Friday, 21 August 2020

தெலுக் இந்தானில் மஇகாவின் ஆதரவுக்கரம் நீள்கிறது- டத்தோ முருகையா

ரா.தங்கமணி

தெலுக் இந்தான் -

தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியர்களின் வாக்குகள் தேசிய முன்னணின் வாக்கு வங்கியாக மாற்றிட மஇகா களப்பணி ஆற்றி வருவதாக அதன் தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா தெரிவித்தார்.

கடந்த காலங்களில் தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதி கெராக்கான் வசமிருந்தது. 2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தேசிய முன்னணியிலிருந்து கெராக்கான் கட்சி வெளியேறிய பின்னர் இத்தொகுதியை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் மஇகா களம் கண்டுள்ளது.

அவ்வகையில் மஇகா இத்தொகுதியில் முழு மூச்சாக செயலாற்றிக் கொண்டிருக்கிறது. இந்தியர்களின் பிரச்சினைகள் கண்டறியப்பட்டு அவற்றுக்கு உரிய தீர்வு காணப்படும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக மஇகா கிளைகள் உருவாக்கப்பட்டு இந்திய சமுதாயத்தில் தலைவர்கள் உருவாக்கப்படும் வேளையில் தேசிய அரசியல் நீரோட்டத்தில் இளைஞர்களும் விடுபட்டு விடக்கூடாது எனும் நோக்கில் புதிய மஇகா கிளைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அண்மையில் இங்கு புதிய 70  மஇகா கிளைகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக கூறிய டதோ முருகையா, இந்தியர்கள் நம்பிக்கைக்குரிய கட்சியாக மஇகா மீண்டும் உருவெடுக்கும் என்ற நம்பிக்கையில் அதிகமான இளைஞர்கள் மஇகாவில் உறுப்பியம் பெற்று வருகின்றனர். அது மட்டுமல்லாது பிற கட்சிகளில் இருந்தும் ஏராளமானோர் மஇகாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றனர்.

இது தெலுக் இந்தான் தொகுதியை தேசிய முன்னணி மீண்டும் தக்க வைத்துக் கொள்வதற்கான நடவடிக்கையாக அமைந்துள்ளது என்று 70 புதிய மஇகா கிளைகளின் அறிமுக நிகழ்வில் உரையாற்றும்போது மஇகாவின் தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளராக சேவையாற்றி வரும் டத்தோ முருகையா இவ்வாறு குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment