பேராக்
மாநிலத்திலுள்ள மஇகா தொகுதிகளை வென்றெடுப்பதைமே மாநில மஇகா இலக்காக கொண்டுள்ளது.
அதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை கண்டு பயந்துள்ள எதிர்க்கட்சியின்
பல்வேறு குற்றச்சாட்டுல்களை சுமத்தி 'மலிவு அரசியல்'
செய்து கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியே 'வாக்களிக்கும் தொகுதி இடமாற்றம்' செய்யப்பட்ட
விவகாரத்தை பூதாகரமாக மாற்றியது என பேராக் மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகர் டத்தோ
வ.இளங்கோ கருத்து தெரிவித்தார்.
'பாரதம்' மின்னியல் ஊடகத்தின் 'ஹை -டீ வித் லீடர்ஸ்' நிகழ்ச்சியில் சில கருத்துகளை
பகிர்ந்து கொள்கிறார் டத்தோ வ.இளங்கோ.
கே: பேராக் மாநில மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகராக தாங்கள்
எதிர்நோக்கும் சவால்கள்?
ப: மாநில இந்தியர் விவகாரங்களுக்கான
ஆலோசகராக பதவி வகிக்கும் நான் எதிர்நோக்கும் சவால்கள் சாதாரணமானதல்ல. ஏனெனில் 320,000 இந்தியர்கள் உள்ள இம்மாநிலத்தில் உள்ள பிரச்சினைகள் அதிகமாக உள்ளன.
இங்கு
135 தமிழ்ப்பள்ளிகளும், 700க்கும் மேற்பட்ட ஆலயங்களும்
2,000க்கும் அதிகமான பொது இயக்கங்களும் உள்ளன. இந்திய சமுதாயத்தைச் சார்ந்துள்ள
இவற்றின் மேம்பாட்டையும் அவற்றினூடே இந்திய சமுதாயத்தின் வளர்ச்சியையும் உறுதி செய்ய வேண்டிய மிகப் பெரிய கடப்பாடு எனக்கு உண்டு.
கே: இம்மாநிலத்திலுள்ள இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்ன?
ப: இங்குள்ள இந்தியர்களை சுற்றி
சார்ந்திருப்பது குடியிருப்பு நிலப் பிரச்சினைகள் தான் மிக முக்கியமானவை.
குறிப்பாக அதிகமான இந்தியர்கள் வாழ்கின்ற புந்தோங் பகுதியில் நிலவுவது நிலப்
பிரச்சினைதான். பல ஆண்டுகளாக அங்கு நிலவி வந்த நிலப் பிரச்சினைக்கு தீர்வு காணும்
வகையில் 170 குடும்பங்களுக்கு ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
அதோடு
ஈப்போ மாநகர் மன்றம் புந்தோங் பகுதியில் நிர்மாணிக்கும் அடுக்குமாடி
குடியிருப்பில் சில இந்தியக் குடும்பங்கள்
வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன.
மேலும், வேலை வாய்ப்புகளும் இங்கு நிலவி வரும்
பிரச்சினையாகும். அரசு, தனியார் துறைகளில் நிலவி வரும் வேலை
வாய்ப்பின்மை பிரச்சினையையும் களைந்து வருகிறோம்.
நாட்டிலேயே அதிகமான தமிழ்ப்பள்ளிகள் உள்ள
மாநிலமாக திகழ்வது பேராக் மாநிலம்தான். இங்குதான் 135
தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. பள்ளிகளின் இணைக் கட்டடம், புதிய
பள்ளி, பள்ளி இடமாற்றம், மாணவர்களின்
கல்வி மேம்பாடு என பல்வேறு பிரச்சினைகளை சமாளித்து வருகின்றோம். இந்தியர்களின்
விவகாரங்களை மந்திரி பெசாரின் கவனத்திற்குக் கொண்டு சென்று அவற்றுக்கு தீர்வு
காண்பதில் ஒருபோதும் பின் தங்கியதில்லை. சில சமயங்களின் ஒருசில பிரச்சினைகளுக்கு
தீர்வு காண்பதில் காலதாமதம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அவற்றுக்கான தீர்வுகளை
காண்பதில் நாம் ஒருபோதும் பின்தங்கியதில்லை.
கே: மாநில மஇகா தலைவர் எனும் ரீதியில்
14ஆவது பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் என்ன?
ப: நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் எந்நேரத்திலும் நடைபெறலாம் என்ற நிலையில் அதற்கான
ஆயத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மஇகா போட்டியிடும்
தொகுதிகளில் ஆக்கப்பூர்வ தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த
இரு தேர்தல்களில் மாநில சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட மஇகா வேட்பாளர்கள்
தோல்வி அடைந்துள்ளனர். இதனால் மாநில அரசில் நமது பிரதிநிதித்துவம் இல்லாத நிலை
ஏற்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ளும்
சூழலில் வரும் பொதுத் தேர்தலில்
வெற்றி வாய்ப்பை இழந்த தொகுதிகளில் மீண்டும் வெற்றியை நிலைநாட்ட
பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.
குறிப்பாக, ஊத்தான் மெலிந்தாங், சுங்காய் சட்டமன்றத் தொகுதிகளில் மஇகா தீவிரமாக
செயலாற்றி வருகிறது. இங்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமான சூழலில் உள்ளது. புந்தோங்
சட்டமன்றத் தொகுதியில் வெற்றி வாய்ப்பு நிலைநாட்டுவதற்கு அங்கு முயற்சித்து
வருகிறோம். இந்தியர்களின் பெரும்பான்மை வாக்குகளை கவர்ந்திழுக்க மஇகா தலைவர்கள்
மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கே: ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் உங்கள் மீது
சுமத்தி வரும் குற்றச்சாட்டுகள் பற்றி?
ப:
ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் கேசவன் என் மீது சுமத்தி வரும்
குற்றச்சாட்டுகள் அடிப்படையில்லாதது ஆகும். தொகுதி இடமாற்றம் என்பது மலேசிய
தேர்தல் ஆணையத்தின் சட்டத்திற்கு உட்பட்டதாகும். சட்டவிதிகளுக்கு ஏற்பவே
வாக்களிக்கும் தொகுதி இடமாற்றம் செய்யப்பட்டது. ஆனால் அதனை குற்றச்செயலாக
உருமாற்றி தேவையில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார் கேசவன்.
வாக்களிக்கும்
தொகுதி இடமாற்றத்தை ம இகா, தேசிய முன்னணியினர் மட்டும்தான் மேற்கொள்கிறோமா?
எதிர்க்கட்சியினர் யாருமே
தொகுதி இடமாற்றம் செய்யவில்லையா? வெறுமனே அனைத்தையும்
அரசியல் ஆக்குவதை கேசவன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இது
குறித்து மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ
ஸம்ரி கூட தெளிவான விளக்கத்தை வழங்கியுள்ளார். எனது நடவடிக்கை என்பது
தொகுதியின் மேம்பாட்டை உறுதி செய்வதற்காகவேயின்றி வேறு எதற்காகவும் இல்லை.
கே: ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத்தில் நீங்கள் போட்டியிடுகின்றீர்கள்; அதற்காகத்தான் தொகுதி இடமாற்றம் செய்தீர்கள் என
சொல்லப்படுகிறதே?
ப: ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத்
தொகுதியில் களமிறக்கப்படும் வேட்பாளர் யார் என்பதை மஇகா தலைமைத்துவமும் தேசிய
முன்னணி தலைமைத்துவமும் முடிவு செய்யும்.
ஊத்தான்
மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதி மஇகாவின் தொகுதியாகும். இங்கு வெற்றியை நிலைநாட்டும்
மிகப் பெரிய பொறுப்பு எனக்கு உண்டு. அதற்காக அங்கு பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படும்
வேளையில் 'வேட்பாளர் நான்தான்' என்ற மாயை
உருவாக்கப்பட்டு வருகிறது. ஆனால்
வேட்பாளர் யாராக இருந்தாலும் அவர்களின் வெற்றிக்காக மாநில மஇகாவினர் முழுமையாக
பாடுபடுவர். அதனை ஒருபோதும் மறுக்க முடியாது.
No comments:
Post a Comment