Wednesday, 16 August 2017

அம்பார் தெனாங் வீடமைப்புத் திட்டம்: பிரதமர் நஜிப் தொடக்கி வைத்தார்

சிப்பாங்-
நாட்டின்  நிர்வாக செயலகமான புத்ராஜெயா உருவாக்கத்திற்காக தங்களது தோட்டங்களை விட்டுக் கொடுத்த முன்னாள் தோட்டத் தொழிலாளர்களுக்கான புதிய வீடமைப்புத் திட்டத்தை பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

கடந்த 1996ஆம் ஆண்டு புத்ராஜெயா உருவாக்கத்திற்காக பெராங் பெசார், மெடிங்கிலி, காலவே, செட்ஜிலி ஆகிய தோட்டங்கள் கையகப்படுத்தப்பட்டன. அப்போதைய காலகட்டத்தில் அங்கு குடியிருந்த 400 தொழிலாளர் குடும்பங்கள் தாமான் பெர்மாத்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடியேற்றப்பட்டனர்.

சுவரில் விரிசல்கள் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான சூழலை எதிர்கொண்ட இந்த குடியிருப்பில் வசிக்க முடியாது, எங்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டதுபோல் தரை வீடு நிர்மாணிப்பட வேண்டும் என கூடாரம் அமைத்து பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அந்த போராட்டத்தின் விளைவாக டெங்கில், அம்பார் தெனாங் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் வீடமைப்புத் திட்டத்தை (பிபிஆர்) டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

400 வீடுகளை உள்ளடக்கிய இந்த வீடமைப்புத் திட்டம் 2019ஆம் ஆண்டு ஜுலை மாதம் நிறைவு செய்யப்படும் எனவும் நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்ட மக்களை ஆளும் அரசாங்கம் என்றும் கைவிடாது என்பதற்கு அத்தாட்சியாக இத்திட்டம் அமைந்துள்ளது எனவும் டத்தோஶ்ரீ நஜிப் தெரிவித்தார்.

150,000 வெள்ளி மதிப்புடைய ஒவ்வொரு வீடும் இங்குள்ள மக்களுக்கு 20,000 வெள்ளிக்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. ஏனைய தொகையை அரசாங்கமே ஏற்று கொண்டுள்ளது என்றார் அவர்.

No comments:

Post a Comment