ரா.தங்கமணி
ஷா ஆலம்-
அண்மைய காலமாக தாய்மொழிப் பள்ளிகளை மூட வேண்டும் என்று அறைகூவல் விடுத்து வந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் (பட்ஜெட்) தமிழ்ப்பள்ளிகளுக்கு மானியம் ஒதுக்கப்படாதது அப்பள்ளிக்கு சாவுமணி அடிக்க பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் துணிந்து விட்டதை காட்டுவதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் குற்றஞ்சாட்டினார்.
கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்தே தமிழ்ப்பள்ளிகளுக்கு 50 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. முந்தைய தேசிய முன்னணி அரசாங்கமானாலும் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கமானாலும் தமிழ்ப்பள்ளிகளுக்கு தங்களது வரவு செலவு திட்டத்தில் மானிய ஒதுக்கீடு செய்வதை தங்களது கடமையாகக் கொண்டிருந்தன.
ஆனால் கொள்ளைப்புறம் வழியாக ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ள பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் இந்திய சமுதாயத்தை ஓரம்கட்டும் படலத்தில் நடவடிக்கையாகவே பட்ஜெட்டில் அனுகூலமான திட்டங்கள் இல்லாமல் ஒருதரப்பை சார்ந்திருக்கும் வகையில் பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement |
இந்த பட்ஜெட்டில் மித்ரா எனப்படும் இந்தியர் சமூகப் பொருளாதார மேம்பாட்டு திட்டத்திற்கு 100 மில்லியன் வெள்ளியும் தெக்குன் கடனுதவித் திட்டத்தில் 20 மில்லியன் வெள்ளி மட்டுமே இந்திய சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது பாரபட்சம் நிறைந்தது ஆகும்.
தாய்மொழிப் பள்ளிகளை மூட வேண்டும் என்ற அறைகூவல் அண்மைய காலமாக அதிகரித்திருந்த நிலையில் தமிழ்ப்பள்ளிகளுக்கு சாவுமணி அடிக்கும் முதல் நடவடிக்கையாகவே 2021ஆம் ஆண்டு பட்ஜெட் அமைந்துள்ளது என்று அலாம் மெகா முத்து மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற தீபாவளி அன்பளிப்பு நிகழ்வில் கலந்து கொண்ட கணபதிராவ் தமது ஆதங்கத்தை வெளிபடுத்தினார்.
No comments:
Post a Comment