ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலை முன்னிட்டு மலேசிய சோசலிச கட்சி (பிஎஸ்எம்) '14ஆவது பொதுத் தேர்த்லை நோக்கி' எனும் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது.
14ஆவது பொதுத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் வேளையில் இந்த பிரச்சார நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக பிஎஸ்எம் கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் எஸ்.அருட்செல்வம் தெரிவித்தார்.
கடந்த 2ஆம் தேதி முதல் அக்டோபர் 21ஆம் தேதி வரை 16 இடங்களில் இந்த பிரச்சாரத்தை பிஎஸ்எம் கட்சி மேற்கொள்ளவுள்ளது. சுங்கை சிப்புடில் தொடங்கப்பட்டுள்ள இந்த பிரச்சாரம், ஜெலாப்பாங், புந்தோங், மெங்களம்பு, துரோனோ, மாலிம் நாவார், கேமரன் மலை, ஜெலாய், கோத்தா டாமன்சாரா, சுபாங், ஶ்ரீ மூடா, உலு லங்காட், செமிஞ்சே, கிள்ளான் பள்ளதாக்கு, கோத்தா லாமா, உலு சிலாங்கூர் ஆகிய பகுதிகளில் இந்த பிரச்சாரம் முன்னெடுக்கப்படவுள்ளது.
வரும் பொதுத் தேர்தலில் இடதுசாரி அரசியல் மக்களின் தேர்வாக அமைந்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் சொன்னார்.
மக்களின் சேவையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அரசியல் மேற்கொண்டு பிஎஸ்எம் கட்சி, மக்களுக்கு சேவையாற்றக்கூடியவர்களை மட்டுமே வேட்பாளர்களாக களமிறக்குகிறது. வான்குடை வேட்பாளர்கள் என்ற பேச்சுக்கே இக்கட்சியில் இடமில்லை என பிஎஸ்எம் கட்சியின் துணைத் தலைவர் சரஸ்வதி தெரிவித்தார்.
பிஎஸ்எம் கட்சி வரும் பொதுத் தேர்தலுக்கு தயார் நிலையில் உள்ளது. இத்தேர்தலில் எத்தகைய வேட்பாளரையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். மக்கள் சேவகர்களையே வேட்பாளர்களாக களமிறக்குகிறோம் என சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினரும் பிஎஸ்எம் மத்திய செயலவை உறுப்பினருமான டாக்டர் மைக்கல் ஜெயகுமார் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் பிஎஸ்எம் கட்சியின் சுங்கை சிப்புட் தலைவர் அக்ஸ்டியன், முன்னாள் தலைவர் சுகுமாறன் உட்பட உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment