Saturday, 1 July 2017

நாட்டின் 527ஆவது தமிழ்ப்பள்ளியின் கட்டடப் பணி துவங்கியது!



சிலாங்கூர் ஜூன் 30-
நாட்டின் 527ஆவது தமிழ்ப்பள்ளி சிலாங்கூர் மாநிலத்திலுள்ள உலுலங்காட் வட்டாரத்தில் மிகப் பிரம்மாண்டமாக கட்டப்படவுள்ளது. பல ஆண்டுகால போராட்டத்திற்கு பின்னர் இப்பகுதியில் முதல் தமிழ்ப்பள்ளியின் கட்டடப் பணி துவங்கியது.

உலுலங்காட் வட்டாரத்தில் முதன் முதலாக உருவாக்கப்படும் தமிழ்ப்பள்ளியின் அடிக்கல் நாட்டு விழா நேற்று காலை 8 மணியாளவில் மிகச் சிறப்பாக செராஸ் மக்கோத்தாவில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு சிறப்பு வருகையாளராக சுகாதார அமைச்சரும் மஇகாவின் தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ எஸ்.சுப்ரமணியம், துணைக் கல்வியமைச்சார் டத்தோ பி. கமலாநாதன், மஇகாவின் தேசியத் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர்.




இப்பள்ளி 24 வகுப்பறைகளுடன் வெ. 21.08 மில்லியன் செலவில் சிறப்பாக கட்டப்படவுள்ளது. இப்பள்ளியின் கட்டடப்பணி  அடுத்த வருடம் 19ஆம் தேதி ஆகஸ்டு மாதம் நிறைவு பெறவுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்த 6 புதிய தமிழ்ப்பள்ளிகளின் கட்டடப் பணிகள் ஒவ்வொன்றாக சிறப்பான முறையில் தொடங்கப்பட்டுள்ளன. அவை விரைவில் கட்டி முடிக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா காணும். 


200 ஆண்டுக்காலமாக நாட்டின் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்கு அரசாங்கம் உறுதுணையாக இருந்துள்ளது. மேலும் நாட்டில் அதிகமான தமிழ்ப்பள்ளிக் கூடங்களும் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்கும் தேமு அரசாங்கம் துணை நிற்கும் என்று துணை கல்வியமைச்சர் டத்தோ பி.கமலாநாதன் தெரிவித்தார்.

விரைவில் சிலாங்கூர் மாநிலத்தில் 100ஆவது தமிழ்ப்பள்ளியாக பிஜேஎஸ் தமிழ்ப்பள்ளி உருவாகவுள்ளது. அரசாங்கம் வழங்கிய ஆதரவை கொண்டு எங்களது சேவையில் தாமதம் இருந்தாலும் அவை சரியான நேரத்தில் செய்து முடிக்கப்படும் என்று தனது  சிறப்புரையில் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் உலுலங்காட் மாவட்ட கல்வி இலாகாவின் தலைவர் மூசா, மஇகா தலைவர்கள், மஇகா இளைஞர் பிரிவினர், தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கனோர் கலந்துச் சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment