Tuesday, 25 February 2020

'ஒரு விரல் புரட்சி' கேலிக்கூத்தானதா?

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
ஜனநாயக கடமையை காப்பாற்ற வேண்டும் என்ற ஒற்றை வரி தூண்டுதலில் ஒட்டுமொத்த மலேசியர்களின் மனதிலும் கொளுந்து விட்டெரிந்த 'மாற்றம்' எனும் தீ இன்று யாரை சுட்டெரிக்க போகிறது என்ற கேள்வியே அனைவரின் மனதிலும் நிழலாடி கொண்டிருக்கிறது.
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் ஒரு போராட்டத்தை முன்னெடுத்து 60 ஆண்டுகால தேசிய முன்னணியின் ஆட்சிக்கு முடிவு கட்டி பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை அரியணையில் ஏற்றினர்.

மக்கள் நலன், நாட்டின் வளப்பம், பொருளாதார மேம்பாடு என சரியான பாதையில் பயணிக்க வேண்டிய பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள், பதவி சுகத்துக்கு அடிமையானதன் விளைவே இன்றைய அரசியல் அதிரடி திருப்பங்கள் ஆகும்.
மக்களிடம் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையே காற்றில் பறக்கவிட்ட போது மெளனம் காத்ததன் பலனை தான் இன்று அன்வார் & கோ அணியினர் (பிகேஆர், ஜசெக, அமானா) அறுவடை செய்கின்றனர்.

புத்தகமாக அச்சிடப்பட்டு மக்களிடம் பகிரங்கமாக கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளையை 'அது புனிதநூல் அல்ல' என்று துன் மகாதீர்  கூறியபோதே பிரதமர் பதவியை ஒப்படைப்பேன் என்று எவ்வித உத்தரவாதமும் இல்லாமல் வாக்குறுதியை அள்ளி தெளிக்கும்போது  சுதாரித்துக கொள்ள வேண்டாமா?
அன்று வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைக்கும்போதே கண்டனத்தை பதிவு செய்திருந்தால் இன்று துணிச்சலாக மக்கள் தேர்ந்தெடுத்த அரசாங்கத்தை அந்தரத்தில் தொங்க விட்டிருக்க மாட்டார்.

ஆனால், பிரதமர் பதவியை மட்டுமே குறிக்கோளகக் கொண்டு வாயை மூடி மெளனம் காத்ததன் விளைவு ஆட்சியை இழந்நு  நிற்கும் பரிதாப சூழலுக்கு அன்வார் & கோ தள்ளப்பட்டுள்ளது.
மக்களை மடையர்களாக நினைத்து தான் போடுவதுதான் 'சரியான கணக்கு' என நினைத்தவர்களுக்கு 'உங்களுக்கு எல்லாம் அப்பன் நான் இருக்கேன்டா' என சொல்லி அடித்திருக்கும் துன் மகாதீரின் அரசியல் சாணக்கியத்தன(துரோக)த்தில் கேலிக்கூத்தாக்கப்பட்டது மக்களின் 'ஒரு விரல் புரட்சியும் ஜனநாயக கடப்பாடும்' தான்.


No comments:

Post a Comment