Friday, 1 September 2017

செங்குருதி சிந்தி கிடைத்த சுதந்திரம்; அதன் சுவடுகள் மாறக்கூடாது

புனிதா சுகுமாறன்

'மலேசியா' சுதந்திரமடைந்து  60ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. நாட்டின் சுதந்திரக் கொண்டாட்டம் கோலாகலமாக அமைந்திருந்தாலும் சுதந்திரம் குறித்து பல்வேறு கேள்விகள் மக்களிடையே எழுந்து வருகின்றன. சுதந்திரம் கிடைத்தும் அதனை  முழுமையாக அனுபவிக்கிறோமா?, அதன் உண்மையை அறிந்து வாழ்கிறோமா?, 'சுதந்திரம்' அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்கியுள்ளதா? போன்ற பல்வேறு கேள்விகள் பலரிடத்தில் எழுந்திருக்கலாம்.
ஆனால், அந்நியவர்கள் ஆட்சி பிடிக்குள் இருந்து நாடு விடுதலை அடைந்ததற்கு பலர் சிந்திய குருதியின் சுவடுகள் மட்டுமே சுதந்திர வேட்கையாக இன்றளவும் கருதப்படுகிறது. இதில் 'சுதந்திரம்' குறித்து பல்வேறு தரப்பினர் கொண்டுள்ள எண்ணங்களை 'பாரதம்' மின்னியல் ஊடகம் பதிவு  செய்கிறது.
'நாடுதான் சுதந்திரமடைந்தது; மக்களுக்கு இல்லை'-  ஏ.பி.லோகரூபன்

மலேசியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளை கடந்து விட்டது. ஆனால் மக்கள் தான் இன்னமும் சுதந்திரத்தை அனுபவிக்காமல் இருக்கிறோம்.  நாடு நல்ல நாடுதான். ஆனால் தனக்குரிய தலைவரை தேர்வு செய்வதில் செய்கின்ற தவறு நமக்கான சுதந்திரத்தையே கேள்விக்குறியாக்குகிறது.
தலைவர்கள் கொடுக்கும் அரிசி, பருப்பு, பணத்திற்காக நாம் விலை போகிறோம். இதுவும் ஒரு வகையில் அடிமைத்தனம் தான். ஆதலால் சுதந்திரம் என்பது வெறும் வாய்வார்த்தையிலேயே உள்ளது.
வீரர்களின் தியாகங்கள் சிதைக்கப்படக்கூடாது - திவ்யா
நாடு சுதந்திரம் அடைய நமது வீரர்கள் சிந்திய குருதியும், போராட்டமும் சிதைக்கப்படக்கூடாது. மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டும் என்பதை மட்டுமே இலக்காகக் கொண்டு வீரர்கள் போராடினர். ஆனால் இன்று மக்களை அடிமைப்படுத்தி சொகுசான வாழ்க்கை வாழும் தலைவர்களே நிரம்பிக் கிடக்கின்றனர். மக்களுக்காக குரல் கொடுக்கும் தலைவர்கள் தலைமையேற்கும் வரை சுதந்திரம் வெறும் 'கானல் நீர்'தான்.
'ஒரே மலேசியா' கோட்பாடு எங்கே? - கேரி
மலேசியா பொன் விளையும் பூமிதான். ஆனால் 60ஆம் ஆண்டு சுதந்திர தினம் என கூறி கொள்வது பெருமையல்ல. அனைத்து மக்களுக்கும் சம ரீதியிலான உரிமை வழங்கப்படுவதே சுதந்திரமாகும். இந்தியர்களை ஒதுக்கி விட்டு நாட்டின் மேம்பாட்டை காட்ட முடியாது. 'ஒரே மலேசியா' முழக்கம் அனைவருக்குமான் பொதுவுடைமையாக இருக்க வேண்டும். அதுதான் உண்மையான சுதந்திரம்.
சுதந்திரம்' இன்னமும் உணர முடியவில்லை - சுகுமாறன்
ஆங்கிலேயர்களின்  கையில் அடிமைகளாக இருந்ததுபோலவே இன்று சில தலைவர்களிடத்தில் அடிமைத்தனம் நீடிக்கிறது. கேள்வி கேட்டால் பதவி போய்விடுமோ என்ற பயத்தில் உலாவுகின்றனர் இன்றைய தலைவர்கள். இதுவே நாடு சுதந்திரம் இல்லாமல் அல்லல்படும் நிலையை பிரதிபலிக்கிறது.
மக்களுக்கில்லை சுதந்திரம் - எம்ஜிஆர் மூர்த்தி
நாடு சுதந்திரம் அடைந்து விட்டது. ஆனால் மக்களுக்குதான் இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை.
ஒற்றுமையை பலபடுத்தியுள்ள நாடு - சண்முகம் கிருஷ்ணன்
மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மலேசியா வல்லமை பெற்ற நாடுதான். நமது நாட்டு தலைவர்கள் சிறப்பான தலைமைத்துவம் என்பதில் பெருமை கொள்வோம். அனைத்து இனங்களையும் ஒரு சேர பயணிக்கும் வல்லமையை நாம் பெற்றுள்ளோம்.
நாட்டு மக்களிடையே ஒற்றுமையை பலபடுத்தி 60ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்வதில் பெருமை கொள்வோம்.
வளர்ச்சி பாதையில் 'மலேசியா' - லட்சுமி முத்து
1957ஆம் ஆண்டு சுதந்திரமடைந்த நமது நாடு 60ஆம் ஆண்டில் காலடி வைத்துள்ளது. நாடு முன்பு இருந்ததை விட இப்போது பல மடங்கு முன்னேற்றம் கண்டுள்ளது. இந்நாட்டில் பிறந்ததை எண்ணி பெருமை கொள்கிறேன். நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமை கடைபிடித்து  நாட்டின் மேம்பாட்டுக்கு துணை நிற்க வேண்டும்.
ஒற்றுமையே நமது பலம் - ப.தயாளன்
ஒற்றுமையே நமது பலம், ஒற்றுமை இல்லாவிட்டால் நாம் எதுவுமே சாதிக்க முடியாது. நாட்டின் 60ஆவது சுதந்திர தினத்தை மகிழ்ச்சி பொங்க கொண்டாடி மகிழ்வோம்.
'மலேசியன்' பெருமை கொள்வோம் - ஜெகதீஸ் ஜெயராம்
60ஆம் ஆண்டு சுதந்திர தினம் நமக்கான விடிவெள்ளியாக கருதுவோம். இந்நாட்டில் பிறந்ததற்கு உண்மையிலேயே பெருமை கொள்கிறேன்.

நாட்டின் வளர்ச்சியில் தடத்தை பதிப்போம் - திருமதி லட்சுமி நாயர்
பச்சை பசுமை பூமியாய், பொன் விளையும் நிலமாய் திகழ்வது நமது தாயக நாடு. ரத்தம் சிந்தி பலரது உயிர் தியாகங்களில் கிடைத்த சுதந்திரற்கு இன்று 60 வயது. குறை கூறல்களை மட்டும் முன்வைக்காமல் நாட்டின் மேம்பாட்டில் நமது தடத்தை பதிவு செய்வோம்.
அனைவருக்குமான நாடு 'மலேசியா' - கார்த்திகேயன்
1957இல் பெறப்பட்ட சுதந்திரம் எளிதாக பெற்றிடவில்லை. மாறாக பல்வேறு போராட்டங்களை முன்னிறுத்தி பெறப்பட்டது. போராட்டத்தின்  மூலம் பெறப்பட்ட சுதந்திரம் யாராலும் சிதைக்கப்படக்கூடாது. அனைத்து மக்களுக்குமான நாடுதான் மலேசியா.
பேதங்கள் இல்லா சுதந்திரம்- ஜெகதீஸ்வரி
நமது வீரர்கள் கஷ்டப்பட்டு பெற்று தந்த சுதந்திரத்தை ஒவ்வொரு மலேசியனும் எவ்வித பேதமும் இன்றி 'சுதந்திர நாளை' ஒன்றாக கொண்டாடுவோம்.
சம உரிமை வழங்கப்பட வேண்டும்- திருமதி உமாதேவி
பாகுபாடு இல்லாமல் அனைத்து இனத்தவர்களுக்குமான நாடாக 'மலேசியா' திகழ வேண்டும். 'கோட்டா' முறை இல்லாமல் அனைவருக்கும் சரிசமமான உரிமை நிலைநிறுத்தப்பட வேண்டும். அரசாங்கப் பணி முதல் நாட்டை நிர்வகிக்கும் தலைமைத்துவம் வரையில் இந்த சம உரிமை வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் 'மலேசியா' அனைவருக்குமான நாடாக விளங்க முடியும்.
வேற்றுமை துறந்த மலேசியர்கள் - கார்த்திக் சந்திரன்
தொண்டர்கள் தலைவர்களாக உருமாறிய நாள்...
இறந்த கால ஆதிக்கம் மறைந்தது...
எதிர்கால ஆதிக்கத்திற்கு வழிவிட்டது....
வேற்றுமை துறந்த மலேசியர்கள்...
ஒன்றாக இருக்கும் ஒரே நாள்...
அதுவே இந்த திருநாள் நமது விடுதலை நாள்...
'மலேசியர்' என்ற உணர்வு தேவை- ஜெயசீலன்
என் நாடு மலைத்திரு நாடு, என் தேசம் மலேசியா
மலேசியர் என்ற உணர்வு கொண்டு, தேசிய கீதம் பாட வேண்டும்,
தேசிய நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள வேண்டும்
நாட்டு வீரர்களை பாராட்டும்போது 'மலேசியர்' என்று பாராட்ட வேண்டும்
'இந்தியர்' என்று அல்ல...
உரிமைகளை இங்கே கேட்டு விட்டு 'இந்தியர்' என கூறினால் நியாயமா?
நம்மிடையே மனமாற்றம் தேவை
நம் உரிமைகளை நிலைநிறுத்திக் கொள்ள
'மலேசியர்' என்ற உணர்வு நம்மிடையே மேலோங்க வேண்டும்.
நமக்கில்லை சுதந்திரம் - ஆர்.ஆர்.ஆனந்தி
தேசிய தினத்தை அனைவரும் ஒருமனதாக கொண்டாட வேண்டும். நாட்டுக்கு மட்டுமே சுதந்திரம் கிடைத்தது; ஆனால் நமக்கில்லை.

No comments:

Post a Comment