Sunday, 17 September 2017

பழி வாங்கும் படலத்தின் உச்சமே சமயப்பள்ளிக்கு தீ வைப்பு- 7 பேர் கைது

- கோலாலம்பூர்-
ஜாலான் டத்தோ கிராமட்டில் உள்ள சமயப்பள்ளியில் நிகழ்ந்த தீச்சம்பவத்திற்கு கருத்து வேறுப்பாட்டால் ஏற்பட்ட பகையே காரணம் என போலீஸ் தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் 21 மாணவர்கள் உட்பட 2 பயிற்சியாளர்களும் பலியாகினர்.

இச்சம்பவம் தொடர்பில் புலன் விசாரணை மேற்கொண்ட போலீஸ் படை,
இதில் தொடர்புடைய ஏழு பேரை கைது செய்தனர்.  11 வயது முதல் 18 வயது வரையிலான இவர்கள் அனைவரும் மேல் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் கருத்துரைத்த கோலாலம்பூர் மாநகர் போலீஸ் தலைவர் டத்தோ அமர் சிங் இஷார் சிங், கூறுகையில், அப்பள்ளிக்கு அருகில் உள்ள மலேசிய இஸ்லாமிய பயனீட்டாளர் சங்கத்தின் ரகசிய கேமராவில் (சிசிடிவி) பதிவான நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
சில நாட்களுக்கு முன்னர்  சமயப்பள்ளி மாணவர்களுக்கும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக மேற்கொள்ளப்பட்ட பழி வாங்கும் செயலின் விளைவாக இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அனைத்து நபர்களும் பள்ளிக்கு தீ வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டுள்ளனரே தவிர யாரையும் கொல்லும் நோக்கத்தில் இதனை மேற்கொள்ளவில்லை.

மேலும், பெட்ரோல்  இரு எரிவாயு கலன்களை பயன்படுத்தியுள்ளதால் தீ வேகமாக பரவியுள்ளது என போலீஸ் விசாரணை தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 7 பேரில் அறுவர் போதைப் பழக்கம்  உடையவர்கள் என்றும் இருவர் மீது குற்றப்பதிவுகள் உள்ளன எனவும் அவர் சொன்னார்.

கைது செய்யப்பட்ட 7 பேரும் ஏழு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் ஏழு பேர் மீதான விசாரணை விரைவில் முடிவடைந்ததும் தேசிய சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைக்கப்படுவர் என அவர் மேலும் தெரிவித்தார்.

சமயப்பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 முதல் 17 வயது வரையிலான 21 மணவர்களும் 25,26 வயதுடைய இரு ஆசிரியர்களும் மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment