Friday, 9 April 2021

இந்திய பாலர் பள்ளி ஆசிரியர்களின் 4 மாத சம்பளம் தேக்கம்- மித்ரா கவனிக்குமா?

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

இந்தியர் சார்ந்த பொது நிகழ்வுகளுக்கும் பொது இயக்கங்களுக்கும் மானியத்தை வாரி வழங்கி கொண்டிருக்கும் மித்ரா எனப்படும் மலேசிய இந்தியர் சமூக உருமாற்றப் பிரிவு, நாட்டில் செயல்பட்டு கொண்டிருக்கும் இந்திய பாலர் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு 4 மாத கால சம்பளத்தை வழங்காமல் இழுபறி நிலையை ஏற்படுத்தியுள்ளதாக அறியப்படுகிறது.

நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு மாணவர்களைச் சேர்க்கும் விதமாக 215 பாலர் பள்ளிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் 400க்கும் அதிகமான பட்டதாரி ஆசிரியர்கள் பணிபுரிந்து வரும் இவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மாதாந்திர சம்பளத்தை கொடுப்பதில் ‘மித்ரா’  இழுபறியை நிலையை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

பி40 பிரிவைச் சேர்ந்த குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாலர் கல்வியை  போதிக்கும் இந்த பாலர் பள்ளிகள் தொடர்ந்து செயல்பட முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தொடக்கி வைத்த ‘செடிக்’ அமைப்பின்  வழி மானியம் வழங்கப்பட்டு வந்தது.

இந்த பாலர்கள் பள்ளிகளை 5 அரசு சார்பற்ற இயக்கங்கள் வழி நடத்தி வருகின்ற நிலையில் அவற்றின் மூலம் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. அந்த இயக்கங்களின் வழியே ஆசிரியர்களுக்கு மாதச் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது.

2018இல் நிகழ்ந்த ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் செடிக் அமைப்பு ‘மித்ரா’ என பெயர் மாற்றம் கண்டதோடு முன்னாள் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி ஒற்றுமை துறை அமைச்சின் கீழ் மித்ராவை ஒரு பிரிவாக மாற்றியமைத்தார்.

முன்பு ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை தலை தூக்கியபோது பல மாதப் போராட்ட்திற்கு பின்னர் சுமூக தீர்வு காணப்பட்டது. ஆனால் இப்போது மீண்டும் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை தலை எடுத்துள்ளது என்று பெயர் குறிப்பிட விரும்பாத பாதிக்கப்பட்ட ஒருவர் ‘பாரதம்’ இணைய ஊடகத்திடம் வேதனையை பகிர்ந்துக் கொண்டார்.

பொது இயக்கங்களின் நிகழ்ச்சிகளுக்கும் பொது இயக்கங்களுக்கும் மானியத்தை வாரி வழங்கும் ‘மித்ரா’ இந்திய பலர் பள்ளி விவகாத்தில் மட்டும் மெளனம் காப்பது?

4 மாத கால சம்பளம் இல்லாமல் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் ஒரு குடும்பமும் வயிறும் உண்டு என்பதை ‘மித்ரா’  அறிந்து வைத்துள்ளதா?

சம்பளம் இல்லாமலும் இந்திய சமுதாயத்தின் விருட்சங்களான சிறார்களின் கல்வி எவ்விதத்திலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக பணியாற்றும் ஆசிரியர்களின் கண்ணீருக்கு தீர்வு எப்போது கிடைக்கும்?


No comments:

Post a Comment