Friday 21 May 2021

ஒருமணிநேரத்திற்குள்ளாகவே தடுப்புக் காவலில் சிவபாலன் மரணம்

கோம்பாக்- 

போலீஸ் தடுப்புக் காவலில் பால் வியாபாரியான ஏ.கணபதி மரணமடைந்த சுவடு அடங்குவதற்குள்ளாகவே  மற்றொரு தடுப்பு காவல் மரணச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

கோம்பாக் மாவட்ட காவல் நிலையத்தில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்ட சிவபாலன் சுப்பிரமணியம் தடுத்து வைக்கப்பட்ட ஒருமணி நேரத்திற்குள்ளாக  மரணமடைந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

நேற்றுக் காலை 11.45 மணியளவில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார் சிவபாலன். போலீஸ் அறிக்கையில் 12.25 மணியளவில் மரணமடைந்திருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக மலேசிய தமிழர் முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் ஈஸ்வரி சுப்பிரமணியம் ஊடகத்திடம் கூறியுள்ளார்.

ஆனால் சிவபாலனின் சகோதரியை பிற்பகல் 3.00 மணியளவில் தொடர்பு கொண்டுள்ள போலீஸ் அதிகாரி, உங்களது அண்ணன் ஆபத்தான சூழலில் செலாயாங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் குடும்ப உறுப்பினர் யாரையாவது மருத்துவமனைக்கு விரைவாக வருமாறும் சொல்லியிருக்கிறார்.

பின்னர் மருத்துவமனைக்கு சென்றுள்ள தனது தாயாரிடம் பிற்பகல் 4.00 மணியளவில் ஒரு போலீஸ் அதிகாரி, மூச்சுத்திணறல் காரணமாக சிவபாலன் இறந்து விட்டதாகவும் அவரது உடல் சவக்கிடங்கில் உள்ளதாகவும் கூறியுள்ளார் என்று சிவபாலனின் சகோதரி தனலெட்சுமி நடந்ததை விவரித்துள்ளார்.

2016இல் செய்யப்பட்ட மிரட்டல் தொடர்பான புகாரின் அடிப்படையில் விசாரணை செய்ய சிவபாலனை தடுத்து வைத்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.


காணொளியாக பார்க்க...


இப்போது வரை தனது அண்ணனுக்கு என்ன நடந்தது? என்பது எங்கள் யாருக்கும் தெரியவில்லை, 3 மணியளவில் தன்னை தொடர்பு கொண்ட போலீஸ் அதிகாரி அண்ணன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். ஆனால், போலீஸ் அறிக்கையில் 12.25 மணியளவில் அண்ணன் மரணமடைந்ததாக கூறப்படுகிறது. இதில் எதுதான் உண்மை? இருவேறு முரண்பட்ட தகவல்கள் கொடுப்படுவது எதற்கு? என்று தனலெட்சுமி கேள்வி எழுப்பினார்.

இதனிடையே, இவ்விவகாரம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்படும் என்று கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் அரிஃபாய் தராவி தெரிவித்தார்.

தடுப்புக் காவலில் மரணமடைந்த சிவபாலனின் மரணத்தில் மறைந்துள்ள உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்று சிவபாலனின் குடும்பத்தினரும் அரசு சார்பற்ற பொது இயக்கத்தினரும் கோரிக்கை விடுத்தனர்.

No comments:

Post a Comment