Sunday, 31 January 2021

மலேசிய வரலாற்றில் முதன் முறையாக மின்னியல் பொங்கல் விழா - கணபதிராவ் தொடங்கி வைத்தார்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-

கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்றால் உலகமே முடங்கியுள்ள நிலையில் சமய, கலாச்சார நிகழ்வுகளும் களையிழந்த நிலையில் உள்ளன. எந்தவொரு இந்தியர் சமய நிகழ்வுகள் மறைந்து விடாமல் பாதுகாக்கும் வகையில் கோத்தா கெமுனிங் வட்டார இந்தியர்கள் மக்களை ஒன்றிணைக்கும் வகையில் 'மின்னியல் பொங்கல் விழா' சிறப்பாக நடைபெற்றது.

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினருமான வீ.கணபதிராவ் தலைமையில் இன்றுக் காலை தாமான் ஶ்ரீ மூடாவில் இப்பொங்கல் விழா தொடங்கி வைத்தார்.

கோத்தா கெமுனிங் மட்டுமல்லாது கிள்ளான், உலு சிலாங்கூர், பந்திங், கோலசிலாங்கூர் உட்பட பல பகுதிகளை சேர்ந்த 200க்கும் அதிகமான இந்தியக் குடும்பங்கள் 'ZOOM' செயலியின்  வழி ஒருங்கிணைந்து தத்தம் இல்லங்களில் பொங்கல் வைத்து குதூகலித்தனர்.

இந்நிகழ்வு குறித்து கருத்துரைத்த கணபதிராவ், கோவிட்-19 வைரஸ் பாதிப்பு மக்கள் ஒன்றுகூடலை சிதறச்செய்துள்ளது. ஆயினும் நமது சமய  மரபுகள் அழிந்திடாமல் காக்க வேண்டியது நமது கடமையாகவும் உள்ளது.

அதனை முன்னிறுத்தியே 'ZOOM' மின்னியல் வாயிலாக பொங்கல் விழாவை ஏற்பாடு செய்து 200க்கும் அதிகமான இந்தியக் குடும்பங்கள் அதில் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

தைப்பொங்கல் சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாளாக இருக்கலாம். அதையும் தாண்டி நமது கலாச்சாரத்தின் அடையாளங்களில் பொங்கலும் ஒன்று. அதனை அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டுச் செல்வது நமது கடப்பாடாகும். அதனை உணர்ந்து இந்த பொங்கலை சிறப்பாக ஏற்பாடு செய்த நிகழ்வு ஏற்பாட்டாளர் சுகுமாறன் முத்துசாமியை வெகுவாக பாராட்டுகிறேன் என்று கணபதிராவ் குறிப்பிட்டார்.

மேலும், பொங்கல் விழா என்றாலே ஒன்றுகூடி பொங்கல் வைப்பதுதான் நினைவுக்கு வரும். ஆனால் தற்போதைய நெருக்கடி காலகட்டத்தில் மக்களை ஒன்றிணைக்கவும் பொங்கல் விழாவின் மரபை அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டுச் செல்லவும் இந்த மின்னியல் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டது என்று சுகுமாறன் முத்துசாமி கூறினார்.

மலேசியாவில் முதன் முதலாக நடத்தப்பட்ட மின்னியல் பொங்கல் விழாவில் 1,000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு பொங்கல் திருநாளை பற்றிய தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் ஷா ஆலம் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் ராயுடு, யுகராஜா, தாமான் ஶ்ரீ மூடா ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத் தலைவர் கோ.குமரேசன், உதவித் தலைவர் மோகன் பொன்னன் கலந்து கொண்டனர்.

Friday, 29 January 2021

மாலை மரியாதை நிமித்தமாகவே முகக்கவரியை கழற்றினேன் - டத்தோஶ்ரீ சரவணன்

 கோலாலம்பூர்-

பத்துமலை தேவஸ்தானம் வழங்கிய மாலை மரியாதையை ஏற்பதற்காகவே முகக்கவரியை கழற்றினேன். அதுவும் சிறிது நேரம் மட்டுமே என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் விவரித்தார்.

தைப்பூச திருநாளையொட்டி பத்துமலை திருத்தலத்தற்கு டத்தோஸ்ரீ சரவணன் சென்றதும் முகக்கவரியை அணியவில்லை என்றும் கோவிட்-19 எஸ்ஓபி-ஐ மீறினார் எனவும் சமூக ஊடகங்களில் சிலர் விமர்சனம் செய்தனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த டத்தோஶ்ரீ சரவணன், தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வெள்ளி ரதம் புறப்படுவதற்கு உதவி புரிந்ததன் அடிப்படையில் ஆலய நிர்வாகம் முன்வைத்த அழைப்பு ஏற்றுக் கொண்டே பத்துமலைக்குச் சென்றேன். 

அதுவும் ஆலயத்திற்குச் செல்வதற்கு போலீசாரின் அனுமதியை பெற்றப் பின்னரே அங்கு சென்றேன். அங்கு ஆலய தரப்பில் மாலை அணிவித்தபோது மரியாதை நிமித்தமாக முகக்கவரியை கழற்றி மாலையை பெற்றுக் கொண்டேன், அதுகூட சில நிமிடம் மட்டுமே. பின்னர் முகக்கவரியை அணிந்து கொண்டேன்.

மேலும், மேளதாளங்கள் இசைக்க ஏற்பாடு செய்யப்பட்டது தமக்கு தெரியாது. அங்கு சென்ற பின்னர்  மேளதாளங்கள் இசைக்கப்பட்டதை அப்போதுதான் உணர்ந்ததாக அவர் மேலும் சொன்னார்.


உச்சமடையும் கோவிட்-19; தோல்வி காண்கிறதா பிகேபி?

கோலாலம்பூர்- 

பெரும் அச்சுறுத்தலாக மாறி வரும் கோவிட்-19 பெருந்தொற்றை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பிகேபி) தோல்வி கண்டுள்ளதா? எனும் கேள்வி மக்களிடத்தில் எழுந்துள்ளது.

கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இன்று இந்நோயின் தீவிரம் 5ஆயிரமாக உயர்வு கண்டுள்ளது.

கோவிட்-19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பிகேபி அமல்படுத்தப்பட்டு இரு வாரங்களை கடந்து விட்ட நிலையில் அதன் தீவிரம் இன்னும் அதிகமாகவே உள்ளது.

நிலைமை இவ்வாறே சென்றுக் கொண்டிருந்தால் பிகேபி அமல்படுத்தி என்ன பயன்? என்று கேள்வி பெருவாரியான மக்களிடையே எழுந்துள்ளது.

Wednesday, 27 January 2021

உள்ளமே ஆலயம் என்பதை போதிப்பது இந்துமதம்- டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்-

தமிழ்க் கடவுளாகப் போற்றப்படும் முருகப் பெருமானுக்காகக் கொண்டாடப்படும்  தைப்பூசத் திருவிழா நமது நாட்டின் அடையாளங்களில் ஒன்றாகும். 



ஏறத்தாழ ஒவ்வொரு மாநிலத்திலும், முக்கிய முருகன் ஆலயங்களில் இரத ஊர்வலம், காவடிகள், என விமரிசையான திருவிழாவாகக் கொண்டாடப்படும்  தைப்பூசம் இந்த முறை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக முற்றிலும் நம்மால் எப்போதும்போல் கொண்டாடப்பட முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதுவும் இறைவனின் சித்தம் என ஏற்றுக் கொள்வோம் என்று மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

நமது இந்து சமயம் என்பது ஆலயங்களுக்கு செல்வதை மட்டும் நமக்கு போதிக்கவில்லை. காவடிகள் எடுப்பது, பால்குடம் எடுப்பது, ஆலயங்களில் பூஜைகள் நடத்துவது போன்றவற்றை மட்டும் இந்து மதம் போதிக்கவில்லை.

விளம்பரம்

மாறாக, உள்ளமே ஆலயம் எனச் சொல்வதும் இந்துமதம்தான். ஒவ்வொரு இல்லத்தையும் தூய்மையாகவும் பக்திமயமாகவும் வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்துவதும் இந்து மதம்தான்.

அதை நினைவில் நிறுத்தி இந்த முறை நாம் நமது குடும்பத்தினரோடு, தைப்பூசத் திருவிழாவை இல்லங்களில் கொண்டாடுவோம், முருகப் பெருமானை நினைத்து, கொவிட்-19 தொற்றுகளால் மக்கள் அனுபவித்து வரும் இன்னல்களும், பிரச்சனைகளும் தீரவேண்டுமென மனமுருக வேண்டிக் கொள்வோம்.

இந்தத் தைப்பூசத் திருவிழாவை வாழ்க்கையின் ஒரு வித்தியாச அனுபவமாக கொண்டாடி மகிழ்வோம்.

நாடும் நமது இந்திய சமூகமும், நமது சக மலேசிய இனத்தவர்களும் எதிர்வரும் ஆண்டில் செழிப்போடும், வளத்தோடும் வளர்ச்சி காண நாமனைவரும் முருகப் பெருமானை இந்தத் தைப்பூச நன்னாளில் வேண்டிக்கொள்வோம்.

அதே வேளையில், நாடு முழுமையிலும் அரசாங்கம் விதித்துள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுகளையும், நிபந்தனைகளையும் பின்பற்ற வேண்டும் எனவும் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு பக்கம் கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தாலும் அதை குறைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் தீவிரமாக எடுத்து வருகிறது.

கூடியவிரைவில் நமது நாட்டில் அனைத்து மலேசியர்களுக்கும் தடுப்பூசிகளைப் போடுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து கொவிட்-19 தொற்று நாட்டில் குறையும் என எதிர்பார்க்கலாம்.

எனவே, அரசாங்கம் விதித்துள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைகளுக்கேற்ப இந்த ஆண்டு தைப்பூசத்தைக் கொண்டாடி மகிழ்வோம் என்று தமறிக்கையில் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.


வீட்டையே ஆலயமாகக் கருதி முருகப் பெருமானை வேண்டுவோம் - கணபதிராவ்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-

இந்நாட்டில்  பெருவிழாவாகக் கொண்டாடப்படும் சமய விழாவான தைப்பூச விழாவை மாறுபட்ட சூழலில் மலேசிய இந்தியர்கள் கொண்டாட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் குறிப்பிட்டார்.

உலகையே புரட்டி போட்டுள்ள கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக இவ்வாண்டு தைப்பூச விழா கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தங்களது வீட்டிலிருந்தே முருகப் பெருமானை மனமுருகி வேண்டிக் கொள்ளலாம்.

சமயத்திற்கும் பக்திக்கும் நடுவே சுகாதாரத்திற்கும் உயிருக்கும் முன்னிரிமை அளித்து பெருங்கூட்டத்தை தவிர்க்கும் நோக்கில் சிலாங்கூர் மாநில அரசும் தைப்பூச விழா கொண்டாட்டங்களை ரத்து செய்துள்ளது.

விளம்பரம்

எப்போதும் ஆலயத்திற்குச் சென்று முருகப் பெருமானை வழிபட்டு தங்களை தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தும் பக்தர்கள் இன்று தங்களது வீட்டையே ஆலயமாகக் கருதி மனமுருகி முருகப் பெருமானை வேண்டிக் கொள்வோம்.

பல இன மக்கள் வாழ்கின்ற இந்நாட்டில் அனைத்து மக்களின் சமய நம்பிக்கைகளும் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் எந்தவொரு சூழலிலும் மறைந்து விடாமல் சமய நல்லிணக்கமும் மக்களுக்கிடையிலான புரிந்துணர்வும் இன்னும் மேலோங்கிட வேண்டும் என்று கணபதிராவ் தெரிவித்தார்.


டத்தோஸ்ரீ சரவணன் தலையீட்டில் பினாங்கு நகரத்தார் வெள்ளிரத ஊர்வலம் - பேராசிரியர் இராமசாமி

ஜோர்ஜ்டவுன்-

பினாங்கு நகரத்தார் ஆலயத்தின் வெள்ளி ரத ஊர்வலம் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தலையீட்டில் நடைபெற்றதே தவிர பினாங்கு மாநில அரசும் தேசிய பாதுகாப்பு மன்றமும் அனுமதி வழங்கவில்லை என்று அம்மாநில துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி விவரித்தார்.

கோவிட்-19 பாதிப்பு காரணமாக இவ்வாண்டு தைப்பூச விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பினாங்கு தண்ணீர்மலை நகரத்தார் ஆலயத்தின் வெள்ளி ரத ஊவலமும் இடம்பெறாது என முன்பு அறிவிக்கப்பட்டது.

ஆனால் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் விண்ணப்பத்திற்கு ஏற்ப பத்துமலை வெள்ளிரத ஊர்வலத்திற்கு தேசிய பாதுகாப்பு மன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து பினாங்கு நகரத்தார் ஆலயத்தினரும. வெள்ளிரத ஊர்வலத்திற்கு அனுமதி கோரியிருந்தனர்.

விளம்பரம்

ஆனால் மாநில அரசு அது குறித்து விவாதிக்காத நிலையில் டத்தோஸ்ரீ சரவணன் தலையீட்டில் பினாங்கு நகரத்தார் ஆலயத்தினர் வெள்ளிரத ஊர்வலத்தை முன்னெடுத்துள்ளனர் என்று பேராசிரியர் இராமசாமி இன்று செய்தியாளர்களிடம் விவரித்தார்.

இதனிடையே இச்சம்பவம் தொடர்பில் பேராசிரியர் இராமசாமிக்கு தொலைபேசி மூலம் விளக்கமளிக்கப்படும் என்று டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.

பத்துமலை திருத்தலத்தை வந்தடைந்தது வெள்ளிரதம்

 ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் பெருவிழாவான தைப்பூச விழாவை முன்னிட்டு கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்ட வெள்ளிரதம் பத்துமலையை சென்றடைந்தது.

வள்ளி, தெய்வானை சமேதரராய் வெள்ளிரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் முருகப் பெருமான், இவ்வாண்டு பக்தர்கள் கூட்டமின்றி பத்துமலை திருத்தலத்தை நோக்கி தனது புறப்பட்டார்.

விளம்பரம்


அதிகாலை 3.00 மணியளவில் கோலாலம்பூர் மாரியம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்ட வெள்ளி ரதம் 4 மணிநேர பயணத்திற்கு பின்னர் பத்துமலையை வந்தடைந்தது.

Sunday, 24 January 2021

கோவிட்-19 பாதிப்பு குறையவில்லையென்றால் பொருளாதார முழு அடைப்பு சாத்தியமாகலாம்?

கோலாலம்பூர்-

வரும் பிப்ரவரி 4ஆம் தேதிக்குள் கோவிட்-19 வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாமல் போனால் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்கும் வகையில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பிகேபி) இறுக்கமாக்கப்படலாம் என கூறப்படுகிறது.

மலேசிய-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக தொழிலியல் சபை (Eurocham Malaysia) அதன் உறுப்பினர்களுக்கு அனுப்பியிருக்கும் கடிதத்தில் அந்த தகவலை குறிப்பிடப்பட்டிருக்கிறது.அந்த அமைப்புடன் தொடர்புடைய தரப்பு அந்த தகவலை உறுதிப்படுத்தியிருக்கிறது.

அனைத்துலக வாணிப தொழிலியல் அமைச்சுடன் Eurocham Malaysia  அமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தையில் பொருளாதார நடவடிக்கைகளை முழுமையாக நடத்தி வைக்கும் விவகாரத்தில் சுகாதார அமைச்சு உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

நாட்டில் தயாரிப்பு துறையைச் சேர்ந்த 99 கோவிட்-19 தொற்று மையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதையடுத்து அத்துறை கோவிட்-19 வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணமாக இருப்பதாக சுகாதார அமைச்சு கருதுகிறது.

எனவே, வர்த்தக தொழில்துறையில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் அனைத்தும் கோவிட்-19 தொற்றை குறைப்பதில் மேலும் ஆக்கப்பூர்வமாக செயல்படுமாறு அனைத்துலக வாணிப தொழிலியல் அமைச்சு வலியுறுத்தி இருக்கிறது.

வரி வசூலிக்கலாம், விடுமுறை தரக்கூடாதா? கெடா எம்பி-ஐ விளாசும் சமூகவலைதளவாசிகள்


ரா.தங்கமணி 

கோலாலம்பூர்-

தைப்பூச விழாவுக்கு கெடா மாநிலத்தில் வழங்கப்பட்டு  வந்த சிறப்பு விடுமுறையை ரத்து செய்வதாக அம்மாநில மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் வெளியிட்ட அறிவிப்புக்கு இந்திய சமூகத்தில் பெரும் எதிர்ப்பலை எழுந்துள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்றால் அமல்படுத்தப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பிகேபி) காரணம் காட்டி வரும் 28ஆம் தேதி கொண்டாடப்படும் தைப்பூச விழாவுக்கு கெடா மாநில அரசு சிறப்பு விடுமுறையை வழங்காது என்ற அறிவிப்பை அம்மாநில அரசு வெளியிட்டது. இதற்கு பல தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் வந்த நிலையில் சமூகவலைதளவாசிகளும் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.

சமய தீவிரவாதத்தின் தொடக்கம், இறுமாப்பின் உச்சம் என்று K S Maniam Subramaniam என்பவர் கருத்து தெரிவித்துள்ளார்.

பக்காத்தான் ஹராப்பானை ஆதரித்ததற்காக முஸ்லீம் அல்லாதோரை  பழிவாங்க முயற்சிக்கிறார் கெடா எம்பி என்று Mike Varma எனும் பயனர் கூறியுள்ளார்.

சனுசி பதவி ஏற்றுக் கொள்ளப்பட்ட காலம் முதல் இந்திய சமூகத்திற்கு தலைவலியான தலைவர் என்பதை காண்பிக்கிறார். அவரை போல் ஒரு இனவாத தலைவருக்கு எப்படி நம் இனத்தவர் ஆதரவு தருகின்றனர் என்பதுதான் வியப்பாக இருக்கிறது. பாஸ் கட்சி ஒரு சந்தர்ப்பவாத கட்சி என்பதை காலம் காலமாக நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். தூய்மையான பாஸ் கட்சியின் தலைவர் நிக் அஸிஸ் அவர்களோடு அந்த கட்சிக்கு இருந்த மரியாதை இப்போது 10 சதவீதம் கூட இல்லை. இதுதான் உண்மை என்று Kirupaul Kiruba கருத்து பதிவிட்டுள்ளார்.

கெடாரத்தில் அதிக தமிழ் இந்துக்கள் வாழ்கிறார்கள், பாரம்பரிய விழா அங்கு நடந்தது. ஆகையால் அதிகம் இந்துக்கள் மாநிலமாக கெடா விளங்குகிறது, அவர்களிடம் வரி வசூலிக்கும் மாநில அரசு ஏன் விடுமுறையை தரக்கூடாது என்று வள்ளுவர் குறள் வள்ளுவம் எனும் சமூக ஊடக பயனர் கருத்து பதிவிட்டுள்ளார்.

தைப்பூசத்திற்கு சிறப்பு விடுமுறை- கெடாவை மட்டும் நெருக்குவதா? கெடா எம்பி-இன் வாதம் ஏற்புடையதா?

எழுத்து; ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

இந்தியர் சார்ந்த விவகாரங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வரும் கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் தற்போது கொளுத்தி போட்டுள்ள தீப்பொறி காட்டுத்தீயாய் பற்றி எரிகிறது.

இந்தியர்கள், மஇகா, கள்ளுக்கடை என பல சர்ச்சைகளின் மன்னனாக விளங்கும் முகமட் சனுசி இந்தியர்களின் பெருவிழாவான தைப்பூச விழாவில் கை வைத்து விட்டதன் விளைவு தற்போது பல திசைகளில் இருந்தும் எதிர்ப்பலைகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

அப்படி என்னதான் சொன்னார்?

வரும் ஜனவரி 28ஆம் தேதி முருகப் பெருமானுக்குரிய தைப்பூச விழா இந்தியர்களின் பக்தி விழாவாகவும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தும் திருநாளாகவும் கருதப்படுகிறது.

ஆனால், உலகையே உலுக்கி வரும் கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்றால் நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் (பிகேபி )தைப்பூச விழாவை வீட்டிலிருந்தே கொண்டாடும் நிலைக்கு மலேசிய இந்தியர்கள் ஆளாகியுள்ளனர்.

இதனை முன்னிட்டு, கெடா மாநிலத்தில் தைப்பூச பெருநாளுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு விடுமுறை (Cuti Peristiwa) ரத்து செய்யப்படுவதாக முகமட் சனுசி செய்த அறிவிப்பு  அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி மலேசிய இந்தியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பிகேபி அமலாக்கத்தினால் மக்கள் வீட்டிலுருந்தே வேலை செய்வதே விடுமுறையாக கருதப்படுவதால் இந்த சிறப்பு விடுமுறை ரத்து செய்யப்படுவதாக அவர் அதற்கான காரணத்தையும் விவரித்தார்.

ஏன் இந்த கொந்தளிப்பு?

பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிழ்க்கப்பட்டு பாஸ் கட்சியின் தலைமையில் பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சி அமைக்கப்பட்ட பின்னர் அங்கு மேற்கொள்ளப்பட்ட கோவில் உடைக்கப்பட்ட சம்பவமே பாஸ்- இந்திய சமூகத்திற்கான கருத்து மோதலுக்கு வித்திட்டது.

கோவில் உடைப்பு  சம்பவத்திற்கு எதிராக குரல் கொடுத்த தனது கூட்டணி கட்சியான மஇகா தலைவர்களை சாடியது மட்டுமின்றி மஇகாவின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று முகமட் சனுசி முன்வைத்த அறிக்கை மஇகா தலைவர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சியைச் சேர்ந்த இந்தியத் தலைவர்களின் கண்டனத்திற்கும் ஆளானார். 

குறுகிய காலத்திற்குள்ளேயே இந்தியர் சார்ந்த பல விவகாரங்களில்  சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டு வரும் முகமட் சனுசியின் தற்போது தைப்பூச விழாவை பிகேபி அமலாக்கத்துடன் முடிச்சு போட்டு சிறப்பு விடுமுறையை ரத்து செய்துள்ளது பலரது கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.

கண்டனக் குரல் எழுப்பியது யார்?

கெடா மாநிலத்தில் தைப்பூச விழாவுக்கான சிறப்பு விடுமுறையை ரத்து செய்த முகமட் சனுசிக்கு மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், மனிதவள அமைச்சரும், மஇகாவின் துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ எம்.சரவணன், பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி, முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ், செனட்டர் டி.மோகன், மஇகாவின் உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா, கியூபெக்ஸ் உட்பட பலர் தங்களது கண்டனத்தை பதிவு செய்திருந்தனர்.

கெடா மந்திரி பெசாரின் வாதம் ஏற்புடையதா?

தைப்பூச பெருவிழாவுக்கான சிறப்பு விடுமுறையை ரத்து செய்ததற்கு பல தரப்பினருடமிருந்தும் எதிர்ப்புகள் வந்த போதிலும் தமது முடிவில் மாற்றம் இல்லை என முகமட் சனுசி உறுதியாக இருக்கும் சூழலில், தைப்பூசத்திற்கான சிறப்பு விடுமுறைக்கு கெடா மாநிலத்தை மட்டும் நெருக்குவது ஏன்? என்று முகமட் சனுசி, அவரின் அரசியல் செயலாளர் அஃப்னான் அமிமி ஆகியோர்  வாதமும் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்தியர்கள் வாழும் பெருவாரியான மாநிலங்களான பகாங், மலாக்கா உட்பட பெர்லிஸ், கிளந்தான், திரெங்கானு, சபா, சரவாக் ஆகிய மாநிலங்களில் தைப்பூச திருநாளுக்கான விடுமுறை இல்லாதபோது கெடா மாநிலத்தை மட்டும் குறி வைத்து கேள்வி எழுப்புவது ஏன்? எனவும் தைப்பூசத்திற்கு விடுமுறை வேண்டுமானால் பொது விடுமுறையாக அறிவிக்கச் சொல்லி மத்திய அரசிடம் கோருங்கள் எனவும் காட்டமான பதிலை இவர்கள் தெரிவித்துள்ளனர்.

தைப்பூச கொண்டாடத்திற்கு தேவை பொது விடுமுறையா? சிறப்பு விடுமுறையா?

மலேசியாவில் வாழ்கின்ற அனைத்து இனத்தவர்களின் சமய உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என இப்போது அறிக்கை விடும் அனைத்து தலைவர்களும் தங்களின் ஆட்சி அதிகாரத்தின்போது தைப்பூச விடுமுறையை ஏன் தேசிய விடுமுறையாக அறிவிக்க தவறினர்?

மலேசியாவின் அடையாளச் சின்னங்களில் இரட்டை கோபுரம், புத்ரா ஜெயா, தவிர்த்து பத்துமலை முருகன் திருத்தலமும் தவிர்க்கப்பட முடியாத ஒரு அடையாளமாகும். இதே பத்துமலை திருத்தலத்திற்கு முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் பலமுறை வருகை புரிந்துள்ளார்.

கெடா மாநிலத்தில் தைப்பூச பெருநாளுக்கான சிறப்பு விடுமுறையை டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கே அறிவித்ததுதான். 2013ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கெடா மாநிலத்தை பாஸ்- பக்காத்தான் ராக்யாட் கூட்டணியிடமிருந்து மீட்டெடுத்தப் பின்னர் தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 2014ஆம் ஆண்டில் கெடா மாநிலத்தில் சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அனைத்து இனங்களின் சமய உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என குரலெழுப்பும் டத்தோஶ்ரீ நஜிப் தாம் பிரதமராக பதவி வகித்த காலத்தில் தைப்பூச விடுமுறையை ஏன் தேசிய விடுமுறையாக அறிவிக்கவில்லை?

அதேபோன்று தேசிய முன்னணி ஆட்சி புரியும் மாநிலங்களான பகாங், மலாக்கா மாநிலங்களில் அதிகமான இந்தியர்கள் வாழ்கின்ற நிலையில் அங்கு அம்மாநிலங்களில்  சிறப்பு விடுமுறை அறிவிக்கச் சொல்லி இன்னமும் குரல் எழுப்பாதது ஏன்?

இப்போது ஆட்சி புரியும் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தின் அங்கமாக தேசிய முன்னணி விளங்கும் நிலையில் தைப்பூச பெருவிழாவுக்கு பொது விடுமுறை அறிவிப்பதற்கான கோரிக்கையையாவது முன்வைக்க தேசிய முன்னணித் தலைவர்கள் முன்வருவார்களா?


Thursday, 21 January 2021

எல்லை மீறிச் செல்லும் கெடா மந்திரி பெசார்- கணபதிராவ் சாடல்

ரா.தங்கமணி 

ஷா ஆலம்-

தைப்பூச திருநாளுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு விடுமுறையை ரத்து செய்வதாக அறிவித்த கெடா மாநில மந்திரி பெசார் முகமட் சனுசியின் செயல் இனத்துவேஷம் நிறைந்தது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் சாடினார்.

இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் அண்மைய காலமாக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வரும் அவரின் செயல் எல்லை மீறி கொண்டிருக்கிறது எனவும் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் காரணமாக தைப்பூச விழா ரத்து செய்யப்பட்டுள்ளதை காரணம் காட்டி சிறப்பு விடுமுறையை ரத்து செய்யும் கெடா மாநில மந்திரி பெசார் பிற மதத்தினரின் பெருநாள் காலத்திலும் இதே நடவடிக்கையை கடைபிடிப்பாரா? என்று கணபதிராவ் தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.


Saturday, 16 January 2021

பிகேபி அமலிலும் கட்டுக்குள் அடங்காத கோவிட்-19

கோலாலம்பூர்-

கோவிட்-19 வைரஸ் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நாட்டில் 6 மாநிலங்களில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பிகேபி) அமல்படுத்தப்பட்ட நிலையிலும் கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இன்று உச்சக்கட்டத்தை எட்டும் வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 4,029 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று இந்நோயினால் 8 பேர் மரணமடைந்த நிலையில் மரண எண்ணிக்கை 594ஆக பதிவு செய்ய்பட்டுள்ளது.

இந்த பெருந்தொற்றை கட்டுப்படுத்த பிகேபி அம்படுத்தப்பட்டு 4 நாட்களை கடந்த நிலையில் இந்நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகபட்சமாக உயர்வு கண்டிருப்பது நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Thursday, 14 January 2021

கோவிட்-19 எண்ணிக்கை அதிகரித்தால் பிகேபிபி மாநிலங்களில் பிகேபி அமல்படுத்தப்படலாம்

 கோலாலம்பூர்-

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பிகேபிபி), மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பிகேபிபி) ஆகியவை அம்படுத்தப்பட்டுள்ள மாநிலங்களில் கோவிட்-19 எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால் அங்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பிகேபி)  அமல்படுத்தப்படுவதை அரசாங்கம் மறுக்கவில்லை.

பிகேபி அமலாக்கத்தினால் கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது என்று பாதுகாப்பு முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

விளம்பரம்


எண்ணிக்கை அதிகரித்தால் பிகேபி அமலாக்கமும் எண்ணிக்கை குறைந்தால் பிகேபிபி அமலாக்கமும் காணும் என்று அவர் மேலும் சொன்னார்.


இந்திரா காந்தியின் வழக்கை ரத்து செய்யக்கோரி ஐஜிபி உட்பட 4 தரப்பினர் முறையீடு

கோலாலம்பூர்-

தமது முன்னாள் கணவரால் கடத்திச் செல்லப்பட்ட மகளை மீட்டுக் கொடுப்பதில் தோல்வி கண்ட அரச மலேசிய போலீஸ் படை உட்பட நான்கு தரப்பினர் மீது திருமதி இந்திரா காந்தி  தொடுத்துள்ள வழக்க ரத்துச் செய்யப்பட வேண்டும் என்று விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாலர் பள்ளி ஆசிரியையான திருமதி இந்திரா காந்தி செய்துள்ள வழக்கு ரத்து செய்யப்பட வேண்டும் என்று ஐஜிபி, அரச மலேசிய போலீஸ் படை, உள்துறை அமைச்சு, அரசாங்கம் ஆகிய தரப்பினர் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர் என்று இந்திரா காந்தியின் வழக்கறிஞர்ராஜேஷ் நாகராஜன் தெரிவித்தார்.

விளம்பரம்


தமது மகளை கடத்திச் சென்ற முன்னாள் கணவர் முகமட் ரிடுவான் அப்துல்லாவை கைது செய்து தமது மகள் பிரசன்னா டிக்சாவை தம்மிடம் மீண்டும் ஒப்படைப்பதில் இந்த நான்கு தரப்பும் தோல்வி கண்டுள்ளதை அடுத்து திருமதி இந்திரா காந்தி நான்கு தரப்பினர் மீதும் ஈப்போ உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

இஸ்லாம் மதத்தை தழுவிய இந்திரா காந்தியின் முன்னாள் கணவர்  தமது மகள் பிரசன்னா டிக்சாவையும் 2009இல் இஸ்லாத்திற்கு மதமாற்றம் செய்துள்ளார்.

இதன் தொடர்பில் தொடரப்பட்ட வழக்கில் பிரசன்னாவை மீட்டு தாயாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஈப்போ உயர்நீதிமன்றம் 2014இல் தீர்ப்பளித்தப் பின்னரும் இன்னமும் முகமது ரிடுவானையும் பிரசன்னா டிக்சாவையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீஸ் படை தோல்வியை சந்தித்துள்ளது.


புதிய வாய்ப்புகளை உருவாக்கி இன்பம் காண்போம்- டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்-

பொங்கல் திருநாள் இனிமையையும், இன்பத்தையும் கொண்டு வந்து சேர்க்கட்டும்

பிறந்திருக்கும் புத்தாண்டை நம்பிக்கையோடும், உற்சாகத்தோடும் எதிர்கொள்ள நாம் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், நமது பாரம்பரிய திருநாள்- உழைப்பாளர்களை நினைவு கூர்ந்து கௌரவிக்கும் பெருமைக்குரிய நன்னாள் - பொங்கல் மலர்கின்றது.

இந்த ஆண்டு மலர்கின்ற பொங்கல் நமது மலேசிய இந்தியர்களுக்கு வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கி, வாழ்க்கையில் இனிமையையும், இன்பத்தையும் கொண்டு வந்து சேர்க்க வேண்டுமென நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.

கடந்து சென்ற ஓராண்டில் நாம் பெற்ற பாடங்களையும், அனுபவங்களையும் படிப்பினையாகக் கொண்டு இந்த ஆண்டில் புதிய நம்பிக்கையோடு நடைபோடுவோம்.

கல்வியும் பொருளாதாரமும் இரு கண்களாகக் கொள்வோம்

கடந்த ஆண்டில் கொவிட் தொற்றால் பெரும் பாதிப்புக்குள்ளானது மக்களின் பொருளாதார வாழ்வாதாரமும், மாணவர்களின் கல்வியும்தான்.

எனவே, இந்த ஆண்டில் நமது மாணவர்களின் கல்வியில் பெற்றோர்கள் தனிக் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். அதன் மூலம், விடுபட்டுப் போன, இழந்த கல்வியை மாணவர்கள் மீண்டும் பெற்று, இந்த ஆண்டு அவர்களுக்கான பள்ளிப் பாடங்களிலும், தேர்வுகளிலும் சிறந்த முறையில் வெற்றி பெற நாம் பாடுபடுவோம்.

அதே வேளையில் பொருளாதார ரீதியில் மறக்க முடியாத பல பாடங்களையும் கடந்த ஆண்டின் கொவிட்-19 பரவல் நமக்கு கற்பித்திருக்கிறது.

எனவே, இந்த ஆண்டிலும், எதிர்வரும் காலங்களிலும் நமது இந்திய சமூகம் பொருளாதார பலத்தைப் பெருக்கிக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

அப்போதுதான் இந்த கொவிட் நிலைமை தொடர்ந்தாலும், எதிர்காலத்தில் இதுபோன்ற வேறு பிரச்சனைகளை நாம் வாழ்க்கையில் எதிர்நோக்கினாலும் நம்மால் சமாளித்து நமது குடும்பத்தைக் காப்பாற்ற முடியும்.

எனவே, இந்திய சமூகம் சொந்தத் தொழில்களிலும், இணையம் வழியான தொழில்களிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கூடுதல் நேரங்களில் சிறு தொழில்களில் ஈடுபடுவதன் மூலம் நமது குடும்பங்கள் வருமானத்தை பெருக்கிக் கொள்ள முடியும்.

கிராமப் புறங்களிலும், தோட்டப் புறங்களிலும் இருப்பவர்கள் விவசாயம் சார்ந்த தொழில்களிலும் ஈடுபட்டு தங்களினை வருமானத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். தங்களின் பொருளாதாரத்தைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கோவிட்-19 தொற்றை எதிர்கொள்ள அரசாங்கம் அதற்கான தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு இலவசமாகவே போடவிருக்கிறது என்பது நமக்கெல்லாம் மேலும் கூடுதல் உற்சாகத்தைத் தொடர்ந்திருக்கிறது. நாளடைவில் இந்தத் தொற்றின் தாக்கம் குறையும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

அதே வேளையில், நமது பொங்கலை இந்த முறை மகிழ்ச்சியாகவும், முழுமையான அளவிலும் கொண்டாட முடியாத சூழலும் ஏற்பட்டிருக்கிறது. 

அரசாங்கம் கொண்டு வந்திருக்கும் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால், நாம் இந்த முறை நமது பாரம்பரியத் திருவிழாக்களான பொங்கலையும் அதைத் தொடர்ந்து வரும் தைப்பூசத்தையும் வழக்கம்போல் கொண்டாட முடியாது என்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

கோவிட்-19 தொற்றை எதிர்கொள்ள மற்றொரு நடவடிக்கையாக அவசரகாலமும் எதிர்வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை அரசாங்கத்தால் அமுலாக்கப்பட்டிருக்கிறது.

இந்த நெருக்கடியை நமது இந்திய சமூகம், பொறுமையோடும், நன்கு சிந்தித்தும், திறந்த மனதோடும் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். மக்களின் நலன்களுக்காக, மேலும் நோயின் பாதிப்புகளால் மக்கள் சிரமத்தை எதிர்நோக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தோடும் அரசாங்கம் இந்த முடிவுகளை அமுல்படுத்தியிருக்கிறது.

எனவே, நமது பொங்கல் திருநாளை இந்த முறை நமது இல்லங்களுக்குள்ளேயே அரசாங்கம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப கொண்டாடி, நமது உடல்நலத்தையும் மற்றவர்கள் உடல் நலத்தையும் பாதுகாப்போம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

கூடிய விரைவிலேயே கொவிட்-19 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்படவிருப்பதால், வெகு விரைவில், நமது நாடு இந்த தொற்று நெருக்கடிகளில் இருந்து விடுபட்டு வெற்றி நடை போடும் – நாமும் நமது பாரம்பரிய வழக்கப்படி, நமது பெருநாட்களையும், திருவிழாக்களையும் மீண்டும் மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாடும் நிலைமை மீண்டும் வரும் -என்ற நம்பிக்கைகளோடு, பொங்கல் திருநாளை இல்லங்களிலேயே கொண்டாடி மகிழ்வோம் என்று அவர தமது வாழ்த்துச் செய்தியில்இவ்வாறு குறிப்பிட்டார்.

கொரோனாவிலிருந்து விடுபடும்வரை பொறுமை காப்போம்- டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்-

பொங்கல் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். தமிழர்களின் பண்டைய கால பழக்க வழக்கங்கள், பெருநாட்கள், விழாக்கள் அனைத்துமே வாழ்வியலோடு ஒன்றித்து இருப்பவை, ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு வித்திடுபவை என்பதில் ஐயமில்லை.

அந்த வரிசையில் தை மாதத்தில் தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் பொங்கலானது, தமிழர் திருநாளாக, இயற்கைக்கு நன்றி சொல்லும் பெருநாளாகக் கருதப்படுகிறது. குறிப்பாக அறுவடைத் திருநாளாகவும் அறியப்படும் தைப்பொங்கலில் விவசாயிகளின்  உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், அவர்களோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், நமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாக அமைகிறது.

 “பழையன கழிதலும், புதியன புகுதலும்     

  வழுவல கால வகையி னானே - நன்னூல் நூற்பா 426

நான்கு நாள் கொண்டாடப்படும் பொங்கலில், பழைய குப்பைகளை மட்டுமன்றி, பழிக்கத்தக்க குணங்களையும், செயல்களையும் நீக்கி; போற்றுதற்குரிய குணங்களையும், செயல்களையும் ஏற்போம் எனும் தத்துவத்தோடு தொடங்குகிறது “போகிப்பண்டிகை”. அடுத்து தை முதல்நாள் சூரியனுக்காக பொங்கல், மறுநாள் மாட்டுப் பொங்கல், மூன்றாம் நாள் காணும் பொங்கல் என்று தொடர்ச்சியாக மகிழ்ச்சி பொங்க, இல்லத்தில் பொங்கல் வைத்துக் கொண்டாடுவோம். 



காணும் பொங்கல் என்பது உற்றார், உறவினர், நண்பர்களைக் கண்டு, பெரியோர் ஆசி  பெறுதல் என்றாலும் இன்றைய சுகாதாரச் சூழலை மனதில் கொண்டு கொஞ்சம் விலகி நின்றே கொண்டாடுவோம். 

நமக்கு வரவில்லை என்ற அலட்சியம் வேண்டாம். கொரோனா இருக்கும் வரை பழைய வாழ்க்கை முறை சாத்தியமல்ல. புதிய நடைமுறைகளுடன் கொரோனா பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடிப்பதுதான் சிறப்பு. கொரோனாவின் தாக்கம் இன்னும் பல உள்ளங்களில், பலர் இல்லங்களில் இருந்துதான் வருகிறது. 


தைபிறந்தால் வழி பிறக்கும் என்ற கூற்றுக்கேற்ப கொரோனாவிற்கு தடுப்பூசி வந்துவிட்டது. கூடிய விரைவில் இந்த சர்வதேச பரவலில் இருந்து முழுமையாக விடுபடும் நேரமும் வந்துவிட்டது. அதுவரை கொஞ்சம் பொறுமை காப்போம். உல்லாச ஒன்றுகூடல்கள், கேளிக்கை வைபவங்களைக் கொஞ்சம் தள்ளி வைப்போம். 

அதே வேளையில் அரசாங்கம் மக்களின் பிரச்சனைகளைக் களைய முன்வைத்துள்ள பல்வேறு திட்டங்கள், குறிப்பாக மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் பெர்கேசோ வழி  “பெஞ்சானா கெர்ஜாயா” வின் ஊக்கத் தொகைகள், வேலை வாய்ப்புத் திட்டம், வேலை இழந்தோர், வேலை தேடுவோருக்கான வேலை காப்பீட்டு முறையின் நன்மைகள், MyFutureJobs வழி பணியமர்த்தம் இப்படி நிறைய உதவிகள் நிறைய உள்ளன.

மேலும் மனிதவள மேம்பாட்டு நிதி, HRDF மூலம் “பெஞ்சானா HRDF” வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டங்கள், தொழிற்புரட்சி 4.0 திட்டங்கள், திறன் மேம்பாட்டு இலவச பயிற்சிகள், சுய தொழில் செய்வோருக்கான உதவிகள் என பல்வேறு திட்டங்களும், உதவிகளும் செய்தவண்ணமே உள்ளோம். உங்களுக்கு தேவையான உதவிகளைப் பெற்று பயனடையுங்கள். 

இவ்வேளையில் சிறு தொழில் அல்லது பெரிய நிறுவனங்களை நடத்தி வரும் முதலாளிமார்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து உங்கள் பணியாளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுங்கள். சர்வதேச பரவலைத்தடுக்க பணியாளர்களுக்கும் சனிடைசர், சுத்தமான சூழல், இடைவெளி விட்டு இருக்க இடம் போன்ற புதிய நடைமுறைகளைக் கடைப்பிடிக்க போதுமான வசதிகள் இருப்பதை உறுதி செய்யுங்கள். 

இந்த தைத்திருநாளில் பொங்கல் போலவே அனைவரின் உள்ளத்திலும் இன்பம் பொங்க மனம் நிறைந்த வாழ்த்துகள். மகிழ்ச்சியான சூழல் நமக்காக உண்டு என்று நம்பிக்கையோடு வாழ்வோம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று மனிதவள அமைச்சரும் மஇகாவின் துணைத் தலைவருமான மனிதவள அமைச்சரும், ம.இ.கா தேசிய துணைத்தலைவருமான டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் தமது பொங்கல் வாழ்த்துச் செய்தியில்  குறிப்பிட்டார்.

Wednesday, 13 January 2021

நன்றியை பறைசாற்றும் பொங்கல் திருநாளை பாதுகாப்புடன் கொண்டாடுவோம்- கணபதிராவ்

கோலாலம்பூர்

உழவர் திருநாளான தைப் பொங்கல் திருநாளைக் உழவர்களும் தமிழர்களும் கொண்டாடி வருகின்றனர். உழவுக்கு பெரும் துணையாக இருக்கின்ற சூரியனுக்கும் காளைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் முதல் நாள் சூரியப் பொங்கலையும் இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கலையும் கொண்டாடி மகிழ்கின்றோம்.  

சூரிய உதயத்தின்போது பொங்கலிட்டு சூரியனுக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.  உழவர்களுக்கு மட்டுமின்றி  மனிதனும்  சூரியனுக்கு நன்றி கூறும் நாளாக இந்நாள் அமைந்துள்ளது.

கடந்தாண்டு தொடங்கிய கொரோனா கிருமி  தொற்றிலிருந்து உலகம் இன்னும் மீட்சி பெறாத நிலையில் கனத்த இதயத்துடன் இந்த பொங்கல் திருநாளை நம் மண்ணில் கொண்டாட முடியாத நிலையில் சிலாங்கூர் மாநில அரசி உள்ளது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

விளம்பரம்


மாநில விழாவாக பல ஆண்டுகள் விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்த பொங்கல் விழா, இவ்வாண்டு மக்கள் நலன் கருதி நடத்தப்படாது என நினைக்கும்போது கவலையளிக்கிறது.

இனம், மொழி, வர்ணம் கடந்து மூவின மக்களின் ஒற்றுமைக்கு வித்தாக அமைந்திடும் பொங்கல் விழாவை  இவ்வருடம் குடும்பத்தினருடன் பாதுகாப்பாக கொண்டாடி மகிழ்வோம். 

'உழவர் திருநாளாம் தை பொங்கல் பெருநாள் உழுது உண்டு வாழ்வோர் களத்து மேடு சென்று,  புதிர் எடுத்து பொங்கல் இட்டு,            பகலவனை தொழுது பின் படையல் இட்டு        செய்நன்றி செலுத்தும் நன்னாளில்            அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்' என்று கணபதிராவ் தமது வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டாார்.





Monday, 11 January 2021

சிலாங்கூர், கேஎல் உட்பட 6 மாநிலங்களில் மீண்டும் பிகேபி

  புத்ராஜெயா-

கோவிட்-19 வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை (பிகேபி) மீண்டும் அமலாக்கம் செய்யப்படவுள்ளதாக பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் அறிவித்தார்.

6 மாநிலங்களை மட்டும் உள்ளடக்கி பிகேபி அமலாக்கம் காணவுள்ளது. பினாங்கு, சிலாங்கூர், மலாக்கா, ஜோகூர், சபா, கூட்டரசு பிரதேசம் (கோலாலம்பூர், புத்ராஜெயா, லாபுவான்) ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

மேலும், கெடா, கிளந்தான், பேராக், திரெங்கானு, நெகிரி செம்பிலான், பகாங் ஆகிய மாநலங்களில் பிகேபிபி எனப்படும் கடுமையாக்கப்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமலாக்கம் செய்யப்படவுள்ளது. 

ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி ஜன.26ஆம் தேதி வரை அமல்படுத்தப்படவுள்ள பிகேபி,பிகேபிபி நடவடிக்கையால் மாநிலம், மாவட்டம் கடந்து செல்வதற்கு தடை விதிக்கப்படுவதாக டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தமது சிறப்பு செய்தியில் இவ்வாறு கூறினார்.

துணைப் பிரதமர் பதவி; திட்டம் ஏதுமில்லை- பிரதமர் துறை அலுவலகம்

புத்ராஜெயா-

துணைப் பிரதமராக ஒருவரை நியமனம் செய்யும் திட்டம் ஏதும் கிடையாது என்று பிரதமர் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

வெளியுறவு அமைச்சராக இருக்கும் டத்தோஶ்ரீ ஹிஷாமுடின் துன் உசேன் துணைப் பிரதமராக நியமனம் செய்யப்படவிருப்பதாக சில நாட்களாக ஆருடங்கள் வலுத்து வந்தன.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் துணைப் பிரதமர் பதவி நியமனம் ஏதும் கிடையாது என்று பிரதர் துறை அலுவகம் கூறியுள்ளது.

நாட்டில் அவசரகால நிலை பிரகடனமா?

கோலாலம்பூர்-
நாட்டில் விஸ்வரூபம் எடுத்துள்ள கோவிட்-19 பாதிப்பு 4 இலக்கங்களை எட்டியுள்ள நிலையில் அவசரகால நிலை அமல்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்று மாலை 6.00 மணியளவில் பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் அறிவிக்கப்படவுள்ள  சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் அவசரகால நிலை அறிவிக்கபடலாம் என்று கணிக்கப்படுகிறது.

இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவசரகால நிலை அமல்படுத்தப்படுவது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் அதன் தொடர்பில் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் மாமன்னரை சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவிட்-19 பாதிப்புகள் அதிகம் உள்ள சிலாங்கூர், கோலாலம்பூர், ஜோகூர், பினாங்கு, சபா ஆகிய மாநிலங்களில் இந்த அவசரகால நிலை அமல்படுத்தப்படலாம் என்று ஆருடங்கள் வலுபெறுகின்றன.

Saturday, 9 January 2021

பிஎன் அரசாங்கத்திற்கான ஆதரவை மீட்டுக் கொண்டார் அஹ்மாட் ஜஸ்லான்

பெட்டாலிங் ஜெயா- 

பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கான தனது ஆதரவை மீட்டுக் கொள்வதாக மாச்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மாட் ஜஸ்லான் யாக்கோப் தெரிவித்தார். 

அண்மையில் மலேசிய செம்பனை எண்ணெய் வாரியத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகிய அஹ்மாட் ஜஸ்லான் தமது முடிவை இன்று செய்தியாளர்களிடம் விவரித்தார்.

பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கான ஆதரவை மீட்டுக் கொள்ளும் இரண்டாவது அம்னோ நாடாளுமன்ற உறுப்பினராக அஹ்மாட் ஜஸ்லான் திகழ்கிறார். ஏற்கெனவே குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினர் தெங்கு ரஸாலி பிஎன் அரசாங்கத்திற்கான ஆதரவை மீட்டுக் கொண்டார்.

பயணிகள் விமானம் மாயம்- இந்தோனேசியாவில் அதிர்ச்சி

 ஜகார்த்தா-

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து 50 பயணிகளுடன் புறப்பட்ட போயிங் 737 விமானம் காணாமல் போயுள்ளது.

ஶ்ரீ விஜயா ஏர்  விமான நிறுவனத்திற்கு சொந்தமான இந்த விமானம் மேற்கு கலிமந்தான் மகாணத்திலிருந்து பொந்தியானாக் எனும் இடத்திற்கு தனது சேவையை மேற்கொண்டிருந்தது.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு நிலைத்துடனான தொடர்பை இழந்தது. அந்த விமானம் பறந்து கொண்டிருந்த உயரம் திடீரென 10 ஆயிரம் அடி குறைந்தது என்று விமான கண்காணிப்பு இணையத் தளமான Flightrader24.com தகவல் தெரிவித்துள்ளது.

விமானம் குறித்த தகவலை பெற முயன்று வருவதாக ஶ்ரீ விஜயா ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, தேடுதல், மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருவதாக அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது.

சிலாங்கூரிலும் தைப்பூசக் கொண்டாட்டம் கிடையாது - கணபதிராவ்

 ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

கோவிட்-19 பரவல் தொற்று காரணமாக சிலாங்கூரிலும் தைப்பூசக் கொண்டாட்டம் ரத்து செய்யப்படுவதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

தைப்பூச விழாவை போன்று ஆண்டுதோறும் மாநில அளவில்  கொண்டாடப்படும் பொங்கல் விழாவும் ரத்து செய்யப்படுவதாக குறிப்பிட்ட அவர், இதற்கான மானிய ஒதுக்கீடுகள் இந்தியர்களின் சமூக நலன் சார்ந்த உதவித் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்றார்.

இவ்வாண்டு நடத்தப்படும் எந்தவொரு தைப்பூச விழாவிலும் மக்கள் பங்கெடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்திய கணபதிராவ், தைப்பூசம் போன்ற சமய நிகழ்வுகளை வீட்டில் இருந்தபடியே வழிபாடுகளை மேற்கொள்ளலாம் என்று குறிப்பிட்டார்.

கோவிட்-19 பெருந்தொற்று பரவலை தடுக்கும் வகையில் பெரிய அளவிலான ஒன்றுகூடல் நடவடிக்கைகளை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று கணபதிராவ் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக பினாங்கிலும் இவ்வாண்டு தைப்பூசக் கொண்டாட்டம் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, 8 January 2021

பினாங்கு தைப்பூசம் ரத்து- வீட்டிலிருந்தே கொண்டாடுங்கள் - பேராசிரியர் இராமசாமி

பட்டர்வொர்த்-

முருகப் பெருமானை வேண்டி கொண்டாடப்படும் தைப்பூச விழா இவ்வாண்டு பினாங்கில் ரத்து செய்யப்படுவதாக பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் பி.இராமசாமி தெரிவித்தார்.

தைப்பூச பெருநாளின் போது மேற்கொள்ளப்படும் ரத ஊர்வலம் மட்டுமின்றி, காவடிகள், பால்குடம் ஏந்துதல், தேங்காய் உடைப்பது, முடி காணிக்கை தண்ணீர் பந்தல் அமைப்பது, அன்னதானம் வழங்குவது ஆகியவற்றுக்கும் அனுமதியில்லை என்று அவர் சொன்னார்.

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் நாளுக்கு நாள் தீவிடமடைந்து வருவதால் இவ்வாண்டு தைப்பூச விழா ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாண்டு தைப்பூச விழாவை வீட்டிலிருந்தே கொண்டாட வேண்டும் என்று பினாங்கு இந்து அறப்பணி வாரியம், ஒற்றுமை துறை, பினாங்கு பாதுகாப்பு மன்றம், போலீஸ் ஆகிய தரப்புகளுடான சந்திப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.

கோவிட்-19: ஒரே நாளில் 16 பேர் மரணம்

கோலாலம்பூர்-

கோவிட்-19 வைரஸ் தொற்று பெருந்தொற்றின் காரணமாக இன்று ஒரே நாளில் 16 பேர் மரணமடைந்துள்ளனர். இந்நோய் தொற்று பரவத் தொடங்கிய நாள் முதல் ஒரே நாளில் அதிகமானோர் மரணமடைவது இதுதான் முதல் முறையாகும்,

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவிட்-19 பெருந்தொற்றுக்கு இன்று 2,643 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இன்று ஒரே நாளில் 16 பேர் மரணமடைந்துள்ள நிலையில் கோவிட்-19க்கு மரணமடைந்தோரின் எண்ணிக்கை 537ஆக பதிவாகியுள்ளது.

2,643 பேரில் 63 விழுக்காட்டினர் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் எனவும் 37 விழுக்காட்டினர் அந்நிய நாட்டினர் எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SOP தீவிரமாக கட்டுப்படுத்தப்படலாம்- தற்காப்பு அமைச்சர்

கோலாலம்பூர்-

கோவிட்-19 பெருந்தொற்று பரவலை தடுக்கும் வகையில் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (SOP) இன்னும் தீவிரமாக கட்டுப்படுத்துவதை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக முதன்மை தற்காப்பு அமைச்சர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு மன்றத்தின் ஆலோசனையின் பேரில் கூடிய விரைவில் அதற்கான அறிவிப்புகள் வரலாம். 

எஸ்ஓபி-ஐ கட்டுப்படுத்தும் வகையில் சில துறைகளின் நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றார் அவர்.

குறுகிய காலத்தில் பிரதமர் இந்த அறிவிப்பை செய்வார் என்று அவர் மேலும் சொன்னார்.

கோவிட்-19 பெருந்தொற்று எண்ணிக்கை நேற்று 3,000க்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்ட நிலையில் மார்ச் மாத பிற்பகுதியில் பாதிக்கப்படுவோரின்  எண்ணிக்கை நாளொன்றுக்கு 8,000-ஆக பதிவாகலாம் என்று சுகாதார அமைச்சு கோடி காட்டியது.



Thursday, 7 January 2021

கோவிட்-19 உச்சம்- இன்று ஒரே நாளில் 3,027 பேர் பாதிப்பு

கோலாலம்பூர்-

கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று 3,027ஆக  பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக 2,000க்கும் அதிகமாக இருந்த கோவிட்-19 பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று 3 ஆயிரத்தை எட்டியுள்ளது.

இந்நோய்க்கு புதிதாக 8 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தனது முகநூலில் பகிர்ந்துள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.

கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு நாட்டில் இதுவரை 128,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 102, 723 பேர் குணமடைந்துள்ள நிலையில் 25,221 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

இந்நோயினால் இதுவரை 521 பேர் மரணமடைந்துள்ளனர்.