Tuesday, 14 July 2020

நிறவெறியை உதிர்க்க மக்களவை மாண்புமிகுகள் மன்றமா? மூடர்கூடமா?

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
கறுப்பின ஆடவருக்கு எதிராக போலீசார் நிகழ்த்திய நிறவெறி தாக்குதலும் அதனை தொடர்ந்து எழுந்த போராட்டத்தாலும் அமெரிக்காவே அதிர்ந்தது. கொரோனா பாதிப்பிலும் கூட நிறவெறிக்காக ஓர் உயிர் கொல்லப்படுவதை பொறுத்துக் கொள்ளாத வெள்ளையர்கள் கூட கறுப்பினத்தவர்களுக்காக வீதி போராட்டங்களில் இறங்கினர்.

உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த நிறவெறிக்கு எதிராக  அமெரிக்கர்களின் இந்த போராட்டத்தின் சுவடு அடங்கி சில மாதங்களே ஆன நிலையில் தற்போது மலேசியாவிலும் தலைதூக்குகிறது. அதுவும் சாதாரண வீதியோரம் அல்ல, மாண்புமிகுகளாக போற்றப்படுகின்ற மக்கள் பிரதிநிதிகள் கூடுகின்ற மக்களவையில்தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராகவே நிறவெறி கருத்துகள் வெளிபடுத்தப்பட்டுள்ளது.

நேற்று தொடங்கிய  நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது  நம்பிக்கைக் கூட்டணியில் பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டுவின் தோல் நிறம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார் பாலிங் தொகுதி தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் ரஹீம்.

மக்களவையில் நாட்டு மக்கள் நலன் சார்ந்த விவகாரங்களை விவாதிப்பதை காட்டிலும் தனி மனித தாக்குதல் முன்னெடுக்கப்படுவதும் தோல் நிறம் சார்ந்த சர்ச்சைக்குரிய கருத்துகளை உதிர்ப்பதுதான் ஒரு மக்கள் பிரதிநிதியின் தலையாய கடமையா?

இப்படி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவிப்பதற்கு மக்கள் பிரதிநிதியாக இருப்பதை காட்டிலும் டத்தோஶ்ரீ அஸிஸ் முட்டாளாகவே இருந்து விட்டு போய்விடலாம். ஏனெனில் மக்களவைக்கென்று ஒரு மாண்பு உள்ளது. அது முட்டாள்கள் கூடும் மூடர்கூடம் கிடையாது என்பதை மாண்புமிகு டத்தோஶ்ரீ அப்துல் அஸிஸ் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஓர் இனத்தின் மீது சர்ச்சைக்குரிய கருத்துகள் முன்வைக்கப்படுவது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.நாயர் மீது இனத்துவேஷக் கருத்துகள் உதிர்க்கப்பட்டன. அவர் நெற்றியில் இடும் திருநீறு குறித்து சர்ச்சையான கருத்துகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

மாண்புமிகுகளால் போற்றப்பட வேண்டிய மக்களவை நிறவெறியரான டத்தோஶ்ரீ அப்துல் அஸிஸ் போன்றவர்களால் அதன் மாண்பு குறைந்து விடாமல் காக்கப்பட கட்சிகளும் மக்கள் பிரதிநிதிகளும் தங்கள் கடமையை சரி வர செய்ய வேண்டும். செய்வார்களா...?

No comments:

Post a Comment