Thursday, 31 August 2017

ஈப்போவில் களைகட்டியது 60ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரா.தங்கமணி
ஈப்போ-
நாட்டின் 60ஆம் ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டம் தலைநகரில் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

அவ்வகையில் பேராக் மாநிலத்தின் ஈப்போ மாநகரில் தேசிய தினக் கொண்டாட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மாநில சுல்தான் நஸ்ரின் முஸுடின் ஷா, ராஜா பெர்மாய்சூரி பேராக் துவாங்கு ஸாரா சலீம் ஆகியோர் முன்னிலையில் 60ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் கொண்டாட்டப்பட்டது. மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ ஸம்ரி அப்துல் காதீர், மாநில சட்டமன்ற சபாநாயகர் திருமதி தங்கேஸ்வரி ஆகியோர் இந்த சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.
இங்குள்ள நகர மண்டபத்தின் முன்பு பல்வேறு பள்ளிகள், அரசு துறைகள், பாதுகாப்புப் படையினர் உட்பட பல்வேறு தரப்பினரின் அணிவகுப்புகள் நடைபெற்றன. பல்லாயிரக்கணக்கான மக்களும் சுற்றுலாப் பயணிகளும் இந்த சுதந்திர தின விழாவை கண்டு களித்தனர்.

சுதந்திர தின அணிவகுப்புக்கு பின்னர் சுதந்திர தினத்தையொட்டி மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் வழி தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்களுக்கு சான்றிதழும் வெகுமதியும் சுல்தான் நஸ்ரின் ஷா வழங்கினார்.
அவ்வகையில் சுதந்திர தினத்தையொட்டி சிறப்பான அலங்கரிப்பை மேற்கொண்ட சுங்கை சிப்புட், துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி மூன்றாவது பரிசை வென்றது. நற்சான்றிதழையும் வெகுமதியையும் பள்ளிஆசிரியர்கள் சுல்தானிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் ராஜா மூடா,  ராஜா ஹீலிர், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், மாநில மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகர் டத்தோ வ.இளங்கோ உட்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment