ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
சிறையில் தடுத்து வைக்கப்பட்ட
போது கடுமையான தாக்குதலுக்கு இலக்கானதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக நம்பப்படும்
ஏ.கணபதியின் மரணத்தில் நீடிக்கும் மர்மம் விலக சுயேட்சை விசாரணை ஆணையம் அமைக்கப்பட
வேண்டும் என்று மஇகா உச்சமன்ற உறுப்பினர் மு.வீரன் வலியுறுத்தினார்.
இந்தியர்கள் என்றாலே குண்டர்கள்,
குற்றவாளிகள் என முத்திரை குத்தி விசாரணை எனும் பெயரில் சிறையில் தாக்குதலுக்கு இலக்காகி
மரணிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகிக் கொண்டே இருக்கின்றன.
விசாரணை எனும் பெயரில் அழைத்துச்
செல்லப்படும் இந்தியர்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டபோது உடல்நலம் குன்றியதால் மரணித்தனர்
என்று கூறும் போலீசாரின் நடவடிக்கை இனியும் மக்களிடம் எடுபடாது என்று குறிப்பிட்ட வீரன்,
கால்கள் வீங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணபதிக்கு அறுவைச் சிகிச்சையின்
மூலம் கால்கள் அகற்றப்பட்டது. ஆயினும் சிகிச்சை பலனின்றி கடந்த 18ஆம் தேதி அவர் மரணமடைந்தது
இந்திய சமுதாயத்தில் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணைக்காக காவல் நிலையம் செல்லும்
வரை உடல்நலத்துடன் இருந்த கணபதி, போலீசாரின் விசாரணைக்குப் பின்னர் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு கால்கள் அகற்றப்படும் நிலை ஏற்பட்டது ஏன்? என்ற கேள்வி மிக சாதாரணமாக
எழுகிறது.
ஆகவே, கணபதியின் மரணத்தில் சூழந்துள்ள
மர்மங்கள் விலகுவதற்கு ஏதுவாக சுயேட்சை விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று வீரன்
வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment