Wednesday 18 March 2020

சென்னை விமான நிலையத்தில் சிக்கியுள்ள மலேசியர்கள்?

கோலாலம்பூர்-
தமிழகத்திற்கு சுற்றுலா சென்ற மலேசியர்கள் தாயகம் திரும்ப முடியாமல் சென்னை விமான நிலையத்தில் சிக்கி பரிதவிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
கோவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக மலேசியாவில் மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவுக்கு சென்ற மலேசியர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கின்றனர்.

பயண விமானங்கள் ரத்து செய்யப்பட்டதனால் தங்குவதற்கு உரிய வசதிகள் இல்லாமல் விமான நிலையத்தில் தஞ்சமடைந்துள்ள மலேசியர்கள் அங்கு பணியாற்றும் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

வெளிநாட்டு பயணிகள் மட்டுமே மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சொந்த குடிமக்களான எங்களை மலேசியாவுக்கு அழைத்துச் செல்வதில் அலைகழிப்பு செய்வது ஏன்? என்று அவர்கள் தங்களது வேதனையை வெளிபடுத்தியுள்ளனர்.

இந்த காணொளி கண்ட சமூக ஊடக பயனீட்டாளரகள், விமான நிலையத்தில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்க மலேசிய அரசாங்கம் களமிறங்குமா? என்று பல்வேறான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment