Wednesday, 23 August 2017

செனட்டர் பதவியை விட தொகுதியை வென்றெடுப்பதே முக்கியம்

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை மீட்டெடுக்க வேண்டும் என்பதே நமது மிக முக்கியமான இலக்காக இருக்க வேண்டும் என மஇகாவின் தலைமைச் செயலாளர் டத்தோ அ.சக்திவேல் தெரிவித்தார்.

செனட்டர் பதவியை பெறுவது முக்கியமல்ல. அதை விட நமது நாடாளுமன்றத் தொகுதியை  வென்றெடுப்பதே நமக்கு முக்கியம்.
கடந்த இரு தேர்தல்களில் இத்தொகுதி எதிர்க்கட்சி வசமாகியுள்ள நிலையில் வரும் பொதுத் தேர்தலில் மீட்டெடுத்து நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் மிளிர வேண்டும்.
அதை விடுத்து நியமனப் பதவியான  செனட்டர் பதவியை கேட்பது இத்தருணத்திற்கு உகந்தது அல்ல என இங்குள்ள தேசிய முன்னணி அலுவலகத்தில் தொகுதி மஇகா கிளைத் தலைவர்களைச் சந்தித்தப்பின் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தக்க வைத்துக் கொள்வதே மிக சிறப்பானதாகும். ஏனெனில் இது கட்சியின் மிக முக்கியமான தொகுதியாகும். இதனை மீட்டெடுப்பதே நமது லட்சியமாக அமைய வேண்டும்.
கடந்த இரு தவணைகளாக இத்தொகுதி  எதிர்க்கட்சி வசமுள்ள நிலையில் மக்களுக்கு சேவைகளை செய்வதில் தொகுதி மஇகாவின் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். அதனை களையும் வகையில் இங்குள்ள தொகுதி மஇகாவினருக்கு செனட்டர் போன்ற நியமனப் பதவிகள் வழங்கப்பட  வேண்டும் என்ற கோரிக்கை அவ்வப்போது எழுவதுண்டு. இதனை  முன்னிறுத்தி கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் டத்தோ சக்திவேல் இவ்வாறு கூறினார்.

இதற்கு முன்னதாக நாட்டின் 60ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இங்குள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தேசியக் கொடியும் பேராக் மாநில அரசின் ஏற்பாட்டிலான புத்தகங்களும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் தொகுதி மஇகா தலைவர் மு.இளங்கோ, துணைத் தலைவர் அஜாட் கமாலுடின் உட்பட தொகுதி மஇகா செயலவையினரும் கிளைத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment