Monday, 6 July 2020

அடையாள அட்டை, குடியுரிமை விண்ணப்பத்தின் நடைமுறையை எளிமையாக்குக- கணபதிராவ்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
குடியுரிமை, அடையாள அட்டை, சிவப்பு அடையாள அட்டை, பிறப்புப் பத்திரம் போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளவர்களின் இன்னல்களை களைவதற்கு தற்போது நடைமுறையில் உள்ள  சட்டவிதிகளை தளர்த்தாவிட்டாலும் அதனை எளிமையாக்க உள்துறை அமைச்சு முன்வர வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் வலியுறுத்தினார்.

சிலாங்கூர் மாநில அரசின் வழி மைசெல் பிரிவின் கீழ் இம்மாநிலத்திலுள்ளவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு ஆவண அட்டை பிரச்சிகளைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மைசெல் பிரிவின் வழி 2018 செப்டம்பர் முதல் மார்ச் 2020 வரை 1,660 விண்ணப்பங்கள் அனுப்பப்பட்ட நிலையில் அதில் 324 விண்ணப்பங்களுக்கு மட்டுமே தீர்வு காணப்பட்டுள்ளது. எஞ்சிய 1,336 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.

மக்களின் அடையாள ஆவணப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு விரைவில் தீர்வு காண தற்போது நடைமுறையில் உள்ள சட்டவிதிகளை தளர்த்த முடியாவிட்டாலும் அதன் நிபந்தனைகளையும் நடைமுறைகளையும் எளிமையாக்க உள்துறை அமைச்சு முனைய வேண்டும்.

அப்போதுதான் அடையாள அட்டை, குடியுரிமை போன்ற பிரச்சினைகளுக்கு சில மாதங்களிலேயே தீர்வு காண முடியும். இல்லையென்றால் பல்வேறு காரணங்களை காட்டி இழுத்தடிப்பு செய்யும் போக்கே நிகழ்ந்து கொண்டிருக்கும் என்று அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.

மைசெல் மூலம் அடையாள அட்டை, குடியுரிமை கிடைக்கப்பெற்றவர்களை சந்தித்த கணபதிராவ், மைசெல் அதிகாரிகளான திருமதி சாந்தா, ரகுபதி ஆகியோர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பாராட்டினார்.

இந்த நிகழ்வில் அடையாள அட்டை, குடியுரிமை கிடைக்கப்பெற்றவர்களுடன் இந்திய கிராமத் தலைவர்கள் வின் சென்ட், கிறிஸ்டி ஆகியோரும் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment