Tuesday 9 June 2020

''பிரதமர் பதவியில் 100 நாட்கள்''- டான்ஶ்ரீ முஹிடின் சறுக்கினாரா? சாதித்தாரா?

ரா.தங்கமணி

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சியமைத்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் பதவிக்காலம் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் கவிழ்க்கப்பட்டது. ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் இடைக்காலப் பிரதமராக துன் மகாதீர் நியமிக்கப்பட்டபோதிலும் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்ற ஒருவரை பிரதமராக நியமிக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் நாட்டின் மாமன்னர் தள்ளப்பட்டார்.
அதன் அடிப்படையில் பல்வேறு அரசியல் சர்ச்சைகளுக்கு மத்தியில் நாட்டின் 8ஆவது பிரதமராக நியமனம் செய்யப்பட்டார் டான்ஶ்ரீ முஹிடின் யாசின்.

பக்காத்தான் கூட்டணியிலிருந்து விலகி அம்னோ, பாஸ், டத்தோஶ்ரீ அஸ்மின் அலி ஆதரவாளர்கள், சபா, சரவாக் கட்சிகள் ஆகியவற்றின் பேராதரவோடு பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தை அமைத்தார் டான்ஶ்ரீ முஹிடின் யாசின்.
மார்ச் 2ஆம் தேதி பிரதமராக பதவியேற்றுக் கொண்ட டான்ஶ்ரீ முஹிடின் நேற்றுடன் (ஜூன் 8) தனது 100 நாட்கள் பணியை நிறைவு செய்துள்ளார்.
பிரதமராக பதவியேற்றுக் கொண்டவர்களில் யாரும் சந்திக்காத மிகப் பெரிய சவால்களுக்கு போராட்டங்களுக்கும் மத்தியில் தனது பதவி பிரமாணத்தை செய்துக் கொண்ட முஹிடின் யாசின், அரசியல் போர்களத்துக்கு மத்தியில் உயிர்கொல்லி நோயான  கோவிட்-19 வைரஸ் தொற்று பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய மிகப் பெரிய கடப்பாட்டுக்குள் தள்ளப்பட்டார்.

அரசியல் களம் போராட்டமானது என்றாலும் கூட மக்களின் உயிர் அலட்சியப்படுத்தி விடக்கூடாது எனும் நோக்கில் மக்கள் நலன் காக்கப்பட மார்ச் 18ஆம் தேதி தொடக்கம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை நாடு முழுமைக்கும் அமல்படுத்தினார்.

வருமானம் இன்றி மக்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக  "PRIHATIN" திட்டத்தை அறிமுகம் செய்து மக்களுக்கு உதவிநிதிகளை வழங்கினார். மக்கள் மட்டும் போதுமா? தொழில் நிறுவனங்கள் பொருளாதார நிலையில் பின் தங்கி விடக்கூடாது என்பதற்காக உதவித் திட்டங்களையும் "PENJAJA" திட்டத்தையும் அறிவித்தார்.
கோவிட்-19 வைரஸ் தொற்று ஒரு முடிவு காணப்பட்டாலும் அரசியல் ரீதியிலான போராட்டங்களை சந்திக்க வேண்டிய இக்கட்டான சூழல் டான்ஶ்ரீ முஹிடினை நெருக்கியது.

ஒரு பக்கம் ஆட்சி, மறுபக்கம் கட்சி என இருதலை கொள்ளியாய் தவித்த முஹிடின் யாசின்  ஆக்ரோஷமாக களம் காண துணிந்தார். அதில் ஒன்றுதான் பெர்சத்து கட்சியின் அவைத் தலைவர் துன் மகாதீர் உட்பட ஐந்து பேரை கட்சியிலிருந்து நீக்கினார்.
ஆட்சியும் கட்சியும் தன்  வசம் மட்டுமே இருக்க வேண்டும் என்ற அரசியல் சாணக்கியத்தனத்தில் எதிரிகளை துவம்சம் செய்து தற்போது வெற்றி நாயகனாய் அரசியல் களத்தில் உலாவ தொடங்கியுள்ளார்.

நம்பிக்கை துரோகம், ஆட்சி கவிழ்ப்பு, கட்சி அதிகாரம் என சில இடங்களில் சறுக்கினாலும் கோவிட்-19 வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை, ,மக்களுக்கான உதவிநிதி திட்டங்கள், நாட்டின் பொருளாதாரத்திற்கான திட்டமிடல், ஆட்சியை தக்கவைக்க போராட்டம் என மக்கள் மத்தியில் ஒரு சாதனை பிரதமராக டான்ஶ்ரீ முஹிடின் யாசின் திகழ்கிறார்.

இந்த 100 நாட்களின் அரசியல் எவ்வளவு சூடாக இருந்ததோ அதை விட பிரபலமானது "Ke Sana Ke Sini" என்ற டான்ஶ்ரீ முஹிடின் உதிர்த்த வார்த்தைகள் தான்.

100 நாட்களை கடந்த பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசினுக்கு "பாரதம்" இணைய ஊடகம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

No comments:

Post a Comment