Friday, 28 May 2021

#Breaking இரு வாரங்களுக்கு முழு முடக்கம்

 புத்ராஜெயா-

கோவிட்-19 வைரஸ் தொற்று  பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை முழு முடக்கம் அமல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகலில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு மன்றத்துடனான  சந்திப்புக் கூட்டத்திற்குப் பின்னர் எடுக்கப்பட்ட முடிவில் பொருளாதாரம் , சேவை துறையை தவிர்த்து அனைத்து துறைகளும் செயல்பட அனுமதிக்கப்படாது என முடிவெடுக்கப்பட்டதாக பிரதமர் துறை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வீடியோவாக காண



தமிழக நிவாரண நிதி மிண்டாஸ் சங்கம் வெ.10,000 நன்கொடை; டத்தோ மோகனிடம் வழங்கப்பட்டது

 கோலாலம்பூர்-

கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள தமிழக மக்களுக்கு உதவிடும் நோக்கில் மஇகா தொடங்கியுள்ள நிவாரண நிதிக்கு மிண்டாஸ் எனப்படும் மலேசிய இந்திய சிகை அலங்கரிப்பு உரிமையாளர்கள் சங்கத்தின்  சார்பில் 10,000 வெள்ளிக்கான காசோலையை மஇகாவின் உதவித் தலைவரும் செனட்டருமான டத்தோ டி.மோகனிடம் அச்சங்கத்தின் தலைவர் டாக்டர் மகேந்திரன், செயலாளர் ராஜசேகரன், கணேசன், கணபதி, ஜெயபாலன் ஆகியோர் வழங்கினர்.

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியிலும் தமிழக மக்களுக்கு உதவ முன்வந்த மிண்டாஸ் சங்கத்திற்கு நன்றி கூறி கொள்வதாக டத்தோ மோகன் குறிப்பிட்டார்.


செய்திகளை வீடியோவாக காண:



தமிழக மக்களுக்கு சுங்கை சிப்புட் நட்புறவு இயக்கம் உதவி

லிங்கா

சுங்கை சிப்புட்-

கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு உதவும் நோக்கில் மஇகா தொடங்கியுள்ள தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் சுங்கை சிப்புட் நட்புறவு இயக்கத்தின் சார்பாக 2,250 வெள்ளியை அதன் தலைவர் அஜாட் கமாலுடீன் சுங்கை சிப்புட் மஇகா தலைவர் இராமகவுண்டரிடம் வழங்கினார். தொகுதி பொருளாளர் சத்தியசீலன், சுங்கை சிப்புட் தொகுதி மஇகா அலுவலக மேலாளார் அசோக் குமார்  ஆகியோர் உடனிருந்தனர்.


செய்திகளை வீடியோவாக காண:


பராமரிப்பாளர்களை கொன்ற புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டன

நன்யாங்-

சீனாவில் மிருகக்காட்சி பணியாளரை கொன்ற இரு புலிகளை அதன் ஊழியர்கள் சுட்டுக் கொன்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த செவ்வாய்க்கிழமை கூண்டுக்குள் இருந்த புலிகளுக்கு உணவு கொடுக்கச் சென்ற பராமரிப்பாளரை இரு புலிகள் கடுமையாக தாக்கியுள்ளன.

புலிகளின் தாக்குதலில் கடுமையாக காயமடைந்த பரமாரிப்பாளர் மரணமடைந்ததை அடுத்து அமலாக்க அதிகாரிகள் அந்த புலிகளை சுட்டுக் கொன்றனர்.

செய்திகளை வீடியோவாக காண:


எம்ஏசிசி விசாரணையில் டத்தோ தாஜுடின்

 கோலாலம்பூர்-

அதிகார துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் பிரசரானா மலேசியா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டத்தோஶ்ரீ தாஜுடின் அப்துல் ரஹ்மான் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இதனை உறுதிப்படுத்திய தாஜுடின் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக ‘தி வைப்ஸ்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

செய்திகளை வீடியோவாக காண:



கோவிட்-19: சடலங்களை பாதுகாக்க செலாயாங் மருத்துவமனைக்கு சிறப்பு கொள்கலன்

 கோலாலம்பூர்-

சுங்கை பூலோ மருத்துவமனையை அடுத்து கோவிட்-19 வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை பாதுகாக்க செலாயாங் மருத்துவமனையும் சிறப்பு கொள்கலனை பெற்றுள்ளது.

கோவிட்-19 வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை உயர்வு கண்டு வரும் நிலையில் சடலங்களை பாதுகாப்பதற்கு இட நெருக்கடிய எதிர்கொள்ளாமல் இருக்க இந்த சிறப்பு கொள்கலன் செலாயாங் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

செய்தியை வீடியோவாக காண:


அமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறாரா கைரி?

 கோலாலம்பூர்-

பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திலிருந்து விலகவிருப்பதாக அமைச்சர் கைரி ஜமாலுடின் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஓர் ஆருடம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.


பிரசரானா மலேசியா நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து அம்னோவின் தேர்தல் குழுத் தலைவர் டத்தோ தாஜுடின் நீக்கப்பட்ட பின்னர் கைரி ஜமாலுடின் இந்த எச்சரிக்கையை விடுத்ததாக கூறப்படுகிறது.

செய்திகளை வீடியோவாக காண :

பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு வழங்கி வரும் ஆதரவை அம்னோ மீட்டுக் கொள்ளலாம் எனவும் அதன் முன்னோட்டமாக கைரியின் இந்நடவடிக்கை அமையலாம் எனவும் ஆருட தகவலில் கூறப்பட்டுள்ளது.


சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய இளைஞர் மரணம்

குளுவாங்-

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு தடுப்புக் காவலின்போது மரணமடைந்த .கணபதி, எஸ். சிவபாலன் ஆகியோரின் மரணச் சுவடுகள் ஏற்படுத்திய ரணம் ஆறுவதற்கு முன்பே சிம்பாங் ரெங்காம் சிறையில் தடுத்து  வைக்கப்பட்டிந்த மற்றொரு இந்திய இளைஞர் மரணமடைந்துள்ளார்.

போதைப் பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் சிறையில் அடைக்கப்பட்ட 21 வயதான சுரேந்திரன் சங்கர்  கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சிம்பாங் ரெங்காம் சிறைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று அதிகாலை குளுவாங் மருத்துவமனையில் மரணமடைந்ததாக குடும்பத்தினர் தகவலை பெற்றுள்ளனர்.

கடந்த ஜூன் 2020இல் போதைப் பொருள் வழக்கிற்காக பெட்டாலிங் ஜெயாவில் நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்ட  சுரேந்திரன் பின்னர் பொக்கா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் ஆகஸ்ட் மாதம் மூவார் சீர்திருத்த மையத்திற்கு அழைத்து வரப்பட்ட சுரேந்திரனை குடும்பத்தினர் பார்த்தது அதுவே கடைசியாகும் என்றும் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி சிம்பாங் ரெங்காம் சிறைக்கு அவர் மாற்றப்பட்டார் என்றும் தாயார் திருமதி குமதமேரி ஆசீர்வாதம் தெரிவித்தார்.

செய்திகளை வீடியோவில் காண:

'21 வயதே னஆன சுரேந்திரனுக்கு இதுவரை எவ்வித சுகாதாரப் பிரச்சினைகள் இருந்ததில்லை. இது எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாக உணர்கிறோம்' என்று அவர் மேலும் கூறினார்.

வயிறு வலி காரணமாக குளுவாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேந்திரன் 27ஆம் தேதி அதிகாலை 12.30 மணியளவில் மரணமடைந்துள்ளார். உடல் உறுப்புகள் செயலிழந்ததன் பாதிப்பின் காரணமாக சுரேந்திரன் மரணமடைந்தார்  என்று குளுவாங் மருத்துவமனை மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.


Friday, 21 May 2021

ஒருமணிநேரத்திற்குள்ளாகவே தடுப்புக் காவலில் சிவபாலன் மரணம்

கோம்பாக்- 

போலீஸ் தடுப்புக் காவலில் பால் வியாபாரியான ஏ.கணபதி மரணமடைந்த சுவடு அடங்குவதற்குள்ளாகவே  மற்றொரு தடுப்பு காவல் மரணச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

கோம்பாக் மாவட்ட காவல் நிலையத்தில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்ட சிவபாலன் சுப்பிரமணியம் தடுத்து வைக்கப்பட்ட ஒருமணி நேரத்திற்குள்ளாக  மரணமடைந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

நேற்றுக் காலை 11.45 மணியளவில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார் சிவபாலன். போலீஸ் அறிக்கையில் 12.25 மணியளவில் மரணமடைந்திருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக மலேசிய தமிழர் முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் ஈஸ்வரி சுப்பிரமணியம் ஊடகத்திடம் கூறியுள்ளார்.

ஆனால் சிவபாலனின் சகோதரியை பிற்பகல் 3.00 மணியளவில் தொடர்பு கொண்டுள்ள போலீஸ் அதிகாரி, உங்களது அண்ணன் ஆபத்தான சூழலில் செலாயாங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் குடும்ப உறுப்பினர் யாரையாவது மருத்துவமனைக்கு விரைவாக வருமாறும் சொல்லியிருக்கிறார்.

பின்னர் மருத்துவமனைக்கு சென்றுள்ள தனது தாயாரிடம் பிற்பகல் 4.00 மணியளவில் ஒரு போலீஸ் அதிகாரி, மூச்சுத்திணறல் காரணமாக சிவபாலன் இறந்து விட்டதாகவும் அவரது உடல் சவக்கிடங்கில் உள்ளதாகவும் கூறியுள்ளார் என்று சிவபாலனின் சகோதரி தனலெட்சுமி நடந்ததை விவரித்துள்ளார்.

2016இல் செய்யப்பட்ட மிரட்டல் தொடர்பான புகாரின் அடிப்படையில் விசாரணை செய்ய சிவபாலனை தடுத்து வைத்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.


காணொளியாக பார்க்க...


இப்போது வரை தனது அண்ணனுக்கு என்ன நடந்தது? என்பது எங்கள் யாருக்கும் தெரியவில்லை, 3 மணியளவில் தன்னை தொடர்பு கொண்ட போலீஸ் அதிகாரி அண்ணன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். ஆனால், போலீஸ் அறிக்கையில் 12.25 மணியளவில் அண்ணன் மரணமடைந்ததாக கூறப்படுகிறது. இதில் எதுதான் உண்மை? இருவேறு முரண்பட்ட தகவல்கள் கொடுப்படுவது எதற்கு? என்று தனலெட்சுமி கேள்வி எழுப்பினார்.

இதனிடையே, இவ்விவகாரம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்படும் என்று கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் அரிஃபாய் தராவி தெரிவித்தார்.

தடுப்புக் காவலில் மரணமடைந்த சிவபாலனின் மரணத்தில் மறைந்துள்ள உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்று சிவபாலனின் குடும்பத்தினரும் அரசு சார்பற்ற பொது இயக்கத்தினரும் கோரிக்கை விடுத்தனர்.

Sunday, 16 May 2021

சரவாக் சட்டமன்றம் கலைக்கப்படுவது எப்போது? மாமன்னர், சுல்தானிடம் அதிகாரம் ஒப்படைப்பு

கூச்சிங் 

சரவாக் மாநில சட்டமன்றத்தை கலைக்கும் அதிகாரம் மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மாட் ஷா, மாநில சுல்தான் அப்துல் தாய்ப் மாமுட் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக ஜிபிஎஸ் கட்சி தெரிவித்துள்ளது.

ஜூன் 6ஆம் தேதியுடன் மாநில சட்டமன்றத்தின் ஐந்தாண்டு காலம் பூர்த்தியடைகிறது. ஆனால் அவசரகால சட்டம் நடப்பில் உள்ளதால் மாநில சட்டமன்றத் தேர்தலை நடத்துவது அனுமதிக்கப்படாது.

மாநில சட்டமன்றத் தேர்தல் எப்போது நடத்துவது என்ற தீர்க்கமான முடிவை மாமன்னரும் மாநில சுல்தானும் எடுப்பர் எனும் அடிப்படையில் இம்முடிவு அவ்விருவரிடமும் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக ஜிபிஎஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் அலெக்ஸாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.

வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்து; ஓட்டுனர் மரணம்

 ஈப்போ-

வேகக் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த AUDI கார் ஒன்று அவ்வழியே சென்ற லோரியை மோதி விபத்துக்குள்ளானதில் 20 வயது மதிக்கத்தக்க கார் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே மாண்டார்.

பாகான் செராய்க்கு அருகே வடக்கு- தெற்கு நெடுஞ்சாலையின் 178.5ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்த இவ்விபத்தில் AUDI காரில் பயணித்த மற்றொரு நபர் கடுமையான காயங்களுக்கு இலக்கான வேளையில் லோரி ஓட்டுனரும் காயத்திற்கு ஆளானார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பாகான் செராய் தீயணைப்பு வீரர்கள் காயத்திற்கு இலக்கானவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


வாழைப்பழ காமெடி புகழ் நடிகர் பவுன்ராஜ் மரணம்

சென்னை 

சமீப காலமாக தமிழ் திரையுலக பிரபலங்கள் மரணமடைந்து வருவது அதிர்ச்சி அளித்து வரும் நிலையில் நகைச்சுவை நடிகரும் துணை இயக்குனருமான நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பு காரணமாக நேற்று மரணமடைந்தார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா போன்ற திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றவர்.

அதிலும் ரஜினி முருகன் திரைப்படத்தில் இடம்பெற்ற 'டீக்கடையில் வாழைப்பழத்தை இழுக்க பாடுபடும்' காட்சி அவரின் நடிப்புக்கு ஒருமைல்கல்லாகும். இவர் இயக்குனர் பொன்ராமிடம் துணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

சமீபகாலமாக இயக்குனர் ஜனநாதன், நடிகர் விவேக், இயக்குனர் கேவி.ஆனந்த், நடிகர்கள் பாண்டு, நெல்லை சிவா, மாறன் ஆகியோர் மரணமடைந்த நிலையில் நடிகர் பவுன்ராஜின் மரணம் தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இஸ்ரேலின் நடவடிக்கையை அனைத்துலக சமூகம் கண்டிக்க வேண்டும்- டத்தோஶ்ரீ சரவணன்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

உலகமே ஒரு பெருந்தொற்று நோய் பரவலை எதிர்கொண்டிருக்கும்போது பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலின்  நடவடிக்கையை அனைத்துலக சமூகம் கண்டிக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் வலியுறுத்தினார்.

பாலஸ்தீன மக்கள் தாக்கப்படுவதும், அவர்கள் மீது குண்டுகள் வீசப்படுவதும், சுடப்படுவதும் மனிதநேயமற்றவையாகும். இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

பாலஸ்தீனர்களுக்கு எதிரான பிராந்தியங்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் இஸ்ரேல் அரசாங்கம் நடத்தும் அட்டூழியங்களை உலகம் வேடிக்கை பார்க்க முடியாது.சியோனிச சமூகத்திற்கு எதிராக அனைத்துலக சமூகம் செயல்பட வேண்டிய நேரமிது என்று தமது முகநூல் பக்கத்தில் மஇகாவின்  துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ சரவணன் பதிவிட்டுள்ளார்.


கண்பார்வையிழந்த குமாரி லோகேஸ்வரிக்கு மனிதநேய உதவி

ரா.தங்கமணி

கிள்ளான்-

பணிநேரத்தின்போது ஏற்பட்ட விபத்தை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை, மருந்துகளின் ஒவ்வாமை காரணமாக கண் பார்வை பாதிக்கப்பட்ட குமாரி லோகோஸ்வரிக்கு பண்டார் பாரு கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கணிசமான நிதியுதவியை வழங்கியுள்ளார்.

கண்பார்வை பாதிக்கப்பட்ட குமாரி லோகேஸ்வரியின் பிரச்சினை தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அவருக்கு சிலாங்கூர் மாநில அரசின் மருத்துவ உதவித் திட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளதாக பண்டார் பாரு கிள்ளான் இந்திய சமூகத் தலைவர் அருள்நேசன் ஜெயபாலன் கூறினார். 

சக்கர நாற்காலியின் உதவியுடன் வாழ்ந்து வரும் தனது தாயாருடன் வசித்து வரும் லோகேஸ்வரிக்கு உதவும் நோக்கில் டத்தோ தெங் சாங் கிம்மின் நிதியுதவிக்கான காசோலையை அவரின் உதவியாளர் சரவணன் வழங்கினார்.


கிள்ளான் நா
டாளுமன்ற உறுப்பினரின் நிதியுதவி திட்டத்திற்கும் ஏற்பாடு செய்துள்ளதாகவும் இவரின் பிரச்சினையை தனது கவனத்திற்கு கொண்டு வந்த சிலாங்கூர் இந்து சங்கத்தின் தலைவர் முனியாண்டி, மோரிப் இந்திய சமூக தலைவர் ருசேன் ஆகியோருக்கு நன்றி கூறி கொள்வதாக அருள்நேசன் குறிப்பிட்டார்.


மஇகாவை விமர்சிப்பவர்கள் அன்வாரை விமர்சிப்பார்களா?

 ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

தமிழக மக்களுக்கு நிதியுதவி செய்யுங்கள் என்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று நிதியுதவி வழங்க முனைந்துள்ள மஇகாவின் நடவடிக்கை விமர்சிக்கப்படுவது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக இந்தியா பேரழிவை சந்தித்து வரும் நிலையில் தமிழகமும் இதில் சிக்குண்டுள்ளது. மருத்துவ நெருக்கடி, பொருளாதார நெருக்கடி ஆகியவற்றிலிருந்து மீட்சி பெற புலம்பபெயர்ந்து வாழும் தமிழர்கள் உதவ வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் விடுத்த கோரிக்கைக்கு ஏற்ப மலேசிய இந்தியர்களின் தாய்க்கட்சியான மஇகாவும் நிதியுதவி அளிக்க முனைந்துள்ளது.

மஇகாவின் இந்நடவடிக்கையை விமர்சிக்கும் சிலர், மலேசிய இந்தியர்களே பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில்  தமிழக அரசுக்கு மஇகா உதவுவது அவசியம் தானா? என்று கேள்வி எழுப்புகின்றனர். 

 மஇகாவின் மனிதநேய மாண்பு இப்போது தொடங்கப்பட்டதல்ல. முந்தைய காலங்களில் இதுபோன்ற பல மனிதநேய உதவிகளை வழங்கியுள்ள மஇகா, இப்போது தமிழகத்திற்கும் தனது உதவிக்கரத்தை நீட்டியுள்ளது. இதில் என்ன தவறு உள்ளது என்று மஇகா மத்திய செயலவை உறுப்பினர் மு.வீரன், சுங்கை சிப்புட் மஇகா செயலாளர் கி.மணிமாறன் ஆகியோர் கேள்வி எழுப்பினர்.

தமிழகத்திற்கு உதவ முனையும்  மஇகாவை விமர்சனம் செய்பவர்கள் பாலஸ்தீன மக்களுக்காக 24 மணி நேரத்தில் 5 லட்சம் வெள்ளி நன்கொடையை திரட்டியுள்ள பிகேஆர் கட்சி தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் செயலை விமர்சிக்க முடியுமா?

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் இந்தியர்கள் மட்டும்தான் நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளார்களா?, மலாய்க்காரர்கள் ஒருவரும் எவ்வித நெருக்கடியும் இல்லாமல்தான் வாழ்கிறார்களா? என்று வீரனும் மணிமாறனும் தங்களது ஆதங்கத்தை முன்வைத்தனர்.


Saturday, 15 May 2021

தமிழக மக்களுக்கு உதவ வேண்டியது மஇகாவா? மலேசிய அரசாங்கமா?- ராய்டு கேள்வி

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

கோவிட்-19 பெருந்தொற்றால் வேலை இழந்து வருமானம் இன்றி அல்லல்படும் மலேசிய இந்தியர்கள் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் தமிழக அரசுக்கு உதவுதான் மஇகாவின் தலையாய கடமையா? என்று மலேசிய இந்தியர் குரல் இயக்கத்தின் ஆலோசகர் வீ.பாப்பராய்டு கேள்வி எழுப்பியுள்ளார். 

கோவிட்-19 தொற்றால் அபாய சூழலை எதிர்கொண்டுள்ள தமிழக மக்களுக்கு உதவும்படி புலம்பெயர்ந்த தமிழர்களிடம் நிதியுதவி கோரியுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று உதவ வந்துள்ள மஇகாவின் நடவடிக்கையை பாராட்டுகிறோம். 

ஆனால் மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே ராஜதந்திர உறவுகள் உள்ள நிலையில் தமிழக மக்களுக்கு மலேசிய அரசாங்கத்தின் வாயிலாக உதவி புரிவதை மஇகா மேற்கொள்ளலாமே?  

ஓர் அரசியல் கட்சியாக மஇகா தமிழக மக்களுக்கு உதவுவதை காட்டிலும் அரசாங்க பிரதிநிதியாக மஇகா திகழலாமே?அதே வேளையில் தமிழக மக்களுக்கு  கணிசமான நிதியுதவியை செய்ய தயாராக இருக்கும் மஇகா, அதை இங்குள்ள இந்தியர்களுக்கு கொடுத்து உதவலாமே? என்று பாப்பராய்டு கூறினார்.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வெ.5 லட்சம் திரட்டினார் டத்தோஶ்ரீ அன்வார்

கோலாலம்பூர்-

இஸ்ரேல் வான் தாக்குதலில் அவதியுற்று வரும் பாலஸ்தீன மக்களுக்கு உதவும் பொருட்டு பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் 5 லட்சம் வெள்ளி நிதி திரட்டியுள்ளார்.

24 மணிநேரத்திற்குள்ளாகவே இந்நிதியை திரட்டியுள்ள டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்த நிதியை தானும் பிற பிகேஆர் கட்சி உறுப்பினர்களும் திரட்டியுள்ளது போல மற்ற உள்நாட்டினரும் வெளிநாட்டு இயக்கங்களும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவுகரம் நீட்ட வேண்டும் என்று சொன்னார்.



தினந்தோறும் சந்தைக்கு செல்ல வேண்டாம்- பி.ப.சங்கம்

 பினாங்கு-

காய்கறி, கோழி, மீன் ஆகியவற்றை வாங்குவதை வாங்க தினந்தோறும் சந்தைக்கு செல்வதை மக்கள் குறைத்துக் கொண்டாலே கோவிட்-19 வைரஸ் தொற்று பரவுவதை குறைக்க முடியும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி பிரிவு அதிகாரி என்.வி.சுப்பாராவ் குறிப்பிட்டார்.

ஒருமுறை சந்தைக்கு செல்லும்போதே 3 அல்லது 4 நாட்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்  கொண்டால் தினந்தோறும் சந்தைக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

இதன் மூலம் கோவிட்-19 தொற்று பாதிப்பு அதிகமாவது குறைக்க முடியும் என்ற அவர், சந்தைக்கு செல்பவர்கள் பெரும்பாலும் முதியவர்கள் என்பதால் கவனமுடன் செயல்படுவது அவசியமானது என்றார் அவர்.


வீட்டிலேயே இருங்கள்; தடுப்பூசி அட்டவணையை மாற்றம் செய்யலாம்- கைரி ஜமாலுடின்

 கோலாலம்பூர்-

கோவிட்-19  வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களுக்கான தடுப்பூசி திட்ட அட்டவணையை மாற்றம் செய்துக் கொள்ளலாம் என்று அறிவியல், புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

இத்தகைய நபர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், வீட்டுக்குள்ளேயே இருங்கள், உங்களுக்கான தடுப்பூசி அட்டவணையை மாற்றம் செய்து கொள்ளலாம் என கூறிய தேசிய தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளர் கைரி ஜமாலுடின், தடுப்பூசி போட வரும் இத்தகைய நபர்களால் மேலும் பலர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படக்கூடும் என்று அறிவுறுத்தினார்.


இஸ்ரேல்-காஸா போர்- 119 பேர் உயிரிழப்பு

காஸா-

இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் பாலஸ்தீனப் போராளி அமைப்புக்கும் இடையே நடைபெற்று வரும் போரில் மொத்தம் 119 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்த மோதல் ஆரம்பித்த கடந்த திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையில் 119 பேர் உயிரிழந்த வேளையில் இதில் 31 பேர் குழந்தைகள் என்று காஸா சுகாதாரத்துறை கூறியுள்ளது. மேலும் 830க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாகவும் அது கூறியது. 

பொதுமக்களிடமிருந்து அல்ல: வர்த்தக தரப்பினரிடமிருந்தே நிதி திரட்டப்படும்- டத்தோஸ்ரீ சரவணன்

 கோலாலும்பூர் -

தமிழக மக்களுக்கு உதவும் பொருட்டு வர்த்தக நபர்களிடமிருந்து மட்டுமே நன்கொடை திரட்டப்படுமே தவிர பொது மக்களிடமிருந்து அல்ல என்று மஇகாவின் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் குறிப்பிட்டார்.

கோவிட்-19 பெருந்தொற்றால் மருத்துவ நெருக்கடி, நிதி நெருக்கடி ஆகிவற்றால் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள தமிழகத்திற்கு உதவுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த கோரிக்கைக்கு ஏற்ப கணிசமான நிதியுதவி வழங்க மஇகா முன்வந்துள்ளது.

ஆனால் இந்நிதி வர்த்தக தரப்பினரிடமிருந்து மட்டுமே நிதி திரட்டப்பட்டு ஜூன் மாத இறுதிக்குள் அந்நிதியை வழங்க மஇகா முடிவெடுத்துள்ளது என்றும் மனிதவள அமைச்சருமான டத்தோஶ்ரீ சரவணன் கூறினார்.

போலீசார் மீது பட்டாசு வீச்சு- மூவர் கைது

 கோலாலம்பூர்-

தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடித்தது மட்டுமல்லாது அதனை போலீசாரை நோக்கி வீசிய சம்பவம் தொடர்பில் பதின்ம வயதினர் உட்பட மூவரை  போலீசார் கைது செய்தனர்.

அடுக்குமாடி குடியிருப்பின் 11ஆவது மாடியிலிருந்து தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடித்து விளையாடிய 12,13,44 ஆகிய மூவரும் கைது செய்யப்பட்ட நிலையில் 13 வயது ஆடவனிடமிருந்து 48 வகையான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன என்று செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பே எங் லாய் தெரிவித்தார்.

அதே குடியிருப்பில் இரவு 11 மணியளவில் லைசென்ஸ் இன்றி பட்டாசுகளை விநியோகம் செய்த 58 வயது ஆடவர் கைது செய்த போலீசார்130 வகையான பந்து பட்டாசுகளை வாண வெடிகளையும் கைப்பற்றினர் என்றார் அவர்.

ICU வார்டுகள் நிரம்பியுள்ளன

 கோலாலம்பூர் -

நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவு நிரம்பி கிடப்பதால் அரசாங்கம் நிர்ணயித்துள்ள எஸ்ஓபி நடைமுறைகளை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என்று சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

அம்பாங், செலாயாங், சுங்கை பூலோ உட்பட கோவிட்-19 பெருந்தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் அனைத்து மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவுகளும் நிரப்பப்பட்டு நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதாக தமது முகநூல் பக்கத்தில் சுகாதார அமைச்சு இவ்வாறு கூறியுள்ளது.

இந்தியாவிலிருந்து வருபவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும் நாட்கள் 21ஆக உயர்வு

 கோலாலம்பூர் -

இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு வருகை புரிபவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளும் நாட்களை 14இல் இருந்து 21 நாட்களாக அரசாங்கம் நீட்டித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அண்மையில் மலேசியாவுக்கு வருகை புரிந்த 132 பேரில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் எஞ்சியவர்கள் பரிசோதனை செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

வீரியமிக்க உருமாறிய இந்திய தொற்று நாட்டுக்குள் பரவாமல் கட்டுப்படுத்தவே இந்நடவடிக்கை என்று சுகாதார தலைமை இயக்குனர் டத்தோஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் தெரிவித்தார்.

Friday, 14 May 2021

அமெரிக்கர்கள் முகக் கவசம் அணிய தேவையில்லை- ஜோ பைடன்

நியூயார்க்-

கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாக போட்டுக் கொண்ட அமெரிக்கர்கள் இனி முகக் கவசம் அணிய தேவையில்லை என்று அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

கட்டடங்களிலும் வெளியிடங்களிலும் இனி முகக் கவசம் அணிய தேவையில்லை என குறிப்பிட்ட ஜோ பைடன், இதுவொரு சிறந்த நாள் என்று வர்ணித்தார்.

ஆயினும் பேருந்து, விமானம், மருத்துவமனை போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கப்பல்கள் அனைத்தும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படும்

 

கோலாலம்பூர்-

இந்தியாவிலிருந்து வரும் கப்பல்கள் அல்லது நுழைவாயிலில் நுழையும் கப்பல்களில் இருக்கும் அனைவரும் 14 நாட்களுக்கு கடலிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மலேசிய கப்பல் துறை கப்பல் பயணங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள எஸ்ஓபி நடைமுறைகளை மேம்படுத்தியுள்ளது. அதன்படி 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கும் பின்னரே கப்பல்கள் துறைமுகத்தை நெருங்க அனுமதிக்கப்படும் என்று மலேசிய கப்பல் துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழக மக்களுக்கு கணிசமான நிதியுதவி வழங்குவோம்- டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஶ்ரீ சரவணன்

 

கோலாலம்பூர்-

கோவிட்-19 பெருந்தொற்றால் மருத்துவ நெருக்கடி, நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள தமிழக மக்களுக்கு உதவும் பொருட்டு தமிழக அரசின் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு மஇகாவின் சார்பிலும் மலேசிய தமிழர்களின்  சார்பிலும் கணிசமான தொகை வழங்கப்படும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனும் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணனும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.

மலேசியத் தமிழர்கள் தங்களின் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு தமிழர்களுக்கும் தமிழக அரசுக்கும் கைகொடுக்க வேண்டியதும் மனிதாபிமான அடிப்படையில் இயன்ற உதவிகளை வழங்குவதும் நமது கடமை என்றும் தமிழ்நாடு கோவிட்-19 நிவாரணங்களுக்கு நிதியுதவி அளிக்க விரும்பும் பொது அமைப்புகளோ தனிநபர்களோ மஇகா தலைமையகம் அல்லது தங்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என்று ஓர் அறிக்கையில் அவ்விருவரும் குறிப்பிட்டுள்ளனர்.





உருமாறிய தொற்றுகளுக்கு எதிராக போராட வேண்டும்- டத்தோஶ்ரீ நோர் ஹிஷாம்

கோலாலம்பூர்-

கோவிட்-19 வைரஸ் தொற்றின் தினசரி எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதோடு அதிக தொற்று, மரண எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் திறன் கொண்ட உருமாறிய தொற்றுகளுக்கு எதிராக போராட வேன்டும் என்று சுகாதார தலைமை இயக்குனர் டத்தோஶ்ரீ டாக்டட்ர் நோர் ஹிஷாம் தெரிவித்தார்.

இன்னும் சில வாரங்களின் தினசரி எண்ணிக்கை ஐந்து இலக்கங்களை எட்டலாம் என கூறிய அவர், ஐக்கிய சிற்றரசு, தென்னாப்பிரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகளின் உருமாறிய தொற்றுகளினால் நோய் பரவுவதை கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு தீவிரமாக செயல்பட்டு வருவதாக அவர் மேலும் சொன்னார்.

ஜூன் மாதத்தில் 8,000-ஐ தொடும் கோவிட்-19 பாதிப்புகள்

கோலாலம்பூர்-

அரசாங்கம் நிர்ணயித்துள்ள எஸ்ஓபி நடைமுறைகளை பின்பற்ற தவறினால் ஜூன மாதவாக்கில் ஒரு நாளைக்கு கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 8,000-ஐ தொடும் என சுகாதார அமைச்சின் ஆய்வுகள் கூறுகின்றன.

 முந்தைய கணிப்புகளுடன் ஒப்பிடும்போது மே 12ஆம் தேதி முதல் நோய் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து காட்டுகின்றன.

இதற்கு முன் சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் ஜூன் மாதத்தில் ஒருநாள் 5,000 நோய் தொற்றுகள் இருக்கும் என கணித்தது. ஆனால் புதிய ஆய்வில் அவ்வெண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.