Wednesday, 9 September 2020

மத்திய அரசின் செல்லப்பிள்ளைகள் போல் செயல்படும் சட்டவிரோத தொழிற்சாலைகள்- கணபதிராவ் சாடல்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-

மத்திய அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகள் போல் செயல்படும் சட்டவிரோத தொழிற்சாலைகளின் பொறுப்பற்றதனமான நடவடிக்கையாலேயே சிலாங்கூர், கோலாலம்பூரின் பல பகுதிகளில் குடிநீர் விநியோக துண்டிப்பு இடம்பெற்றது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

கடந்த வாரம் சுங்கை கோ ஆற்றில் நச்சுக்கழிவு கலக்கப்பட்டதால் நீர் தூய்மைக்கேடு, சுகாதாரப் பிரச்சினை ஆகியவற்றை கருத்தில் கொண்டு 4 நீர் சுத்திகரிப்பு ஆலைகள் நிறுத்தப்பட்டதால் சிலாங்கூர், கோலாலம்பூரின் பெரும்பாலான பகுதிகளில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால் 12 லட்சம் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

இந்த குடிநீர் பிரச்சினைக்கு சிலாங்கூர்  மாநில அரசாங்கத்தை பலரும் குறை கூறி வரும் நிலையில் இதில் மத்திய அரசாங்கத்தின்  பொறுப்பும் கடமையும் உள்ளது. மத்திய அரசாங்கம், புறநகர் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம், சுற்றுச்சூழல் இலாகா, தேசிய நீர் சேவை ஆணையம் ஆகியவற்றின் அலட்சியத்தால்தான் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்தே இந்த பிரச்சினை நீடித்து வருகிறது. பல சட்டவிரோத தொழிற்சாலைகள் மத்திய அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகள் போல் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக சுங்கை தோ தொழிற்சாலைசா ஒன்று கொட்டிய கழிவுகளாலேயே ஆற்று தூய்மைக்கேடு ஏற்பட்டது.

இத்தொழிற்சாலைகளை பற்றி பலமுறை புகார் அளித்தும் மத்திய அரசாங்கம் அதனை கண்டு கொள்ளவில்லை. வெறும் 60 ஆயிரம் வெள்ளி மட்டும் அபராதம் விதித்தது. இப்போதுதான் அந்த தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சிலாங்கூர் மாநிலத்தில் ஏற்படும் குடிநீர் பிரச்சினைக்கு மாநில அரசாங்கத்தை மட்டும் குறை சொல்லிக் கொண்டிருக்கக்கூடாது. மாறாக மத்திய அரசாங்கத்தின் கடப்பாட்டையும் மறந்து பேசக்கூடாது என்று கணபதிராவ் சுட்டிக் காட்டினார்.


No comments:

Post a Comment