(குறிப்பு: இது ஒரு விளம்பரச் செய்தி)
வறுமையின் கடுமையான சூழல், ஆனாலும் தளராத முயற்சி... அர்ப்பணிப்பு... 'ஆவதும் பெண்ணாலே... அழிவதும் பெண்ணாலே' என்பார்கள். ஆம்... அத்தகைய ஒரு தாயின் தியாகம் இன்று அந்த வம்சத்தின் உயர்வுக்கு அடித்தளமிட்டது என்பது வெறும் கற்பனையோ வார்த்தை ஜாலமோ அல்ல. நம்மிடையே வாழ்ந்து மறைந்த திருவாட்டி பொப்பி த/பெ பம்பையன் (Poppie Pampaiyan) வாழ்க்கைச் சுவடு.
கோலாலம்பூர், ஸ்தாப்பாக் பகுதியில் 24/2/1933 அன்று திரு.பம்பையன் - திருமதி ராமாயி தம்பதியருக்கு பிறந்தார் திருவாட்டி பொப்பி. தனது பள்ளிக்கூடம் கற்க வேண்டிய சிறார் பருவத்தின்போது நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின்போது கல்வியை தியாகம் செய்த நிலையில் இளம் பருவத்தில் சுங்கை ரெங்கம் தோட்டத்தைச் சேர்ந்த திரு.சி.கே.வை.பழனியாண்டி- திருமதி வள்ளியம்மை தம்பதியரின் மகன் சி.கே.பி.ஆண்டியப்பன் (C.K.P. Andiappan) அவர்களை 9/3/1952இல் கிள்ளான், நகர தண்டாயுதபாணி ஆலயத்தில் கரம்பிடித்தார் திருவாட்டி பொப்பி.
திரு. திருமதி ஆண்டியப்பன் - பொப்பி இணையருக்கு திருமதி லெட்சுமி (அமரர்), திரு. சுந்தர்ராஜு, திரு. ராஜேந்திரன் (அமரர்), திரு. பழனியாண்டி, திரு. ராதா@தேவன், திருமதி வள்ளியம்மை,குமாரி ராமாயி கிருஷ்ணவேணி என 7 பிள்ளைகள் பிறந்தனர்.
திருவாட்டி பொப்பி இல்லத்தரசியாக இருந்து பிள்ளைகளை கவனித்து வந்த நிலையில் திரு.ஆண்டியப்பன் வாடகை கார் ஓட்டுநராகவும் பகுதி நேரமாக பெட்ரோல் நிலைய ஊழியராகவும் பணி புரிந்து குடும்பத்தை கவனித்துக் கொண்டார்.
அச்சமயம் Connaught Bridge Power Station (C.B.P.S.) லோட் நிலத்தில் வசித்து வந்த இத்தம்பதியினர் வறுமையான சூழலில் வாழ்ந்து வந்த போதிலும் தமது பிள்ளைகளை மிகச் சிறப்பாக வளர்த்து வந்தனர்.
1970ஆம் காலகட்டங்களில் சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தில் Pekan Bukit Kemuning, Batu 8 பகுதியில் 4.25 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலப்பரப்பை விலைக்கு வாங்கி அதில் ரப்பர் மரங்களை நடவு செய்தனர்.
இனிதே சென்று கொண்டிருந்த இத்தம்பதியினரின் இல்லற வாழ்வில் 1978ஆம் ஆண்டில்பேரிடி விழுந்தது. ஆம்.... திரு. ஆண்டியப்பன் 21/1/1978இல் இதய நோயின் காரணமாக காலமானார்.
கணவனை இழந்து தனித்து வாழும் தாயாக இருந்தாலும் தம் குடும்பத்தை மேம்படுத்துவதில் ஒருபோதும் சோர்வடையாமல் உழைத்துக் கொண்டிருந்தார். இத்தகைய நடவடிக்கையின் பெரு முயற்சியாக 1990ஆம் காலகட்டங்களில் ரப்பர் மரங்கள் நடவு செய்த நிலத்தில் குடியிருப்புகளை நிறுவலாம் எனும் ஆலோசனையை தனது பிள்ளைகளிடம் முன்வைத்ததன் விளைவாக அந்நிலம் குடியிருப்பு நிலமாக மாற்றம் செய்யப்பட்டது.
தாயின் ஆலோசனை ஏற்ற பிள்ளைகள் மேற்கொண்ட தொடர் நடவடிக்கையின் காரணமாக 2009ஆம் ஆண்டில் குடியிருப்பு நிறுவப்பட்டது. அதுதான் இப்போது அமைந்திருக்கும் Taman Seri Kemuning வீடமைப்புப் பகுதியாகும்.
வறுமையின் சூழலிலும் இல்லறத்தை நல்லறமாக்கி பிள்ளைகளை சிறந்தவர்களாக உருவாக்கிய திருவாட்டி பொப்பி, 2015இல் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சுபாங் ஜெயா மெடிக்கல் சென்டரில் சிகிச்சையை மேற்கொண்டு வந்தார்.
பல காலமாக தொடர் சிகிச்சையை மேற்கொண்டு வந்த திருவாட்டி பொப்பி அம்மாவுக்கு ஏற்பட்ட கடுமையான மூச்சுத் திணறல் காரணமாக சிகிச்சை பலனின்றி தமது 89ஆவது வயதில் கடந்த 23/5/2022இல் காலமானார்.
திருவாட்டி பொப்பி அவர்களுக்கு 2 மருமகள்களும் 2 மருமகன்களும் உள்ள நிலையில் 11 பேரப்பிள்ளைகளும் (5 பேரன்கள்,6 பேத்திகள்) 10 கொள்ளுப்பேரப்பிள்ளைகளும் ( 3 கொள்ளுப்பேரன்கள், 7 கொள்ளுப் பேத்திகள்) உள்ளனர்.
மருத்துவர், சட்ட வல்லுநர், அரசாங்க-தனியார் துறை, வணிகம் என பேரப்பிள்ளைகள் மேன்மை வாய்ந்த துறையில் பணியாற்றி வருகின்றனர்.
தமது வாழ்க்கை அர்த்தமுள்ளதாக்கி தமது வம்சத்தையும் சிறந்த நிலையில் உருவாக்கிய திருவாட்டி பொப்பி அவர்களின் ஆன்மா சாந்தி கொள்ளட்டும். அன்னாரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.