கபோரோன்-
தண்ணீர் குடிக்க சென்றபோது மின்சாரம் தாக்கி 9 யானைகள் பலியாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவில் உள்ள டுக்வி என்ற பகுதியில் தான் நிகழ்ந்துள்ளது.
காட்டில் திரிந்த யானைகள் கூட்டம் ஒன்று தண்ணீரைத் தேடி, காட்டை விட்டு வெளியே வந்தன. அப்போது குழாய் ஒன்று உடைந்து அதன் வழியாக வெளியேறி தண்ணீர் அங்கே குளமாக தேங்கிக் கிடந்தது.
தண்ணீரைப் பார்த்த யானைகள், உற்சாகமாக சென்று தண்ணீர் பருகின. தண்ணீர் வெளியேறிய இடம் சிறியதாக இருந்ததால், யானைகள் அனைத்தும் ஒன்றை ஒன்று முட்டிக்கொண்டன.
அப்போது, யானைகளில் ஒன்று, அருகில் இருந்த மின்சார கம்பம் மீது மோதியதால் அது கீழே வீழுந்தது. கீழே சாய்ந்த மின்கம்பிகள் தேங்கியிருந்த தண்ணீரில் விழுந்து மின்சாரம் பாய்ந்துள்ளது.
துரதிஷ்டவசமாக, தண்ணீரில் நின்றுக் கொண்டிருந்த 9 யானைகள் மீது மின்சாரம் பாய்ந்து சுருண்டு விழுந்தன. சில வினாடிகளில் 9 யானைகளும் உயிழிந்துள்ளன. தப்பிய சில யானைகள் மீண்டும் காட்டுக்குள் சென்று விட்டன.
இந்தச் சம்பவம் தொடர்பாக வனப் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். போட்ஸ்வானா நாட்டில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் யானைகள் வாழ்ந்து வருவதாக அனைத்துலக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
No comments:
Post a Comment