Wednesday, 30 August 2017

தமிழ்ப்பள்ளிகளில் தேசியக் கொடிகள் அன்பளிப்பு

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-

நாட்டின் 60ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வகையில் பள்ளி மாணவர்களுக்கு தேசியக் கொடி வழங்கும் நிகழ்வு அண்மையில் இங்கு நடைபெற்றது.

சுங்கை சிப்புட் வட்டாரத்திலுள்ள  டோவன்பி தோட்டத் தமிழ்ப்பள்ளி, மகாத்மா காந்தி கலாசாலை ஆகிய இரு தமிழ்ப்பள்ளிகளுக்கு மஇகாவின் கெளரவச் செயலாளர் டத்தோ அ.சக்திவேல் நேரடி வருகை புரிந்து தேசியக் கொடிகளை வழங்கினார்.
இன்றைய மாணவர்கள்தான் நாளைய தலைவர்கள். அதற்கேற்ப அவர்களிடையே தேசப்பற்றை விதைக்க வேண்டிய அவசியமானதாகும். அதனடிப்படையிலேயே தேசியக் கொடிகளை வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக டத்தோ சக்திவேல் குறிப்பிட்டார்.

தேசிய தினக் கொண்டாட்டம் ஆடம்பரமாகவும் ஆர்ப்பாட்டமாகவும் கொண்டாடப்படாமல் இதுபோன்ற எளிய நடவடிக்கைகளின் மூலமாகவும் தேசப் பற்றை விதைக்க முடியும் என்றார் அவர்.

இவ்வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட தேசியக் கொடிகளை வழங்கும் நிகழ்வு எங்கோர் தமிழ்ப்பள்ளி, சாலாக் தமிழ்ப்பள்ளி, சுங்கை ரேலா தமிழ்ப்பள்ளி, எல்பில் தோட்டத் தமிழ்ப்பள்ளி, துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி ஆகியவற்றுக்கும் தேசியக் கொடிகள் வழங்கப்பட்டன.
இதனிடையே, பேராக் மாநில அரசாங்கத்தின் சார்பில் மாநில மந்திரி பெசாரின்  ஆலோசகர் டத்தோ வ.இளங்கோ வழங்கிய புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் சுங்கை சிப்புட் தொகுதி மஇகா தலைவர் இளங்கோவன் முத்து, துணைத் தலைவர் அஜாட் கமாலுடின், தலைமையசிரியர்கள் வீரமுத்து, திருமதி சாந்தகுமாரி, கவுன்சிலர் லெட்சுமணன் உட்பட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment