ஷா ஆலம்-
பெர்சத்து இளைஞர் அணி ஏற்பாடு செய்திருந்த "மறைப்பதற்கு ஏதுமில்லை 2.0" நிகழ்ச்சியில் உரையாற்றிக் கொண்டிருந்த முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது மீது காலணி வீசப்பட்டதைத் தொடர்ந்து அந்நிகழ்ச்சி வன்முறையில் முடிந்தது.
இன்று ஷா ஆலாம் இளைஞர், கலாச்சார அரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 'மெமாலி சம்பவம்' தொடர்பில் பங்கேற்பாளரின் கேள்விக்கு பதிலளித்தபோது துன் மகாதீரை நோக்கி காலணிகள் வீசப்பட்டன.
பெர்சத்து ஆடையை அணிந்திருந்த சந்தேக நபர்கள் மேற்கொண்ட இந்நடவடிக்கையை தொடர்ந்து அந்த அரங்கத்தில் கலவரம் மூண்டது. காலணிகள் மட்டுமல்லாது நாற்காலி, கனிமநீர் போத்தல்கள் வீசப்பட்டதோடு 'புகை' குண்டுகளும் வீசப்பட்டன. ஆயினும் இந்த கலவரத்தில் துன் மகாதீர் காயமடையவில்லை என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
பெர்சத்து ஆதரவாளர்களுக்கும் சந்தேக நபர்களுக்கும் இடையே கைகலப்பு மூண்டபோது நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. சந்தேக நபர்கள் இருவரை பிடித்து பெர்சத்து ஆதரவாளர்கள் போலீசிடம் ஒப்படைத்தனர்.
கட்டுக்கடங்காமல் போன கலவரத்தைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டு முக்கிய பிரமுகர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment