ரா.தங்கமணி
ஈப்போ-
6,000 தொழிலாளர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்ட நிலையில் மலேசிய ஏர்லைன்ஸ் பெர்ஹாட் (எம்ஏபி) 16 புதிய போயிங் விமானங்களை கொள்முதல் செய்வதன் உள்நோக்கம் என்ன? என்று சுங்காய் சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன் கேள்வி எழுப்பினார்.
அண்மையில் அமெரிக்காவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்ட பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக், மலேசிய ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் 10 பில்லியன் வெள்ளி மதிப்பிலான விமானங்களை கொள்முதல் செய்யும் என அறிவித்தார்.
ஆனால் இந்த அறிவிப்பு 6,000 தொழிலாளர்களை பணியிலிருந்து நிறுத்துவதற்கு கூறப்பட்ட காரணங்களுக்கு எதிர்மாறாக உள்ளது என அவர் சொன்னார்.
கடந்த 2015ஆம் ஆண்டில் மாஸ் நிறுவனத்தின் ஜெர்மனைச் சேர்ந்த அப்போதைய தலைமைச் செயல் அதிகாரி கிறிஸ்டோபர் முல்லர், மாஸ் நிறுவனம் திவாலாகக்கூடிய சூழலில் உள்ளது என அறிவித்தார்.
இந்த திவால் நிலையிலிருந்து மாஸ் நிறுவனம் மீண்டெழு மூன்று நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
1). ஆட்குறைப்பு : மாஸ் நிறுவனத்தில் பணிபுரியும் 20,000 பணியாளர்களில் 6,000 பேர் ஆட்குறைப்பு செய்யப்படவுள்ளனர். இந்த 6,000 பேர் எவ்வித வேலையும் இல்லாமல் பணிபுரிந்தவர்கள் ஆவர்.
2). விமானங்களை விற்பது: நிறுவனத்திற்குச் சொந்தமான சில விமானங்களை விற்பனை செய்வதன் மூலம் அதனால் ஏற்படக்கூடிய செலவீனங்களை குறைக்கலாம்.
3). லாபமற்ற பயணச் சேவைகள் ரத்து: லாபம் இல்லாத வழிதடங்களுக்கான பயணச் சேவையை ரத்து செய்வது.
இந்த மூன்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதன் வழி 6,000 பேர் 31.8.2015 வரை பணி செய்யலாம் என 27 மே 2015இல் சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
ஆனால் அதே 27 மே 2015இல் ஆட்குறைப்பு செய்யப்பட்ட 6,000 பேர் தற்காலிக குத்தகையாளர்களாக பணியில் அமர்த்தப்படுவதற்காக நோட்டீஸ் வழங்கப்பட்டது.
அந்த குத்தகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1 செப்டம்பர் 20115இல் இருந்து 30 ஜூன் 2016 வரை ஒப்பந்த பணியாளர்களாக வேலையில் அமர்த்தப்பட்டனர்.
நிறுவனம் மிகப் பெரிய இழப்புகளைச் சந்தித்துள்ளது என கூறி 6,000 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்ட நிலையில் தற்போது 10 பில்லியன் வெள்ளி மதிப்பீட்டில் 16 விமானங்களை வாங்குவதற்கான அவசியம் என்ன நேர்ந்தது?
திவால் நிலையிலிருந்து மீள்வதற்காக ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என 6,000 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டதற்கு கூறப்பட்ட காரணமும் தற்போது அரங்கேற்றப்படும் சம்பவமும் எதிர்மாறாக உள்ளது என ஜசெகவின் தொழிலாளர் விவகாரப் பிரிவின் தலைவருமான சிவநேசன் குறிப்பிட்டார்.
இந்த விமானங்களை மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் கொள்முதல் செய்யவில்லை எனவும் இந்த விமானங்கள் வாடகைக்கு பெறப்படுவது பற்றி ஆலோசிக்கப்படுகிறது எனவும் அதன் நடப்பு தலைமைச் செயல் அதிகாரி பீட்டர் பெல்லெவ் கூறியுள்ளார்.
ஆட்குறைப்பு செய்யப்பட்ட 6,000 பணியாளர்களின் விவகாரம் மனிதவள அமைச்சர் ரிச்சர்ட் ராய் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட வேளையில் தற்போது அதனை முழுமையான விசாரணை தொழிலியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு விசாரணையில் தற்போதைய மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் நடவடிக்கைகள் யாவும் நீதிமன்றத்தின் முன் வைக்கப்படும் எனவும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நீதி நிலைநாட்ட போராடுவேன் எனவும் இன்று பேராக் மாநில ஜசெக அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சிவநேசன் கூறினார்.
No comments:
Post a Comment