Sunday 24 January 2021

தைப்பூசத்திற்கு சிறப்பு விடுமுறை- கெடாவை மட்டும் நெருக்குவதா? கெடா எம்பி-இன் வாதம் ஏற்புடையதா?

எழுத்து; ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

இந்தியர் சார்ந்த விவகாரங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வரும் கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் தற்போது கொளுத்தி போட்டுள்ள தீப்பொறி காட்டுத்தீயாய் பற்றி எரிகிறது.

இந்தியர்கள், மஇகா, கள்ளுக்கடை என பல சர்ச்சைகளின் மன்னனாக விளங்கும் முகமட் சனுசி இந்தியர்களின் பெருவிழாவான தைப்பூச விழாவில் கை வைத்து விட்டதன் விளைவு தற்போது பல திசைகளில் இருந்தும் எதிர்ப்பலைகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

அப்படி என்னதான் சொன்னார்?

வரும் ஜனவரி 28ஆம் தேதி முருகப் பெருமானுக்குரிய தைப்பூச விழா இந்தியர்களின் பக்தி விழாவாகவும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தும் திருநாளாகவும் கருதப்படுகிறது.

ஆனால், உலகையே உலுக்கி வரும் கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்றால் நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் (பிகேபி )தைப்பூச விழாவை வீட்டிலிருந்தே கொண்டாடும் நிலைக்கு மலேசிய இந்தியர்கள் ஆளாகியுள்ளனர்.

இதனை முன்னிட்டு, கெடா மாநிலத்தில் தைப்பூச பெருநாளுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு விடுமுறை (Cuti Peristiwa) ரத்து செய்யப்படுவதாக முகமட் சனுசி செய்த அறிவிப்பு  அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி மலேசிய இந்தியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பிகேபி அமலாக்கத்தினால் மக்கள் வீட்டிலுருந்தே வேலை செய்வதே விடுமுறையாக கருதப்படுவதால் இந்த சிறப்பு விடுமுறை ரத்து செய்யப்படுவதாக அவர் அதற்கான காரணத்தையும் விவரித்தார்.

ஏன் இந்த கொந்தளிப்பு?

பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிழ்க்கப்பட்டு பாஸ் கட்சியின் தலைமையில் பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சி அமைக்கப்பட்ட பின்னர் அங்கு மேற்கொள்ளப்பட்ட கோவில் உடைக்கப்பட்ட சம்பவமே பாஸ்- இந்திய சமூகத்திற்கான கருத்து மோதலுக்கு வித்திட்டது.

கோவில் உடைப்பு  சம்பவத்திற்கு எதிராக குரல் கொடுத்த தனது கூட்டணி கட்சியான மஇகா தலைவர்களை சாடியது மட்டுமின்றி மஇகாவின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று முகமட் சனுசி முன்வைத்த அறிக்கை மஇகா தலைவர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சியைச் சேர்ந்த இந்தியத் தலைவர்களின் கண்டனத்திற்கும் ஆளானார். 

குறுகிய காலத்திற்குள்ளேயே இந்தியர் சார்ந்த பல விவகாரங்களில்  சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டு வரும் முகமட் சனுசியின் தற்போது தைப்பூச விழாவை பிகேபி அமலாக்கத்துடன் முடிச்சு போட்டு சிறப்பு விடுமுறையை ரத்து செய்துள்ளது பலரது கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.

கண்டனக் குரல் எழுப்பியது யார்?

கெடா மாநிலத்தில் தைப்பூச விழாவுக்கான சிறப்பு விடுமுறையை ரத்து செய்த முகமட் சனுசிக்கு மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், மனிதவள அமைச்சரும், மஇகாவின் துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ எம்.சரவணன், பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி, முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ், செனட்டர் டி.மோகன், மஇகாவின் உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா, கியூபெக்ஸ் உட்பட பலர் தங்களது கண்டனத்தை பதிவு செய்திருந்தனர்.

கெடா மந்திரி பெசாரின் வாதம் ஏற்புடையதா?

தைப்பூச பெருவிழாவுக்கான சிறப்பு விடுமுறையை ரத்து செய்ததற்கு பல தரப்பினருடமிருந்தும் எதிர்ப்புகள் வந்த போதிலும் தமது முடிவில் மாற்றம் இல்லை என முகமட் சனுசி உறுதியாக இருக்கும் சூழலில், தைப்பூசத்திற்கான சிறப்பு விடுமுறைக்கு கெடா மாநிலத்தை மட்டும் நெருக்குவது ஏன்? என்று முகமட் சனுசி, அவரின் அரசியல் செயலாளர் அஃப்னான் அமிமி ஆகியோர்  வாதமும் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்தியர்கள் வாழும் பெருவாரியான மாநிலங்களான பகாங், மலாக்கா உட்பட பெர்லிஸ், கிளந்தான், திரெங்கானு, சபா, சரவாக் ஆகிய மாநிலங்களில் தைப்பூச திருநாளுக்கான விடுமுறை இல்லாதபோது கெடா மாநிலத்தை மட்டும் குறி வைத்து கேள்வி எழுப்புவது ஏன்? எனவும் தைப்பூசத்திற்கு விடுமுறை வேண்டுமானால் பொது விடுமுறையாக அறிவிக்கச் சொல்லி மத்திய அரசிடம் கோருங்கள் எனவும் காட்டமான பதிலை இவர்கள் தெரிவித்துள்ளனர்.

தைப்பூச கொண்டாடத்திற்கு தேவை பொது விடுமுறையா? சிறப்பு விடுமுறையா?

மலேசியாவில் வாழ்கின்ற அனைத்து இனத்தவர்களின் சமய உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என இப்போது அறிக்கை விடும் அனைத்து தலைவர்களும் தங்களின் ஆட்சி அதிகாரத்தின்போது தைப்பூச விடுமுறையை ஏன் தேசிய விடுமுறையாக அறிவிக்க தவறினர்?

மலேசியாவின் அடையாளச் சின்னங்களில் இரட்டை கோபுரம், புத்ரா ஜெயா, தவிர்த்து பத்துமலை முருகன் திருத்தலமும் தவிர்க்கப்பட முடியாத ஒரு அடையாளமாகும். இதே பத்துமலை திருத்தலத்திற்கு முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் பலமுறை வருகை புரிந்துள்ளார்.

கெடா மாநிலத்தில் தைப்பூச பெருநாளுக்கான சிறப்பு விடுமுறையை டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கே அறிவித்ததுதான். 2013ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கெடா மாநிலத்தை பாஸ்- பக்காத்தான் ராக்யாட் கூட்டணியிடமிருந்து மீட்டெடுத்தப் பின்னர் தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 2014ஆம் ஆண்டில் கெடா மாநிலத்தில் சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அனைத்து இனங்களின் சமய உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என குரலெழுப்பும் டத்தோஶ்ரீ நஜிப் தாம் பிரதமராக பதவி வகித்த காலத்தில் தைப்பூச விடுமுறையை ஏன் தேசிய விடுமுறையாக அறிவிக்கவில்லை?

அதேபோன்று தேசிய முன்னணி ஆட்சி புரியும் மாநிலங்களான பகாங், மலாக்கா மாநிலங்களில் அதிகமான இந்தியர்கள் வாழ்கின்ற நிலையில் அங்கு அம்மாநிலங்களில்  சிறப்பு விடுமுறை அறிவிக்கச் சொல்லி இன்னமும் குரல் எழுப்பாதது ஏன்?

இப்போது ஆட்சி புரியும் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தின் அங்கமாக தேசிய முன்னணி விளங்கும் நிலையில் தைப்பூச பெருவிழாவுக்கு பொது விடுமுறை அறிவிப்பதற்கான கோரிக்கையையாவது முன்வைக்க தேசிய முன்னணித் தலைவர்கள் முன்வருவார்களா?


No comments:

Post a Comment