Wednesday, 3 May 2017

புத்ராஜெயாவை தேமு கைப்பற்ற வழிவகுக்கும் '7 காரணங்கள்'?







கோலாலம்பூர்-

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் அக்டோபர் மாதத்தில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் வேளையில் புத்ராஜெயாவை தேசிய முன்னணியே மீண்டும் கைப்பற்றும் சூழல் நிலவுகிறது.

நாடு சுதந்திரம் அடைந்தது முதல் நாட்டின் நிர்வாகத்தை ஆட்சி செய்து வரும் தேசிய முன்னணி அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினர்ர் வலியுறுத்தி வருகின்ற போதிலும் தவிர்க்க முடியாத பல காரணங்களால்  இத்தேர்தலில் தேசிய முன்னணியே ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை மீண்டும் பெறக்கூடும்.

காரணம் 1:

நாட்டின் ஆட்சி பீடத்தை 60 ஆண்டுகளாக நிர்வகித்து வரும் தேசிய முன்னணிக்கு மாற்றாக எதிர்க்கட்சி கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும் என கூறும் எதிர்க்கட்சியினரின் நிர்வாகத்தன்மை மீது மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.

காரணம் 2:

தேசிய முன்னணி அங்கத்துவத்தில் பல கட்சிகள் இருந்தாலும் அவற்றுள் ஓர் இணக்கமான போக்கு நிலவுகிறது. ஆனால், நம்பிக்கைக் கூட்டணியில் உள்ள பல கட்சிகள் பல்வேறு கொள்கைகளையும் கருத்துகளையும் கொண்டிருப்பதால் அவற்றுக்கிடையே ஒற்றுமை இல்லாதது வெளிப்படையாக தெரிகிறது.

காரணம் 3:

ஆட்சிக்கு வருவதற்கு முன்பே யார் பிரதமர், யார் துணைப் பிரதமர் என்ற பதவி போராட்டத்தையும் அதற்கான அறிக்கை போர் நடத்தியதையும் மக்கள் மறக்கவில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன்பே பதவி போராட்டம் என்றால் ஆட்சி அமைத்தால் அதன் விளைவு எப்படியிருக்கும்?

காரணம் 4:

மக்கள் கூட்டணியில் இருந்து பாஸ் கட்சி பிரிந்து சென்றது. தங்களது கூட்டணியில் இருந்த ஒரு கட்சியையே நிலைநிறுத்திக் கொள்ள முடியாத எதிர்க்கட்சி கூட்டணி  நிலையான ஆட்சி நிர்வாகத்தை வழங்க முடியுமா? என சந்தேகம் மக்களிடையே வலுத்து வருகிறது.

காரணம் 5:

சுயேட்சை  வேட்பாளர் என்ற போர்வையின் மூலம் மக்கள் கூட்டணி ஆட்சி புரிந்த பேராக் மாநில அரசை கலைத்த சில 'மாண்புமிகு'களின் நடவடிக்கைகள் இன்னும் எதிர்க்கட்சியினர் மீது முழுமையான நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. கட்சி தாவல் நடவடிக்கையில் மூலம் மாநில அரசையே கவிழ்த்தவர்கள் ஆட்சி பீடத்தை கைப்பற்றினால் 5 ஆண்டுகள் வரை நிலையான ஆட்சியை வழங்குவார்களா?

காரணம் 6:

தற்போதுள்ள எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள சில கட்சிகளின் தலைவர்களும் உறுப்பினர்களும் ஆளும் தேசிய முன்னணியின் முன்னாள் தலைவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருந்ததால் இவர்களது நிர்வாகத்தில் அதே சாயம் தென்படலாம்இவர்களிடமிருந்து  மாற்றம் எதனையும் காண முடியாது என்பதால் எதிர்க்கட்சியை விட தேசிய முன்னணியே மேல் என்ற எண்ணம் வாக்காளர்களிடையே தற்போது மேலோங்கியுள்ளது.

காரணம் 7:


மக்கள் கூட்டணியில் இருந்து பிரிந்துள்ள பாஸ் கட்சி இம்முறை தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஆகியவற்றுக்கு ஈடாக போட்டியை கொடுக்கும் வேளையில் சிறுபான்மை வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்றத் தொகுதிகளை தேசிய முன்னணி கைப்பற்றக்கூடும். ஏனெனில் தேசிய முன்னணி, நம்பிக்கைக் கூட்டணி, பாஸ் ஆகியவற்றுக்கு மத்தியில் மும்முனை போட்டி நிலவினால் அங்கு சிதறப் போவது எதிர்க்கட்சியின் வாக்குகளே ஆகும். இதனை தனக்கு சாதகமாக்கி தேசிய முன்னணி அதிகமான தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும்.

No comments:

Post a Comment