Saturday, 5 August 2017

மைபிபிபியை சமாளிக்கவே ஒருங்கிணைப்பாளர் நியமனமா?



கேமரன் மலை-
கேமரன் மலை தொகுதியில் களமிறங்கி சேவையாற்றும் மைபிபிபி கட்சியை சமாளிக்கவே மஇகா ஒருங்கிணைப்பாளர் பதவி நியமனம் செய்யப்பட்டுள்ளது என அரசியல் அறிந்தவர்கள் கருதுகின்றனர்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு களமிறங்கி சேவையாற்றும் மைபிபிபி கட்சியின்  தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ், வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் இத்தொகுதியில் போட்டியிடக்கூடும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2004ஆம் ஆண்டு இந்த நாடாளுமன்றத் தொகுதியில் முதன்முதலாக போட்டியிட்ட டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி, 2008ஆம் ஆண்டும் இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2013ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மஇகாவின் அப்போதைய தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஜி.பழனிவேல் இங்கு போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2014ஆம் ஆண்டு மஇகாவில் நிலவில் உட்கட்சி பூசலை தொடர்ந்து மஇகாவிலிருந்து நீக்கப்பட்டார் டத்தோஶ்ரீ பழனிவேல். அதனைத் தொடர்ந்து சுயேட்சை தொகுதியாக கருதப்பட்ட கேமரன் மலையில் டான்ஶ்ரீ கேவியஸ் களமிறங்கி அதிரடியான சேவைகளை மேற்கொண்டு வருகின்றார்.

இதனால் இத்தொகுதியில் டான்ஶ்ரீ கேவியசே வேட்பாளராக களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் தற்போது மஇகா தனது பிரதிநிதியாக மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சி.சிவராஜை அத்தொகுதியின் ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்தது.

கேமரன் மலை தொகுதியை மஇகா மீண்டும் தக்கவைத்துக் கொள்வதோடு அங்கு மைபிபிபி போட்டியிடா வண்ணம் தடுப்பதற்காகவும் ஒருங்கிணைப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பலர் பரவலாக பேசுகின்றனர்.

இந்த ஒருங்கிணைப்பாளர் நியமனம் காலம் கடந்து செய்யப்பட்டாலும் ஆக்ககரமான திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும் என அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment