Sunday, 13 September 2020

தெலுக் இந்தான் தொகுதியில் மஇகாவே போட்டியிட வேண்டும்- ஶ்ரீமுருகன் வலியுறுத்து

ரா.தங்கமணி

ஈப்போ-

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியில் ம இகா போட்டியிடுவதே இங்குள்ள பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது என்று மஇகா இளைஞர் பிரிவு உச்சமன்ற உறுப்பினர் ஶ்ரீமுருகன் குறிப்பிட்டார்.

முந்தைய தேர்தலில் தெலுக் இந்தான் தொகுதியில் கெராக்கான் கட்சி போட்டியிட்டது. ஆனால் நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி புத்ராஜெயாவை கைப்பற்ற முடியாததன்  விளைவாக  தேமு கூட்டணியிலிருந்து கெராக்கான் விலகியது.

14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் கண்டுக்கொள்ளப்படாமல் இருந்த தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியை மஇகா தத்தெடுத்துள்ள நிலையில் வரும் பொதுத் தேர்தலில்  இத்தொகுதியில்  மஇகா போட்டியிட எத்தனித்துள்ளது.

அதற்கேற்ப மஇகாவும்  இங்கு களப்பணி ஆற்றி வருகிறது. மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இங்கு மஇகா மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளதால் மக்களும் மஇகா, தேமுவுக்கு ஆதரவாளர்களாக மாறி வருகின்றனர்.

இந்நிலையில் தெலும் இந்தான்  தொகுதியில் மசீச போட்டியிடுவதாக கோரிக்கை விடுக்கப்படுவது அபத்தமானதாகும்.  இத்தொகுதியை வென்றெடுக்க மஇகா களமிறங்கி சேவையாற்றி வரும் நிலையில் மசீச கோரிக்கை அவசியமற்றதாகும்.

மஇகா இந்தியர்களை சார்ந்திருக்கும் கட்சியாக இருந்தாலும் அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் கட்சியாக விளங்குகிறது. இச்சூழலில் இத்தொகுதியில் போட்டியிட எத்தனித்துள்ள மஇகாவின் வெற்றிக்கு மசீச மட்டுமல்லாது தேமு கூட்டணி கட்சிகளும் ஆதரவளித்தால் நிச்சயம் இத்தொகுதியை நாம் வென்றெடுக்க முடியும் என்று ஶ்ரீமுருகன் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment