பட்டர்வொர்த்-
பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தை அங்கீகரிக்க முடியாது என கூறும் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகம்மது, பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பெரும்பான்மை வாக்குகளி ஆட்சியை கைப்பற்றிய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அரசு கவிழ்க்கப்பட்டது ஏன் என்ற உண்மையை மக்களுக்கு விளக்குவார்களா? என்று மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் கேள்வி எழுப்பினார்.
பொதுத் தேர்தலில் வெற்றி பெறவில்லை, மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என காரணம் அடுக்கும் இவர்கள், பெரிக்காத்தான் நேஷனல் ஏன் ஆட்சியமைத்தது என்பதை ஆழமாக சிந்திக்க வேண்டும்.
ஷெரட்டன் ஹோட்டல் சம்பவத்திற்கு பின்னர் பிப்ரவரி 24ஆம் தேதி பிரதமர் பதவியிலிருந்து விலகினார் துன் மகாதீர். அவரின் பதவி விலகலுக்குப் பின்னரே பக்காத்தான் அரசாங்கம் கலைக்கப்பட்டது.
பிரதமர் பதவியிலிருந்து விலகிய துன் மகாதீர் விலகிய பின்னர் புதிய பிரதமரை நியமிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார் மாமன்னர். அரசியலமைப்பு சட்டவிதிகளின் படி தனது அதிகாரத்தை பயன்படுத்தி புதிய பிரதமராக டான்ஶ்ரீ முஹிடின் யாசினை மாமன்னர் நியமனம் செய்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவை பெற்றதாலேயே டான்ஶ்ரீ முஹிடின் யாசினை பிரதமராக நியமனம் செய்ய முடிந்தது.
டான்ஶ்ரீ முஹிடின் பிரதமராவதை விரும்பாத துன் மகாதீர் தனது பதவியை ராஜினாமா செய்தபோது நாடாளுமன்றத்தை கலைக்கும்படி மாமன்னரிடம் ஆலோசனை கூறினாரா?
நாடாளுமன்றத்தை கலைக்கும்படி மகாதீர் கூறியதாக இதுவரை எந்தவொரு செய்தியையும் நான் கேட்டது இல்லை.
அவ்வாறு ஒருவேளை மகாதீர் நாடாளுமன்றத்தை கலைக்கும்படி கோரியிருந்தாலும் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை கொண்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை அரசியலமைப்பு சட்டவிதிகளுக்கு உட்பட்டு மாமன்னர் பிரதமராக நியமித்திருக்க முடியும்.
இல்லையென்றால் நாட்டின் தற்போதைய கோவிட்-19 வைரஸ் தொற்றால் பொதுத் தேர்தல் நடத்துவது சாத்தியமில்லாத சூழல் எனும் நிலையில் புதிய பிரதமரை மானன்னர் நியமித்திருக்க கூடும்.
ஈராண்டுகால ஆட்சிக்குப் பின்னர் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சி சொந்த கட்சியினராலே கவிழ்க்கப்பட்டதே தவிர வேறு யாராலும் அல்ல.
டான்ஶ்ரீ முஹிடின் யாசினின் பெரும்பான்மையை பொறுத்திருந்து பார்ப்போம். நாடாளுமன்றம் என்பது உங்களின் அரசியல் விளையாட்டு கூடமல்ல. அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக நாட்டையும் மக்களையும் பலிகடா ஆக்க வேண்டாம் என்று டத்தோஶ்ரீ தனேந்திரன் வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment