Wednesday, 5 July 2017

இந்தியர்களுக்கு சேவை செய்ய தவறினால் புறக்கணிக்கப்படுவோம் - டத்தோஶ்ரீ சுப்பிரமணியம்



புக்கிட் கந்தாங்-
மக்களுக்கு சேவை செய்வதே மஇகாவின் முதன்மை கடமையாகும். அதற்காகத்தான் நாம் ஒருங்கிணைந்த அரசியல் கட்சியாக உருவெடுத்து நிற்கிறோம்  என்பதை மஇகா தலைவர்கள் உணர வேண்டும் என அதன் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் வலியுறுத்தினார்.

தேசிய அரசியல் நீரோடையில் இந்நாட்டிலுள்ள இந்திய சமுதாயத்தின் நலன் காக்க தொடங்கப்பட்ட கட்சியே மஇகா ஆகும். இந்தியர்களின் உரிமைகளுக்காகவும் அவர்களின் நலன் காக்கவும் ஆரம்பிக்கப்பட்ட கட்சி, அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதில் முனைப்பு காட்ட வேண்டும்.


இந்தியர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதில் மிகப் பெரிய பொறுப்பு நமக்கு உள்ளது. அந்த பொறுப்பை நாம் செய்து காட்ட வேண்டும். இல்லையேல் இந்தியர்களால் நாம் புறக்கணிக்கப்பட வேண்டிய சூழல் ஏற்படலாம் என இங்கு மஇகா புக்கிட் கந்தாங் தொகுதி கட்டட விருந்து நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

ஒவ்வொரு தொகுதி மஇகாவும் சொந்த கட்டடம்  பெற்றிருக்க வேண்டும் என்பது மிக அவசியமானதாகும். சொந்த கட்டடங்கள் இல்லாததால் கட்சி, சமூகத்திற்கான் நிகழ்வுகளை நடத்துவதற்கு பிற இடங்களை பயன்படுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகுகிறோம்.

இந்த சிக்கலை களைய ஒவ்வொரு தொகுதி மஇகாவும் சொந்த கட்டடத்தை பெற்றிருப்பது காலத்திற்கு ஏற்ற நடவடிக்கையாகும். புக்கிட் கந்தாங் தொகுதியில் மஇகாவுக்கென சொந்த கட்டடம் பெறுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ள தொகுதித் தலைவர் சண்முக வேலுவையும் அவர்தம் செயலவை உறுப்பினர்களையும் வெகுவாக பாராட்டுகிறேன்.

இந்த விருந்து நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்படும் தொகையை பொருட்டே மஇகா தலைமைத்துவம் ஏனைய நிதி உதவி வழங்கும் என சுகாதார அமைச்சருமான டத்தோஶ்ரீ சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.


இந்த நிகழ்வில் மஇகா துணைத் தலைவரும் பிரதமர் துறை அமைச்சருமான டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி, கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன், மாநில மஇகா தலைவரும்  மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகருமான டத்தோ இளங்கோ உட்பட மாநில மஇகா செயலவையினர், தொகுதி தலைவர்கள், கிளைத் தலைவர்கள் என திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment