Thursday, 31 December 2020

கோவிட்- 19 காலகட்டத்தில் தைப்பூச விழா கொண்டாட்டம் அவசியமானதா?

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள கோவிட்-19 வைரஸ் தொற்று பரவல் காரணமாக மலேசியாவில் பொது கூட்டங்களுக்கும் இனம், சமயம் சார்ந்த நிகழ்வுகளுக்கும் அதிகபடியான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது அரசாங்கம்.

இச்சூழலில் இங்கு வாழும் இந்துக்களின் பெருவிழாவாக கருதக்கூடிய தைப்பூச விழா நடத்தப்பட வேண்டும் என்றும் நடத்தப்படக்கூடாது என்றும் இருவாறான கருத்துகள் தற்போது எதிரொலிக்கக் தொடங்கியுள்ளன.

முருகப் பெருமானை தரிசிக்க ஆண்டுக்கொருமுறை பத்துமலை திருத்தலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வதுண்டு. உள்ளூர் மக்கள் மட்டுமன்றி வெளிநாட்டினரும் பெருமளவில் கூடும் தைப்பூச விழா இவ்வாண்டு மிகப்  பெரிய கருத்து மோதலை உருவாக்கியுள்ளது.

தைப்பூச விழாவை ஒருமுறை ரத்து செய்தால் அதுவே சில தரப்பினருக்கு சாதகமான சூழலை உருவாக்கி தொடர்ந்து தைப்பூச விழாவை ரத்து செய்யக்கோருவதற்கு வாய்ப்பாக அமைந்திடலாம். என்ன நடந்தாலும் பத்துமலை தைப்பூச விழா நடந்தே ஆக வேண்டும். வெள்ளி ரதம் கோலாலம்பூர் மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்டு பத்துமலையை சென்றடைய வேண்டும். ஆனால் புதிய நடைமுறையில் மக்கள் கூட்டம் இல்லாமல் அர்ச்சனை செய்வதற்கு ரதம் எங்கும் நிறுத்தப்படாமல் தண்ணீர் பந்தல் எங்கும் அமைக்கப்படாமல் புதிய நிபந்தனையுடன் தைப்பூச ரத வெள்ளோட்டம் நடந்தேற வேண்டும் என்று கோலாலம்பூர் ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஶ்ரீ ஆர்.நடராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்தாண்டு தைப்பூச விழா நடத்தப்படக்கூடாது, கோவிட்-19 தொற்று பரவல் அச்சம் காரணமாக தைப்பூச விழா ரத்து செய்யப்பட வேண்டும். இவ்விழாவினால் 'தைப்பூச திரள்' உருவெடுத்து விடக்கூடாது என்று ஆகமம் அணி தலைவர் அருண் துரைசாமி உட்பட பல்வேறு தரப்பினர் சமூக ஊடகங்களில் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து  வருகின்றனர்.

இவ்விரு கருத்து மோதல்களுக்கு மத்தியில் பினாங்கில் தைப்பூச விழாவை முன்னிட்டு நடத்தப்படும் ரத வெள்ளோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவரும் பினாங்கு துணை முதல்வருமான பேராசிரியர் பி.இராமசாமி அறிவித்துள்ளார்.

நாட்டில் கொண்டாடப்படும் ஒரு சமய விழாவுக்கு பின்னாளில் பாதகமான சூழல் ஏற்பட்டு விடக்கூடாது என்ற டான்ஶ்ரீ நடராஜாவின் வாதத்தில் தவறேதும் இல்லை. அதேபோல் மக்கள் நலன் பாதுகாக்க வேண்டியது அவசியம். பெருந்திரளான மக்கள் கூட்டத்தினால் வைரஸ் தொற்று பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துவிடக்கூடாது என்ற எதிர்ப்பாளர்களின் கருத்துகளும் கவனிக்கப்பட வேண்டியவைதான்.

எது எப்படியாயினும் மக்கள் உயிர் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என்ற சூழலில் அரசாங்கமும் தேசிய பாதுகாப்பு மன்றமும் பத்துமலை தேவஸ்தானமும் ஆழ்ந்து சிந்தித்து தீர முடிவெடுக்க வேண்டும்.

குறிப்பு; கோவிட்- 19 காலகட்டத்தில் தைப்பூச விழா கொண்டாட்டம் அவசியமானதா? என்ற கேள்விக்கு வாசகர்கள் தங்கள் கருத்துகளை கீழே குறிப்பிடலாம்.

Sunday, 27 December 2020

3 நாடாளுமன்ற, 7 சட்டமன்றத் தொகுதிகள் ம.ம.ச.கட்சிக்கு ஒதுக்கப்பட வேண்டும்- டத்தோஸ்ரீ தனேந்திரன்

ரா.தங்கமணி

நீலாய்-

வரும் 15 ஆவது பொதுத் தேர்தலில்  3 நாடாளுமன்றத் தொகுதிகள், 7 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கு தேசிய முன்னணி வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மலேசிய மக்கள் சக்தி கட்சி முன்வைத்துள்ளது.

மலேசிய மக்கள் சக்தி கட்சியின் 12ஆவது தேசிய பேராளர் மாநாடு இன்று நீலாய் டிவிசி லிட்டில் சென்னை மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் தேசிய முன்னணியின் வெற்றிக்கு தொடர்ந்து போராடி வரும் மலேசிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளர்கள் தேர்தலில் களமிறக்கப்பட வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் வலியுறுத்தினார்.

அதன் அடிப்படையில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளும் 7 சட்டமன்றத் தொகுதிகளும் மலேசிய மக்கள் சக்தி கட்சிக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் பேராளர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் சொன்னார் தெரிவித்தார்.

அதோடு தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சியாக மலேசிய மக்கள் சக்தி கட்சி ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சபாவில் 60,70ஆம் காலகட்டங்களில் குடியேறிய இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நாட்டின் பொதுத் தேர்தல், இடைத் தேர்தல்களில் தேமுவின் வெற்றிக்காக பாடுபட்டு வரும் மலேசிய மக்கள் சக்தி கட்சியை அங்கீகரிக்கும் இந்த தீர்மானங்களை தம் ஏற்றுக் கொள்ளும் என நம்புவதாக டத்தோஸ்ரீ தனேந்திரன் குறிப்பிட்டார்.

இதனிடையே, சிலிம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலின்போது ம.ம.ச.கட்சிக்கு ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடிவதற்கு வாய்ப்பளிக்கப்படும் என்று தேமு/ அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஸாயிட் ஹமிடி உறுதி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ம.ம.ச.கட்சியின் பேராளர் மாநாட்டில் தேமு துணைத் தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா முகமட் ஹசான் கலந்து கொண்டு மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

இதில் தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகள், தோழமைக் கட்சிகளின் தலைவர்களும் 700க்கும் மேற்பட்ட பேராளர்களும் கலந்து கொண்டனர்.

Saturday, 26 December 2020

MIED: 15,000 மாணவர்களுக்கு வெ.163 மில்லியன் கல்வி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது- டத்தோஶ்ரீ சரவணன்

 கோலாலம்பூர்-

மஇகாவின் கல்விக் கழகமான எம்.ஐ.இ.டி.  (MIED) மூலம் இதுவரை 163 மில்லியன் வெள்ளி இந்திய சமுதாய மாணவர்களுக்கு கல்வி கடனுதவியாக வழங்கப்பட்டுள்ளது என்று மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

இந்திய சமுதாயம் அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றில் பலவீனமாக உள்ள நிலையில் கல்வி ஒன்றே இந்திய சமுதாயத்தின் பலம் என்பதை உணர்ந்து 1984இல் தொடங்கப்பட்ட எம்.ஐ.இ.டி. மூலம் இதுவரை 15,000 இந்திய மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

கோவிட்-19 பாதிப்பு காரணமாக பல நிறுவனங்கள், அமைப்புகள் கல்வி உதவிநிதி கொடுப்பதை நிறுத்திக் கொண்டாலும் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தலைமையிலான மஇகா கடந்த ஈராண்டுகளை காட்டிலும் இம்முறை அதிகமான கல்வி நிதியை வழங்கியுள்ளது என்று  மஇகாவின் துணைத் தலைவர் டத்தோ சரவணன் கூறினார்.

இன்று நடைபெற்ற எம்ஐஇடி கடனுதவி காசோலைகள் வழங்கும் நிகழ்வில் 301 மாணவர்களுக்கு 5.8 மில்லியன் வெள்ளி வழங்கப்பட்டது.


15ஆவது பொதுத் தேர்தலை முன்னிறுத்திய தீர்மானங்களோடு மலேசிய மக்கள் சக்தி மாநாடு- டத்தோஶ்ரீ தனேந்திரன்

கோலாலம்பூர்- 
மலேசிய மக்கள் சக்தி கட்சியின் 12ஆவது  தேசிய பேராளர் மாநாடு நாளை 10.30 மணிக்கு நீலாயிலுள்ள டிவிசி லிட்டல் சென்னை மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த தேசிய பேராளர் மாநாட்டை தேசிய முன்னணியின் துணைத் தலைவர் டத்தோ முகமட் ஹஸான் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கும் வேளையில் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் சிறப்பு வருகை புரியவுள்ளார் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் தெரிவித்தார்.

15ஆவது பொதுத் தேர்தலை முன்னிறுத்தி இந்த பேராளர் மாநாட்டில் சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன. மேலும் 15ஆவது பொதுத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் சிறப்பு பணிக்குழு நாளைய மாநாட்டில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக எஸ்ஓபி நடைமுறைகளை பின்பற்றி புதிய அணுகுமுறையில் பேராளர் மாநாடு நடத்தப்படவுள்ளது என்று டத்தோஶ்ரீ தனேந்திரன் கூறினார்.

Saturday, 12 December 2020

டத்தோ சராணி தலைமையிலான மாநில அரசில் இந்தியர் நலன் விடுபட்டு விடாது- டத்தோ இளங்கோ

ரா.தங்கமணி

ஈப்போ- 

பேரா மாநில 14ஆவது மந்திரி பெசாராக பதவி பிரமாணம் ஏற்றுக் கொண்ட டத்தோ சரானி முகமதுக்கு பேரா மாநில மஇகா வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டது.

மாநில மந்திரி பெசாராக பதவி வகித்து வந்த டத்தோஶ்ரீ ஃபைசால் அஸுமு அப்பதவியிலிருந்து வீழ்த்தப்பட்ட பின்னர் அரசியல் நெருக்கடி பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது.

பேரா மாநில மந்திரி பெசாராக பதவியேற்றுக் கொண்ட டத்தோ சராணி, அனைத்து இன மக்களையும் அரவணைத்துச் செல்லக்கூடிய சிறந்த ஆட்சியை வழங்குவார் என்பதில் பேரா மஇகா நம்பிக்கைக் கொண்டுள்ளது என்று மாநில மஇகா தலைவர் டத்தோ வ.இளங்கோ தெரிவித்தார்.

2018 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அம்னோ தலைமைத்துவத்தில் அமைந்துள்ள பேரா மாநில அரசில், இந்தியர்களின் நலன் விடுபட்டு விடாத சூழலில் மஇகா அணுக்கமான உறவை புதிய மந்திரி பெசாருடன் கொண்டிருக்கும் என்றும் அவர் மேலும் சொன்னார்.

பேரா மந்திரி பெசாராக பதவி வகித்த பெர்சத்து கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஃபைசால் அஸுமு மாநில சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி கண்டதை அடுத்து அப்பதவியிலிருந்து விலகினார்.

அணமையில் பேரா மந்திரி பெசாராக பதவியேற்றுக் கொண்ட டத்தோ சராணிக்கு டத்தோ இளங்கோ மாலை அணிவித்து சிறப்பு செய்தார். பேரா மஇகாவைச் சேர்ந்த பொறுப்பாளர்களும் தொகுதித் தலைவர்களும் உடனிருந்தனர்.


Friday, 4 December 2020

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தார் பேரா மந்திரி பெசார்

ஈப்போ-

பேரா மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அஹ்மாட் பைசால் அஸூமு மீது கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வி அடைந்ததை அடுத்து அப்பதவியிலிருந்து அவர் விலகவுள்ளார்.

இன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் டத்தோஶ்ரீ பைசால் அஸுமுவுக்கு எதிராக 48 வாக்குகளும் ஆதரவாக 10 வாக்குகளும் கிடைத்தன. ஒருவர் வாக்களிக்கவில்லை.

பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கையை இழந்துள்ள டத்தோஶ்ரீ பைசால் அஸுமு பேரா சுல்தானை சந்தித்து சட்டமன்ற உறுப்பினர்களின் முடிவை முன்வைக்கவுள்ளார்.

நாட்டின் நடப்பு சூழலில் சட்டமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு வழிவிடுவதை காட்டிலும் சுமூகமான முறையில் அதிகார மாற்றம் நிகழலாம் என்று டத்தோஶ்ரீ பைசால் அஸுமு சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

இதனிடையே, பேரா மாநிலத்தில் புதிய மந்திரி பெசாராக மாநில அம்னோ தலைவர் டத்தோ சராணி பதவியேற்பதற்கு ஏதுவாக பேரா சுல்தானை சந்திக்கவிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Thursday, 3 December 2020

தைரியம் இருந்தால் மஇகாவை ரத்து செய்யுங்கள்- டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் காட்டம்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

தைரியம் இருந்தால் மஇகாவை ரத்து செய்து பாருங்கள் என்று கெடா மந்திரி பெசார் முகமட் சுனுசி முகமட் நோருக்கு சவால் விடுத்தார் மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன்.

ஆலய உடைப்பு விவகாரங்களில் தன்மூப்பாக செயல்பட்டு வருகிறது பாஸ் தலைமையிலான கெடா மாநில அரசு.

கெடா மாநிலத்தில் பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியமைத்த குறுகிய காலத்திலேயே இரு ஆலயங்கள் உடைக்கப்பட்டுள்ளன.

ஆலய உடைப்பு விவகாரம் குறித்து குரல் எழுப்பிய மஇகாவை தடை செய்ய வேண்டும் என்று கெடா மந்திரி பெசார் கூறினார்.

இதற்கு பதிலடி கொடுத்த டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இந்திய சமுதாயத்தின் உரிமைக்காக மஇகா தொடர்ந்து குரல் கொடுக்கும்.

பாஸ் கட்சியின் இரட்டை முகம் இப்போதுதான் புரிகிறது. ஆட்சியில் இல்லாதபோது ஒரு முகமும் ஆட்சியில் அமர்ந்த பின்னர் இன்னொரு முகத்தையும் பாஸ் கட்சி காட்டுகிறது.

வெளுத்ததெல்லாம் பால் என நம்பி மஇகா ஏமாந்து விட்டது. இப்போதுதான் பாஸ் கட்சியின் உண்மை முகம் தெரிகிறது.

இந்திய சமுதாயத்திற்காக குரல் கொடுப்பதை மஇகா ஒருபோதும் நிறுத்தாது. 

மஇகா தடை செய்ய வேண்டும் என கூறியுள்ள முகமட் சனுசி, முடிந்தால் மஇகாவை தடை செய்து பாருங்கள் என்று விக்னேஸ்வரன் சவால் விடுத்தார்.