சுங்கை சிப்புட்-
அரசு சார்புடைய நிறுவங்களின் சேவைகளையும் நடவடிக்கைகளையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மலேசிய மக்கள் சிந்தனை மேம்பாட்டு இயக்கம் (கர்மா) ஏற்பாட்டில் அரசு சார்பு நிறுவனங்களுடன் பொதுமக்கள் எனும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
இங்குள்ள கோலகங்சார் மாநகர் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வை லிந்தாங் சட்டமன்ற உறுப்பினரும் சுங்கை சிப்புட் தேசிய முன்னணித் தலைவருமான டத்தோ சூல்கிப்ளி ஹாஜி ஹருண் அதிகாரபூர்வமாக தொடக்கி வைத்தார்.
அரசு சார்ந்த நிறுவனங்கள் மேற்கொள்ளும் பல்வேறு நடவடிக்கைகளை மக்கள் அறிந்திட வேண்டும் எனும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டது என கர்மா இயக்கத்தின் தலைவர் வின்சென்ட் டேவிட் குறிப்பிட்டார். சேவைகளை வழங்குவது மட்டுமல்லாது மக்கள் விழிப்புணர்வு அடையும் வகையிலே இந்நிகழ்வு நடத்தப்படுகிறது என்றார் அவர்.
அரசு சார்புடைய நிறுவனங்கள் மக்களின் மேம்பாட்டுக்காக மேற்கொள்ளும் நடவடிக்கையை பொதுமக்கள் பலர் அறிந்திருக்கவில்லை. இதனாலேயே தாம் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு முறையான தீர்வு காண தெரியாமல் பலர் அல்லல்படுகின்றனர்.
இவ்வேளையில் இத்தகைய நிகழ்ச்சியை மேற்கொண்ட கர்மா இயக்கத்தினரை வெகுவாக பாராட்டுவதாக டத்தோ சூல்கிப்ளி கூறினார்.
இந்நிகழ்வில் தீயணைப்புப் படை, சமூகநல இலாகா, சுங்கை சிப்புட் மருத்துவமனை, ஜேபிஜே, போலீஸ் துறை, சுங்கை சிப்புட் மருத்துவமனை உட்பட பல்வேறு இலாகாக்களின் மையங்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டன.
சுங்கை சிப்புட் தொகுதி மஇகா தலைவர் மு.இளங்கோவன், துணைத் தலைவர் அஜாட் கமாலுடின், செயலாளர் கி.மணிமாறன், உட்பட மஇகா கிளைத் தலைவர்களும் பொது இயக்கங்களின் பிரதிநிதிகளும் பொதுமக்களும் இந்நிகழ்வில் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment