ஈப்போ-
30 லட்சம் வெள்ளி பிணைப்பணம் கோரி கடத்தப்பட்ட 17 வயது சிறுவனை போலீசார் மீட்டதோடு இச்சம்பவம் தொடர்பில் 12 பேரை கைது செய்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி தைப்பிங்கில் கடத்தப்பட்ட அந்த சிறுவனை மூன்று நாட்களுக்கு பின்னர் (செப்டம்பர் 5ஆம் தேதி) பினாங்கில் போலீசார் மீட்டனர்.
கடத்தப்பட்ட சிறுவனை விடுவிக்க 30 லட்சம் வெள்ளி பிணைப்பணம் கோரிய கடத்தல்காரர்கள், பணம் தராவிடில் சிறுவனை கொன்று விடுவதாக மிரட்டினர்.
கடத்தல்காரர்களுடன் பேரம் பேசிய அச்சிறுவனின் தந்தை 3 லட்சம் வெள்ளி பிணைப்பணம் தருவதற்கு சம்மதல் பெற்றார். இப்பணம் செப்டம்பர் 5ஆம் தேதி ஜோகூர்பாருவில் கடத்தல்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் 12 சந்தேகப் பேர்வழிகள் கைதாகியுள்ளனர் என்று பேராக் மாநில போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஹஸ்னான் ஹசான் தெரிவித்தார்.
பட்டர்வொர்த்தில் 2 சந்தேகப் பேர்வழிகளும் ஜொகூர் பாருவில் 8 சந்தேகப் பேர்வழிகளும் பிடிப்பட்டனர். இதனை அடுத்து பல்வேறு முனைகளில் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கிய போலீசார், அவனுடன் இருந்த 2 சந்தேகப் பேர்வழிகளையும் கைது செய்தனர்.
இவர்கள் 17 வயதுக்கும் 36 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். இவர்களிடமிருந்து 1 லட்சத்து 75 ஆயிரத்து 400 ரிங்கிட் ரொக்கம் மீட்கப்பட்டது. மேலும் மைவி, டோயோட்டா வியோஸ் கார்களையும் யமாஹா எல்சி மோட்டார் சைக்கிளையும் போலீசார் கைப்பற்றினர்.
எட்டு கைத் தொலைப்பேசிகள், சிம் கார்டுகள், முகமூடிகள், கார்ச் சாவிகள் ஆகியவை மீட்கப்பட்டன. இவர்களில் ஐவர் போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்ட நிலையில் இதர 7 பேரின் நிலைகுறித்து பிராசிகியூட்டர் தரப்பு விரைவில் முடிவெடுக்கும் என்றார் அவர்.
No comments:
Post a Comment