ஜாலான் டத்தோ கெராமட்டில் அமைந்துள்ள சமயப்பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் 23 மாணவர்கள் உட்பட இரு பாதுகாவலர்கள் பலியாகியுள்ளதாக மாநகர தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது.
இத்தீச்சம்பத்தில் மேலும் 11 பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை 5.10 மணியளவில் பள்ளியின் இரண்டாவது மாடி தீ பற்றி எரிந்த வேளையில் தீயணைப்புப் படை 5.40 மணியளவில் அவசர அழைப்பைப் பெற்றது.36 வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படை கடுமையான போராட்டங்களுக்குப் பின்னர் 6.15 மணியளவில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பள்ளியின் இரண்டாவது மாடியில் தீப்பற்றியிருக்கலாம் என நம்பப்படுகிறது. ஆனால் தீச்சம்பவத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை.
இது குறித்து ஸ்டார் இணையதளத்திடம் கருத்துரைத்த மாநகர போலீஸ் தலைமை ஆணையர் அமர் சிங் கூறுகையில், தீ ஏற்பட்ட பின் அனைவரும் ஓர் அறையில் சிக்கிக் கொண்டனர். அதனாலேயே பலர் மரணமடைந்துள்ளனர்.
இதன் தொடர்பில் தொடக்கக்கட்ட விசாரணையில் எவ்வித தீய நோக்கமும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. ஆயினும் உண்மை காரணத்தை தீயணைப்புத் துறை முழுமையாக ஆராயும் என அவர் சொன்னார்.
No comments:
Post a Comment