Tuesday, 29 August 2017

'சிதம்பர'த்தில் ஒன்றாக வந்தோம்; இன்று சிதறி கிடக்கின்றோம்

- ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
காடாக கிடந்த மலையக நாட்டை திருத்தி செல்வம் கொழிக்கும் நாடாக உருமாற்றிய பெருமை இந்தியர்களையும் சேரும். இந்நாட்டை திருத்துவதற்காக 'சிதம்பரம்' கப்பலில் வந்த நாம் (இந்தியர்கள்) இன்று பல பிரிவுகளாக சிதறிக் கிடக்கின்றோம் என்பது வேதனையான ஒன்றாகும் என சுங்கை சிப்புட் தொகுதி மஇகா செயலாளர் கி.மணிமாறன் வலியுறுத்தினார்.

நாட்டின் 60ஆம் ஆண்டு சுதந்திர தின விழா இன்னும் சில நாட்களில் கொண்டாடப்படவுள்ளது. இந்த சுதந்திர நாளில் ஒற்றுமையை பற்றி பேசிக் கொண்டிருக்கும் நாம் சிதறி கிடக்கின்றோம் என்பதை உணர வேண்டும்.
பல்வேறு அரசியல் கட்சிகளாகவும், பொது இயக்கங்களாகவும் சிதறி கிடக்கின்ற நாம், நமது வரலாற்றை அறிந்து வைத்திருப்பது மிக முக்கியமானதாகும்.
ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் கிடந்த மலையக நாட்டை  வளம் கொழிக்கும் நாடாக உருமாற்ற வேண்டி அன்று 'சிதம்பரம்' கப்பலில் நமது முன்னோர்கள் ஒன்றாக  வந்திறங்கினர்.

அன்று உழைப்பதற்காக வரும்போது யாரிடமும் எவ்வித பிரிவினைவாதமும் இல்லை. ஒன்றாக இருந்து காடாக கிடந்த நாட்டை திருத்தினர். ஒற்றுமையாக இருந்ததன் விளைவாக ஒரு 'காடு' நாடாக உருவெடுத்தது.

இந்த நாட்டை உருவாக்குவதில் நமது முன்னோர்கள் சிந்திய ரத்தத்தின் விளைவுதான் இன்று நாம் அனுபவிக்கும் குடியுரிமையும் சலுகைகளும். ஆனால் அந்த முன்னோர்கள் கட்டிக் காத்த ஒற்றுமையை மறந்து இன்று ஆளுக்கொரு திசையாக பயணித்துக் கொ ண்டிருக்கிறோம் என இங்கு நடைபெற்ற 60ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் உரையாற்றுகையில் மணிமாறன் தெரிவித்தார்.
நமது வாழ்வாதாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள அரசியல் பலம் மிக முக்கியமானதாகும். ஆனால் அரசியல் ரீதியில் பல்வேறு கூறுகளாக பிரிந்து சிதறி போயுள்ளோம். அதே போன்று பொது இயக்கங்களின் வாயிலாகவும் நம்மிடையேயான பிரிவினை வெளிச்சம் போட்டு  காட்டியுள்ளது.

சிதறி கிடக்கின்ற நாம் மீண்டும் ஒற்றுமையை வலுபடுத்தும் வகையில் ஒற்றுமையை கடைபிடிக்க வேண்டும். நாட்டின் 60ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடும் வேளையில் அடுத்தத் தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்ல வேண்டிய நல்லவற்றை இப்போதே விதைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
சுங்கை குருடா இளைஞர் இயக்கம், சுங்கை சிப்புட் இளைஞர் மன்றம், மலேசிய தமிழ் மணிமன்றத்தின் சுங்கை சிப்புட் கிளை, சுங்கை சிப்புட் மஇகா கிளைகள் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த சுதந்திர தின விழா கொண்டாட்டம் இங்குள்ள கோலகங்சார் மாநகர் மன்ற மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வை சுங்கை சிப்புட் தொகுதி மஇகா தலைவர் இளங்கோவன் முத்து, அமுசு.பெ.விவேகானந்தன் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில் போலீஸ் துறையில் ஓசிபிடியாக பணியாற்றிய டத்தோ தம்பி பிள்ளை, அமரர் அமுசு.பெரியசாமி பிள்ளை உட்பட பல்வேறு தரப்பினருக்கு 'சுதந்திர திலகம்' (Tokoh Merdeka) விருதுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் சுங்கை சிப்புட் வட்டார துணை ஓசிபிடி அ.பரமேஸ்வரன், டத்தோ டாக்டர் ஏ.கே.சக்திவேல், கோலகங்சார் நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரி ராமசந்திரன், சுங்கை சிப்புட் மஇகா மகளிர் பிரிவுத் தலைவி விஜயகுமாரி உட்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment