Thursday 27 April 2017

What Says Obama for the Youth

 அன்று மணிவண்ணன்! இன்று ஒபாமா! 

இளைஞர்களுக்கு சொல்வது என்ன?






நாட்டின் அரசியலை இளம் தலைமுறையினர் நன்கு உணர்வதோடு அவர்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும். அதுதான் ஒரு நாட்டை வளர்ச்சி பாதைக்குக் கொண்டுச் செல்லும் என்பதே இளைஞர்களை அரசியலில் இழுக்க நினைக்கும் பல தலைவர்களின் கொள்கை முழக்கமாக உள்ளது.

  ஆனால் இன்றைய இளைஞர்களோ அரசியல் ஒரு சாக்கடை; அதில் நான் விழ விரும்பவில்லை என்ற பழைய பல்லவியையே பாடிக் கொண்டிருக்கின்றனர். இளைஞர்கள் முழுமையாக அரசியலில் களம் காணாததன்  விளைவுதான் இன்று வயதானவர்களின் ஆளுமைக்கு உட்பட்டதாக அரசியல் தளம் மாறியுள்ளது. ஆனால் ஒரு வல்லரசு நாட்டின் எதிர்காலத்தை பற்றி கனவு காணும் மிகச் சிறந்த தலைவர், அதற்கு இளைஞர்களே சிறந்த களம் என்பதை அறிவுறுத்தியுள்ளார்.

  ஆம்.. அந்த கனவை தற்போது விதைத்துள்ளவர் வேறுயாருமில்லை. அமெரிக்காவை 8 ஆண்டுகள் ஆட்சி புரிந்த ஒபாமா தான்.

  அதிபர் பதவியிலிருந்து விலகிய மூன்று மாத கால ஓய்வுக்கு பின்னர், தன்னுடைய சொந்த மகாணமான சிக்காகோவில் 400க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூடியிருந்த சிக்காகோ பல்கலைக்கழகத்தில் அடுத்த தலைமுறை இளைஞர்களுடன் பேசினார் ஒபாமா.

 அமெரிக்காவில் அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்க எடுக்கப்படும் முதல் முயற்சி என இந்த சந்திப்புக்கு அவர் காரணம் கூறியுள்ளார். அமெரிக்காவின் எதிர்காலத்தை பற்றி மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் தற்போதைய தலைவர்களை தாண்டி இளம் தலைமுறையினர் அரசியலுக்கு வர வேண்டும் என்பதே ஒபாமாவின் எதிர்பார்ப்பாக உள்ளது.

  ‘நான் ஒரு முக்கியமான விஷயத்தைச் செய்ய முடியும் என்றால், அது இந்த நாட்டின் அடுத்த தலைமுறையான உங்களை, ஆகச்சிறந்த தலைவர்களாக மாற்ற எடுக்கும் முயற்சியாகத் தான் இருக்க முடியும்என்று தெரிவித்துள்ளார்.

  இளம் தலைமுறையினர் அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற ஒபாமாவின் கனவுவல்லரசு  நாடான அமெரிக்காவுக்கு மட்டும் பொருந்தாது. வளர்ச்சி காணும் துடிக்கும் பிற நாடுகளுக்கும் பொருந்தும்.

  இளைஞர்கள் அரசியலை விட்டு ஒதுங்கி நிற்பதால்தான் வயது நிரம்பியவர்கள் ஆதிக்கம் செலுத்தும் தளமாக அது மாறியுள்ளது, அரசியலில் வயது முதிர்ந்தவர்களே நிரம்பியிருந்தால் உருமாற்றம் எதனையும் காண முடியாது.

  அரசியலில் உருமாற்றம் காண இளைஞர்கள் அதில் களமிறங்க வேண்டும். அப்போதுதான் அங்கு நவீன காலத்திற்கான உருமாற்றம் முன்னெடுக்கப்படும்.

   அரசியல் என்பது வெறும் கட்சிகளை மட்டுமே அடித்தளமாகக் கொண்ட ஆளுமை கிடையாது. மாறாக, அது ஓர் அரசாங்கத்தை நிறுவுகின்ற அதீத சக்தி வாய்ந்த கருவி ஆகும்.

 இதனை நன்கு உணர்ந்து இளைஞர்களும் தங்களை அரசியலில் இணைத்துக் கொள்ள முன்வர வேண்டும். அப்போதுதான் அரசியல் உண்மையான அரசியல் தளமாக மாறும்.

  இதை முடிக்கும் முன் 1999இல் வெளிவந்த முதல்வன் திரைப்படத்தில் நடிகர்       மணிவண்ணன் அர்ஜுனுடன் பேசிய சினிமா வசனம்தான் ஞாபகத்திற்கு வருகிறது. இன்னிக்கு இருக்கிற இளைஞன் எவன கேட்டாலும் டாக்டர், இஞ்ஜினியர், வக்கீல் ஆகனும்னு சொல்லுறான்.

 எவனாவது ஒருத்தன் அரசியல்வாதி ஆகணும்னு சொல்லுறானா? கேட்டா அரசியல் ஒரு சாக்கடை என்பானுங்க. சாக்கடையா இருந்தா இறங்கி சுத்தம் பண்ண வேண்டியது தான? அத விட்டுட்டு கண்ட கண்ட அரசியல்வாதிங்க கிட்ட நாட்டை கொடுத்து அந்த நாத்தத்திலேயே வாழ்ந்து பழகிட்டானுங்க”.

No comments:

Post a Comment