத்தாம் ,பினாங்கு மாநில பள்ளிவாசல், அரசு பெரிய மருத்துவமனை,   பினாங்கு தீவிலுள்ள பிரதான சாலைகள் என பல இடங்களில் கால் முட்டி முதல் மார்பளவு வரை வெள்ளம் ஏறியுள்ளது . தஞ்சோங்  பூங்கா போன்ற மலைதொடர்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இதனால் பலரின் வாகனங்கள் மண்ணோடு மண்ணாகியுள்ளன.

அதுமட்டுமின்றி செபெராங் பிறை வட்டாரங்களில் நிபோங் தெபால் தோட்டப்புறப் பகுதிகளான சங்காட் தோட்டம், பைராம் தோட்டம் என இதர தோட்டங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இங்குள்ள மக்கள் பெரும் அவதியுற்று வருகின்றனர் .
மாக்மண்டின் தமிழ்ப்பள்ளி, உட்பட வட்டார பள்ளிகளும் வெள்ளத்தில் பாதிப்படைந்துள்ளன . இந்த இடைவிடாத மழை தொடர்ந்தால் பினாங்கு மாநில  வெள்ள அபாய கட்டத்தை சந்திக்கும் என  கணிக்கப்பட்டிருக்கின்றது.


No comments:

Post a Comment