செபெராங் பிறை-
மாணவர்களிடையே தேசப்பற்றை விதைக்கும் நடவடிக்கைகளில் நாட்டிலுள்ள ஆலயங்கள் சிறந்த பங்கினை ஆற்ற வேண்டும். ஆலயங்கள் தெய்வ வழிப்பாட்டுத்தலமாக இயங்கி வரும் அதேவேளை சமுதாயப்பணியையும் வழங்கிட வேண்டும் என மலேசிய குற்றத்தடுப்பு அறவாரியத்தின் பினாங்கு மாநில இரண்டாம் நிலை துணைத் தலைவர் டத்தோ க.புலவேந்திரன் வலியுறுத்தினார் .
ஸ்ரீ அக்னி முனீஸ்வர் ஆலயம் , மலேசிய இந்து சங்கம் நிபோங் திபால் பேரவை ஏற்பாட்டில் அட்சயப் பாத்திர திறப்பு விழா நிகழ்வு ஆலயத்தில் நடைப்பெற்றது . அந்நிகழ்வில் சிறப்பு பிரமுகராக கலந்துக் கொண்ட அவர் சிறப்புரையாற்றினார் .
இன்றைய சூழ்நிலையில் மாணவர்களிடையே தேசப் பற்று மிக குறைவாகவே காணப்படுகின்றது. இதற்கு ஆரம்பப்பள்ளி மாணவப் பருவத்திலேயே அவர்களுக்கு தேசப்பற்றை உணர்த்தும் நடவடிக்கைகளை பள்ளிகள் மட்டுமல்லாது ஆலயங்களும் அரசு சாரா இயக்கங்களும் சிறந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார் .
பல இன மக்களின் ஒற்றுமைக்குக் கிடைத்த பரிசுதான் நாம் கொண்டாடும் சுதந்திர தினம் .இந்த ஒற்றுமை நம்மிடையே தொடர்ந்து கட்டிக் காக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட அவர், வெள்ளையர்களின் ஆட்சியை ஒரு முடிவுக்கு கொண்டு வர நமது தலைவர்கள் ஒற்றுமையோடு போராடினார்கள்.
இந்த வேளையில் நாடு சுதந்திரம் அடையப் போராடிய துங்கு அப்துல் ரஹ்மான் ,துன் சம்பந்தன் ,துன் டான் செங் லொக் அவர்களோடு சேர்ந்து போராடிய எல்லா இன மக்களுக்கும் நமது வீர வணக்கத்தை செலுத்துவோம் , அவர்கள் துணிச்சலோடு போராடி சுதந்திரத்தை பெற்று தந்திருக்கிறார்கள். அவர்கள் என்றும் போற்றப்படுகின்றவர்கள் .நாம் உயிர் உள்ளவரை அவர்களை நினைவுக்கூறவும் கடமைப்பட்டுள்ளோம்.
அவர்களை போல நாமும் நாட்டுப் பற்று உள்ளவர்களாக இருக்க வேண்டும் நம் நாட்டை நேசிக்க வேண்டும் .நமது வருங்கால சந்ததினர்களுக்கு நாட்டுப் பற்றை ஊட்டவும் நாம் கடமைப்பட்டுள்ளோம். இந்த தேசப் பற்று உணர்வு வளர்ந்து வரும் மூவின மக்களின் ஒற்றுமையும் புத்துணர்ச்சி அளிக்கும் , இந்த ஒற்றுமைதான் வரும் காலங்களில் நாட்டின் சுபிட்சத்தையும் மேம்படுத்தும் எனவும் டத்தோ புலவேந்திரன் தமதுரையில் தெரிவித்துக் கொண்டார் .
இந்நிகழ்வில் சிறுவர்களுக்கு வண்ணம் தீட்டும் போட்டி ,ரங்கோலி கோலம் போட்டி நடைப்பெற்றன.
ஆலயத் தலைவர் ஜோசப் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் மலேசிய இந்து சங்க மாநிலத் தலைவர் முனியாண்டி , மாநில செயலவையினர் , பினாங்கு இந்து அறப்பணி வாரிய நிர்வாகச் செயலாளர் எம் இராமசந்திரன் , மலேசிய இந்து சங்க நிபோங் தெபால் வட்டார த் தலைவர் பி மோகன் , பிரமுகர்கள் , பொது மக்கள் கலந்துக் கொண்டனர் .
No comments:
Post a Comment