Wednesday, 11 March 2020

ஒரேயொரு அமைச்சர் பதவி: மஇகாவுக்கு பலமா? பலவீனமா?

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் அறிவித்துள்ள அமைச்சரவை பட்டியலில் மஇகாவுக்கு ஒரேயொரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது இந்திய சமுதாயத்தின் புருவங்களை உயர்த்தச் செய்துள்ளது.

மலேசிய இந்தியர்களின் தாய்க்கட்சி என மார்தட்டி கொள்ளும் மஇகாவுக்கு ஒரு முழு அமைச்சர் பதவி மட்டும் வழங்கப்பட்டுள்ளது நியாயமான ஒன்றா? எனும் கேள்வி எழுகிறது.

முந்தைய காலங்களில் ஒரு முழு அமைச்சர் பதவி வழங்கப்பட்டாலும் இரு துணை அமைச்சர் பதவிகளாவது மஇகாவுக்கு வழங்கப்படும்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தலைமைத்துவத்தில் கூட மஇகா இரு முழு அமைச்சர்களையும் இரு துணை அமைச்சர்களையும் பெற்றிருந்தது.

2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அரசில் இந்தியர்களை பிரதிநிதித்து 4 முழு அமைச்சர்களும் ஒரு துணை அமைச்சரும் பதவி வகித்தனர்.


  1. இந்நிலையில் நேற்று  பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் அறிவித்துள்ள அமைச்சரவையில் மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் மனிதவள அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார்.


ஆக்ககரமான நடவடிக்கைகளின் வழி கட்சியை வலுபடுத்தி இழந்த இந்திய சமுதாயத்தின் ஆதரவை பெற துடிக்கும் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தலைமைத்துவத்திலான மஇகாவுக்கு ஒரேயொரு அமைச்சர் பதவி பலம் சேர்க்குமா? என்ற கேள்வி எழுகிறது.

புதிய கூட்டணி அரசாங்கத்தில் மஇகாவுக்கு குறைந்தது ஒரு முழு அமைச்சர், இரு துணை அமைச்சர்கள் பதவிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் பிரதமரின் அறிவிப்பு இந்தியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் 3 ஆண்டுகளில் பொதுத் தேர்தலில் களமிறங்கி இந்திய சமுதாயத்தின் ஆதரவை பெற வேண்டிய மஇகாவுக்கு ஒரேயொரு அமைச்சர் பதவி பலமா? பலவீனமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment