சென்னை-
தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து இன்று அதிரடி உத்தரவிட்டுள்ளார் சபாநாயகர் தனபால். டி.டி.வி. தினகரன் ஆதரவு ஏம்.எல்.ஏக்களான இந்த 18 பேரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இழந்து விட்டதாக 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தனித்தனியாக கடிதம் வழங்கினர்.
இதனால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று அரசு கொறடா சபாநாயருக்கு பரிந்துரை செய்தார். இது தொடர்பில் நேரில் விளக்கம் அளிக்குமாறு சபாநாயகர் நோட்டீஸ் அளித்தார். இதில் எம்எல்ஏ ஜக்கையன் தவிர 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். டிடிவி தினகரன் அணியில் இருந்த ஜக்கையன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்ததால் அவர் நீக்கப்படுவதிலிருந்து தப்பித்தார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள 18 பேரும் 18.9.2017 முதல் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்து விட்டனர் என சபாநாயகர் தனபால் சார்பில் சட்டப்பேரவை செயலாளர் பூபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு, இந்திய அரசமைப்புச் சட்டம், பத்தாவது அட்டவணையின்படி ஏற்படுத்தப்பட்டுள்ள 1986-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களின் (கட்சி மாறுதல் காரணம் கொண்டு தகுதியின்மையாக்குதல்) விதிகளின் கீழ், பேரவைத் தலைவர், சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களை 18.9.2017 முதல் தகுதி நீக்கம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment