ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
இந்து ஆலயங்கள் தொடர்பில் மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கூறிய கருத்துகளின் உண்மைத்தன்மையை அறியாமல் பொன்.வேதமூர்த்தி உளறக்கூடாது என்று மஇகா மத்திய செயலவை உறுப்பினர் மு.வீரன் குறிப்பிட்டார்.
இந்நாட்டிலுள்ள இந்தியர்கள் மட்டுமல்லாது அவர்களில் கலாச்சாரமாகவும் அடையாளமாகவும் விளங்குகின்ற ஆலயங்கள், தமிழ்ப்பள்ளிகளுக்கு என்றும் அரணாக இருப்பது மஇகா மட்டுமே.
அப்படிப்பட்ட ஆலயங்களில் தொடர்கதையாக நீண்டுக் கொண்டிருக்கும் ஆலய உடைப்பு சம்பவம் வருங்கால தலைமுறையினரிடமும் தொடரப்படக்கூடாது எனும் நோக்கில் கூறப்பட்ட ஒரு கருத்தை திரித்து கூறுவது வேதமூர்த்திக்கு மட்டுமே கைவந்த கலையாகும்.
மஇகாவின் 75ஆவது மாநாட்டில் கொள்கையுரை ஆற்றிய டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் இந்து ஆலயங்கள் உடைபடுவது குறித்து தமது கருத்தை பதிவு செய்கையில், கெடா மாநிலத்தில் ஆலயங்க்ள் உடைபட்ட விவகாரத்தில் பாஸ் கட்சியின் செயலை கண்டித்ததோடு வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடரக்கூடாது என்றால் புறம்போக்கு நிலங்களில் ஆலயங்கள் நிர்மாணிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றுதான் கூறினார்.
புறம்போக்கு நிலங்களிலும் தனியார் நிலத்திலும் ஆலயங்களை கட்டுவதால் அந்நிலம் மீட்கப்படும்போது பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன. அதனாலேயே ஆலயங்களை கட்டுவதற்கு முன்னர் நிலத்தை சொந்தமாக்கிக் கொள்ளுங்கள். சொந்த நிலத்தில் ஆலயத்தை கட்டினால் இதுபோன்ற பிரச்சினைகள் எழாது என்ற கருத்தை தான் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் முன்வைத்தாரே தவிர இருக்கும் ஆலயங்களை உடைக்க வேண்டும் என்று ஒருபோதும் கூறியதில்லை.
கம்போங் ஜாவா ஆலய உடைப்புச் சம்பவத்தை சாதமாக்கி ஹிண்ட்ராஃப் போராட்டத்தின் வழி இந்திய சமுதாயத்தில் கிடைக்கப்பெற்ற புகழை வைத்து தேசிய முன்னணி அரசில் துணை அமைச்சராகவும் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் முழு அமைச்சராகவும் பதவி வகித்த வேதமூர்த்தி நாட்டிலுள்ள ஆலயங்கள் பாதுகாக்கப்பட எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பதை பட்டியலிட்டு காட்ட முடியுமா?
நாட்டிலுள்ள ஆலயங்களின் வளர்ச்சிக்காக மஇகா செய்த சேவையில் 10 விழுக்காட்டை கூட பூர்த்தி செய்யாத வேதமூர்த்தி, டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் கூறிய கருத்து புரியவில்லை என்றால் வாய் மூடி கிடக்க வேண்டும். அதை விடுத்து நானும் இந்திய சமுதாயத்தில் ஒரு ஹீரோ தான் என்ற நினைப்பின் கண்டதை உளறி கொட்டக்கூடாது.
உங்களது ஆட்டமெல்லாம் முடிந்து விட்டது, மஇகாவின் சேவை என்ன? என்பதையும் உங்களின் சேவை என்ன? என்பதை கடந்த 22 மாத கால பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் இந்திய சமூகம் நன்றாகவே பார்த்து விட்டது என்று வீரன் காட்டமாக கூறினார்.
No comments:
Post a Comment