Friday, 28 February 2020

புதிய பிரதமரா? பொதுத் தேர்தலா?- மார்ச் 2இல் முடிவு

கோலாலம்பூர்-
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்பட்டதை அடுத்து புதிய பிரதமர்? யார் என்ற கேள்விக்கு மார்ச் 2இல் விடை கிடைத்து விடும்.

ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மையை நிரூபிக்க எந்த கட்சிக்கும் போதிய ஆதரவு இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

யாருக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளது என்பதை நிரூபிக்க மார்ச் 3இல் சிறப்பு மக்களவை கூட்டத்தை நடத்துவதற்கு இடைக்கால பிரதமர் துன் மகாதீர் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த கூட்டத்தில் பிரதமராக முன்மொழியப்படுபவர்களுக்கு போதிய பெரும்பான்மை கிடைக்கவில்லையெனில் நாடாளுமன்றத்தை கலைப்பதை விட வேறு வழி இல்லை.


Wednesday, 26 February 2020

மலேசிய அரசியல் நெருக்கடியில் வைரலாகும் நடிகர் சீமான்?

கோலாலம்பூர்-
நெருக்கடி சூழலை நொடி பொழுதில் சந்தித்துக் கொண்டிருக்கும் மலேசியாவின் அரசியல் எதிர்காலம் எவ்வாறு அமையப்போகிறது என்றவ் கவலை மக்களை வாட்டிக் கொண்டிருக்கிறது.
நாட்டை ஆளக்கூடிய தலைவர்களின் இன்றைய 'கையாலாகத்தனத்தின்' மீது அதிருப்தி கொண்டுள்ள மக்கள் நாட்டின் பொதுத் தேர்தலில் எடுத்த முடிவு சரிதானா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

தங்களை அதிருப்தியை வெளிகாட்ட முடியாமல் உள்ளுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருக்கும் மலேசிய இந்தியகளின் சமூக ஊடகத்தை நிரப்பிக் கொண்டிருக்கிறார் தமிழ்த் திரைப்பட இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான்.
இந்தியாவின் அரசியல் போக்கை கண்டித்து அவர் பேசிய காணொளி ஒன்று இன்று மலேசிய இந்தியர்களின் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் தளங்களை நிரப்பிக் கொண்டிருக்கிறது.

'பைத்தியக்கார பயலுங்ககிட்ட மாட்டி இந்த நாடும் மக்களும் படுற பாடு..'  என தொடங்கும் சீமானின் காணொளியை இன்றைய இளையோர்கள் வெகுவாக பகிர்ந்து வருகின்றனர்.

தங்களின் ஆதங்கத்தை இப்படியாவது வெளிபடுத்துகிறார்களே?

மக்களின் ஜனநாயக நம்பிக்கை நசுக்கப்பட்டுள்ளது- டான்ஶ்ரீ கேவியஸ்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
நாட்டின் அரசியல் பரபரப்பான அரசியல் நெருக்கடியில் ஜனநாயகத்தின்  மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை நசுக்கப்பட்டுள்ளது என்று பிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் கருத்து தெரிவித்தார்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலின்போது மிகப் பெரிய நம்பிக்கையுடன் 'நம்பிக்கைக் கூட்டணியை' மக்கள் ஆட்சியில் அமர வைத்தனர். ஆனால் இன்று பதவி சுகம், சுயநல அரசியல் காரணங்களுக்காக மக்களின் ஜனநாயக உரிமை அத்துமீறப்பட்டுள்ளது.

நிலையான ஒரு அரசாங்கத்தை அமைக்க முடியாமல் தடுமாறும் இன்றைய இக்கட்டான சூழல் மக்களுக்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு உரிய சலுகைகள் கிடைத்து விடும்.

ஆனால் அரசியல் நெருக்கடியை நாடு எதிர்கொண்டுள்ள சூழல் நாட்டின்
பொருளாதாரத்தை பாதிப்புறச் செய்வதோடு அதன் தாக்கம் எளிய மக்களையே வெகுவாக பாதிக்கும் என்பதை அரசியல்வாதிகள் உணர வேண்டும்.

தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு உரிய தீர்வு கண்டு மக்களின் நம்பிக்கையை சிதறடிக்கச் செய்யாத வகையிலான அரசாங்கம் மீண்டும் அமைய வேண்டும் என்று டான்ஶ்ரீ கேவியஸ் குறிப்பிட்டார்.

பொதுத் தேர்தலை நடத்துவதே சிறந்த வழி- டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்-
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு பொதுத் தேர்தல் நடத்துவதே சிறந்த வழி என்று மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கருத்து தெரிவித்தார்.
பக்காத்தான் ஹராப்பானை கவிழ்த்து  விட்டு புதிய கூட்டணி ஆட்சியமைக்கும் நடவடிக்கையினால் நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் படுமோசமான சூழலை எட்டியுள்ளது.

இந்த சூழலை தவிர்க்க நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு பொதுத் தேர்தல் நடத்துவதே சிறந்து வழியாகும் என்று அவர் சொன்னார்.

அதிகாரத்தை மக்களிடம் ஒப்படையுங்கள்- டத்தோஶ்ரீ சரவணன்

கோலாலம்பூர்-
நாட்டை நிர்வகிக்கும் அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மக்களிடம் வழங்கப்பட வேண்டும் என்று ம இகாவின் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் வலியுறுத்தினார்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் அமைந்த அரசாங்கம் தோல்வியை தழுவியுள்ளது. தற்போது நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடியை சமாளிக்க வேண்டுமானால் பொதுத்  தேர்தல் நடத்தப்படுவதே சிறந்த வழியாகும்.

நாட்டை ஆளும் அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கு அதிகாரத்தை மக்களிடமே வழங்கினால் இன்று நீண்டு கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு எளிய முறையில் தீர்வு காணலாம். அதற்கு பொதுத் தேர்தலுக்கு வழி விடுவதே சிறந்ததாக மஇகா கருதுகிறது என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ சரவணன் குறிப்பிட்டார்.

மக்கள் விரும்பும் அணியே ஆட்சியமைக்க வேண்டும்

ஈப்போ-
நாட்டின் அரசியல் பரபரப்பான சூழலை எதிர்கொண்டுள்ள நிலையில் மக்கள் விரும்பும் அணியே மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்று மஇகாவின் மத்திய செயலவை உறுப்பினர் எம்.வீரன் குறிப்பிட்டார்.
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலின் பெரும்பான்மை மக்களின் ஆதரவோடு ஆட்சி அமைத்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஈராண்டுகளுக்குள்ளாகவே சிதறி விட்டது.

இப்போது மத்தியில் யார் ஆட்சி அமைப்பார்கள்? எனும் கேள்வி எழுந்துள்ள நிலையில் கட்சி தாவி கூட்டணியில் இடம்பெறுவதை காட்டிலும் மக்களிடமே தீர்ப்பு வழங்கப்படுவது சிறந்ததாகும்.

தங்களை ஆளக்கூடிய அரசாங்கம் யார்? என்ற முடிவை மக்கள் தீர்மானிக்க நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு பொதுத் தேர்தலை நடத்துவதே சிறந்ததாகும்.

பொதுத் தேர்தலே சிறந்த வழி என்று மஇகாவின் தேசியத் தலைவர் கூறியுள்ள கருத்தே இன்றைய அரசியல் நெருக்கடிக்கு நிரந்தர தீர்வாகும். இல்லையேல் இந்த நெருக்கடி தொடர்கதையாக நீண்டு கொண்டிருக்கும் என்று வீரன் மேலும் சொன்னார்.

Tuesday, 25 February 2020

'ஒரு விரல் புரட்சி' கேலிக்கூத்தானதா?

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
ஜனநாயக கடமையை காப்பாற்ற வேண்டும் என்ற ஒற்றை வரி தூண்டுதலில் ஒட்டுமொத்த மலேசியர்களின் மனதிலும் கொளுந்து விட்டெரிந்த 'மாற்றம்' எனும் தீ இன்று யாரை சுட்டெரிக்க போகிறது என்ற கேள்வியே அனைவரின் மனதிலும் நிழலாடி கொண்டிருக்கிறது.
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் ஒரு போராட்டத்தை முன்னெடுத்து 60 ஆண்டுகால தேசிய முன்னணியின் ஆட்சிக்கு முடிவு கட்டி பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை அரியணையில் ஏற்றினர்.

மக்கள் நலன், நாட்டின் வளப்பம், பொருளாதார மேம்பாடு என சரியான பாதையில் பயணிக்க வேண்டிய பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள், பதவி சுகத்துக்கு அடிமையானதன் விளைவே இன்றைய அரசியல் அதிரடி திருப்பங்கள் ஆகும்.
மக்களிடம் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையே காற்றில் பறக்கவிட்ட போது மெளனம் காத்ததன் பலனை தான் இன்று அன்வார் & கோ அணியினர் (பிகேஆர், ஜசெக, அமானா) அறுவடை செய்கின்றனர்.

புத்தகமாக அச்சிடப்பட்டு மக்களிடம் பகிரங்கமாக கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளையை 'அது புனிதநூல் அல்ல' என்று துன் மகாதீர்  கூறியபோதே பிரதமர் பதவியை ஒப்படைப்பேன் என்று எவ்வித உத்தரவாதமும் இல்லாமல் வாக்குறுதியை அள்ளி தெளிக்கும்போது  சுதாரித்துக கொள்ள வேண்டாமா?
அன்று வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைக்கும்போதே கண்டனத்தை பதிவு செய்திருந்தால் இன்று துணிச்சலாக மக்கள் தேர்ந்தெடுத்த அரசாங்கத்தை அந்தரத்தில் தொங்க விட்டிருக்க மாட்டார்.

ஆனால், பிரதமர் பதவியை மட்டுமே குறிக்கோளகக் கொண்டு வாயை மூடி மெளனம் காத்ததன் விளைவு ஆட்சியை இழந்நு  நிற்கும் பரிதாப சூழலுக்கு அன்வார் & கோ தள்ளப்பட்டுள்ளது.
மக்களை மடையர்களாக நினைத்து தான் போடுவதுதான் 'சரியான கணக்கு' என நினைத்தவர்களுக்கு 'உங்களுக்கு எல்லாம் அப்பன் நான் இருக்கேன்டா' என சொல்லி அடித்திருக்கும் துன் மகாதீரின் அரசியல் சாணக்கியத்தன(துரோக)த்தில் கேலிக்கூத்தாக்கப்பட்டது மக்களின் 'ஒரு விரல் புரட்சியும் ஜனநாயக கடப்பாடும்' தான்.


PH அமைச்சர்களின் நியமனங்கள் ரத்து

கோலாலம்பூர்-
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியைச் சேர்ந்த அமைச்சர்களின் நியமனங்களை மாமன்னர் ரத்து செய்துள்ளதாக நாட்டின் தலைமைச் செயலாளர் முகமட் ஸுக்கி அலி தெரிவித்தார்.
பிரதமர் பதவியிலிருந்து துன் மகாதீர் விலகியதை அடுத்து நாட்டின் நிர்வாகிகளான துணைப் பிரதமர், அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், அரசியல் செயலாளர்கள் என அனைவரின் நியமனங்களும் இன்றுடன் ரத்து செய்யப்படுகிறது.

பிரதமர் பதவியிலிருந்து துன் மகாதீர் விலகினாலும் இடைக்கால பிரதமராக அவர் நாட்டை நிர்வகிப்பதற்கு மாமன்னர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

புதிய அரசாங்கம் அமையும் வரையிலும் துன் மகாதீர் இடைக்கால பிரதமராக பதவியில் நீடிப்பார்.

இன்னும் 10 நாட்களுக்குள் தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்பினர் புதிய அரசாங்கத்தை அமைப்பர் என்று அவர் மேலும் சொன்னார்.

பெரும்பான்மையை நிரூபிக்குமா பக்காத்தான் ஹராப்பான்?

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
நாட்டில் நிலவும் இன்றைய பரபரப்பான அரசியல் சூழலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தனது பெரும்பான்மையை மக்களவையில் நிரூபிக்க வேண்டிய இக்கட்டான சூழலில் உள்ளது.
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலின்போது 129 தொகுதிகளை கொண்டு சில கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பெரும்பான்மையில் ஆட்சி அமைத்தது.

ஆனால் தற்போதைய அரசியல் சூழலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி உடைந்து விட்டது. இதில் இடம்பெற்றிருந்த பெர்சத்து கட்சி இக்கூட்டணியிலிருந்து விலகியுள்ளது.

தற்போது வரை பெர்சத்து கட்சியைச் சேர்ந்த 26 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிகேஆர் கட்சியின் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி ஆதரவாளர்கள் 10 பேரும் பக்காத்தான் ஹராப்பானுக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொண்டால் தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு பிகேஆர், ஜசெக, அமானா ஆகியவை தள்ளப்படும்.

பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறினால் ஆட்சியமைப்பதில் பெரும் சிக்கலை எதிர்கொள்ள நேரிடும், இதன் வழி பக்காத்தான் நேஷனல் தனது பெரும்பான்மையை நிரூபித்தால் ஆட்சியமைக்க முடியும் அல்லது நாடாளுமன்றத்தை கலைக்கும் முடிவை மாமன்னர் எடுக்கக்கூடும்.

மலேசிய அரசியல் ஒரு குளறுபடியான, பரபரப்பான சூழலை எதிர்கொண்டு வரும் நிலையில் தலைவர்களின் அடுத்த நிலைப்பாடு என்ன? என்பதுதான் மலேசியர்களின் மிகப் பெரும் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

பக்காத்தான் ஹராப்பான் இனி கிடையாது- அன்வார்

கோலாலம்பூர்-

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி இனி இல்லை என்று பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.
இக்கூட்டணியில் இடம்பெற்றிருந்த பெர்சத்து கட்சி இதிலிருந்து விலகிக் கொண்டுள்ளதால் இனி பக்காத்தான் ஹராப்பான் கிடையாது என்று அவர் இன்று கூறினார்.

பிரதமர் ஆகிறாரா வான் அஸிஸா?

கோலாலம்பூர்-

பிரதமர் பதவியிலிருந்து துன் மகாதீர் விலகியதை அடுத்து துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் அடுத்த பிரதமராக பதவியேற்பதற்கான  வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
பக்காத்தான் ஹராப்பானை வீழ்த்தி புதிய கூட்டணி அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியின்  விபரீத வெளிபாடாக துன் மகாதீர் பிரதமர் பதவியிலிருந்து இன்று விலகினார்.

துன் மகாதீர் விலகலை அடுத்து துணைப் பிரதமராக பதவி வகிக்கும் டத்தோஶ்ரீ வான் அஸிஸா பிரதமராக பதவியேற்கக்கூடும் என்ற ஆருடங்கள் வலுத்து வருகின்றன.

அது மட்டும் சாத்தியமானால் மலேசியாவின் அரசியல் வரலாற்றில் முதல் பெண் பிரதமர் எனும் வரலாற்றை டத்தோஶ்ரீ வான் அஸிஸா படைக்கக்கூடும்.

அஸ்மின் அலியின் கூடாரம் பிகேஆரிலிருந்து வெளியேறியது

கோலாலம்பூர்-
பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலியும் அவரது ஆதரவாளர்களும் பிகேஆர் கட்சியிலிருந்து வெளியேறி தங்களை சுயேட்சையாக அறிவித்துக் கொண்டனர்.
அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அஸ்மின் அலியின் அதிகாரி வெளியிட்டார்.

பிகேஆர்- இருந்து வெளியேறிய அஸ்மின் அலியின் ஆதரவாள்ர்கள்:

முகமட் அஸ்மின் அலி
கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினர்

ஸுரைடா கமாருடின்
அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர்

சைபுடின் அப்துல்லா
இண்ட்ரா மக்கோத்தா நாடாளுமன்ற உறுப்பினர்

பாரு பியான்
செலாங்காவ் நாடாளுமன்ற உறுப்பினர்

கைருடின் ஜஃபார்
பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினர்

மன்சோர் ஒத்மான்
நிபோங் திபால் நாடாளுமன்ற உறுப்பினர்

ரசீட் ஹஸ்னோன்
பத்து பஹாட் நாடாளுமன்ற உறுப்பினர்

டாக்டர் சந்திரா குமார்
சிகாமட் நாடாளுமன்ற உறுப்பினர்

அலி பிஜு
செராத்தோக் நாடாளுமன்ற உறுப்பினர்

வில்லி மொங்கின்
புஞ்சாக் போர்னியோ நாடாளுமன்ற உறுப்பினர்

ஜொனாதன் யாசின்
ரனாவ் நாடாளுமன்ற உறுப்பினர்

மகாதீரின் பதவி விலகல் உண்மையே

புத்ராஜெயா-
பிரதமர் பதவியிலிருந்து துன் மகாதீர் முகம்மது விலகியுள்ளதை பிரதமர் துறை இலாகா உறுதிபடுத்தியுள்ளது.
இன்று பிற்பகல் 1.00 மணியளவில் அவருடைய பதவி விலகல் கடிதம் மாமன்னருக்கு அனுப்பப்பட்டதாக அது வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

PH கூட்டணியிலிருந்து விலகியது பெர்சத்து

கோலாலம்பூர்-
பக்காத்தான் ஹராப்பான் (PH) கூட்டணியிலிருந்து பெர்சத்து கட்சி விலகிக் கொள்ளவிருக்கிறது.
அதனை அக்கட்சியின் தலைவர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

பிரதமர் பதவியிலிருந்து விலகினார் மகாதீர்?

கோலாலம்பூர்-

பிரதமர் துன் மகாதீர் முகம்மட் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை மாமன்னரிடம் ஒப்படைத்து விட்டதாக கூறப்படுகிறது.
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் நிலவும் சர்ச்சைகளின் காரணமாக இந்த பதவி விலகல் அமைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

துன் மகாதீர் பதவி விலகல் குறித்து பிரதமர் துறை இலாகா கூடிய விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடும்..

எல்டிடிஇ: குணசேகரன் விடுதலை

கோலாலம்பூர்-
விடுதலைப் புலிகளுடன் தொடர்புபடுத்தப்பட்டு சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரன் இன்று விடுதலை செய்யப்பட்டார்.
குணசேகரன் உட்பட 12 பேர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டில் அடிப்படை முகாந்திரம் இல்லை என கருதப்படுவதால் இவர்கள் மீதான விசாரணையை முடிவுக்கு கொண்டு வருவதாக சட்டத்துறை தலைவர்  டோமி தோமஸ் கடந்த வாரம் அறிவித்தார்.

அதன்  அடிப்படையில் இன்று குணசேகரன் விடுதலை செய்யப்பட்டார். அவரை நீதிமன்ற வளாகத்தில் வரவேற்க ஜசெகவினரும் ஆதரவாளர்களும் திரண்டனர்.

இதனையடுத்து இன்னும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் எஞ்சியவர்கள் இன்று அல்லது நாளை விடுதலை செய்யப்படுவர்.

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டவர்கள் எனும் குற்றச்சாட்டின் கீழ் இந்த 12 பேரும் கடந்தாண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டனர்

மகாதீரை சந்திக்கும் அன்வாரின் முயற்சி தோல்வி

கோலாலம்பூர்-
பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தை கவிழ்த்து புதிய கூட்டணி அரசாங்கம் அமைக்கப்படுவது தொடர்பில் பிரதமர் துன் மகாதீர் முகம்மதுவை சந்திக்கும் டத்தோஶ்ரீ அன்வாரின் முயற்சியில் தோல்வியில் முடிந்தது.
தமது துணைவியார் டத்தோஶ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில், ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோருடன் பிரதமர் அலுவலகத்தில் துன் மகாதீரை சந்திக்க அன்வார் முற்பட்டார்.

ஆயினும் ஒரு மணி நேரமாக காத்திருந்தும் துன் மகாதீரை சந்திக்க முடியாமல் டத்தோஶ்ரீ அன்வார் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளது அரசியலில் பரபரப்பை மேலும் வலுவூட்டியுள்ளது.

புதிய கூட்டணி அரசாங்கம் அமையவிருப்பது தொடர்பில் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் மாமன்னரை சந்திக்கும் அன்வார் இப்ராஹிம் பக்காத்தான் ஹராப்பானை கவிழ்க்கும் சதி செயலை மாமன்னரிடம் விவரிக்கக்கூடும்.

பக்காத்தான் ஹராப்பான் கதை முடிந்தது- டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்-
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் கதை முடிந்து விட்டது என்று மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கருத்து தெரிவித்துள்ளார்.
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சி அமைத்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியிலிருந்து பெர்சத்து கட்சியும், பிகேஆர் கட்சியிலிருந்து டத்தோஶ்ரீ அஸ்மின் அலியும் அவரின் ஆதரவாளர்களும் விலகியிருப்பதை அடுத்து அக்கூட்டணியின் கதை முடிவுக்கு வந்துள்ளது.

புதிய கூட்டணியின் ஆட்சி அமைவது குறித்து துன் மகாதீரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மேலவைத் தலைவருமான டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார்.

Monday, 24 February 2020

அஸ்தமனமாகிறது பக்காத்தான் ஹராப்பான்?

கோலாலம்பூர்-
2018ஆம் ஆண்டு நடைபெற்ற நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் பெரும்பான்மையில் ஆட்சி அமைத்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அஸ்தமனத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளது.
பிகேஆர், ஜசெக, பெர்சத்து, அமானா ஆகிய கட்சிகளை உள்ளடக்கி உதயமான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி பதவி அதிகார மோகத்தினால் புதிய கூட்டணிக்கு வித்தடும் பரபரப்பான அரசியல் சூழல் இன்று தென்படத் தொடங்கியுள்ளது.

அம்னோ, பாஸ் கட்சியுடன் இணைந்து பெர்சத்து, அஸ்மின் அலி பிகேஆர் ஆதரவாளர்கள், மசீச, மஇகா, ஜிபிஎஸ்  ஆகிய கட்சிகளை  உள்ளட்க்கிய புதிய கூட்டணி எப்போது வேண்டுமானாலும் ஆட்சி அமைக்கலாம்.

அதற்கான அடித்தளம் இன்று பிற்பகல் முதல் தொடங்கியுள்ள நிலையில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்படலாம்.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை கவிழ்த்து பக்காத்தான் நேஷனல் கூட்டணி ஆட்சி அமைக்கவிருக்கும்  சூழலில் இந்த பரபரப்பான அரசியல் சூழல் மலேசியர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது/.

பதவி இழப்புக்கு தயாராகும் 4 இந்திய அமைச்சர்கள்?

கோலாலம்பூர்-
புதிய கூட்டணி அரசாங்கம் எப்போது வேண்டுமானாலும் அமையக்கூடும் என்ற பரபரப்பான அரசியல் சூழலில் 4 இந்திய அமைச்சர்களின் பதவியும் கேள்விக்குறியாகி உள்ளது.
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அமைந்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சியில் சேவியர் ஜெயகுமார், கோபிந்த் சிங் டியோ, பொன்.வேதமூர்த்தி, எம்.குலசேகரன், துணை அமைச்சர் சிவராசா ஆகியோர் பதவியேற்றனர்.

தற்போது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கவிழ்க்கப்பட்டு புதிய கூட்டணி ஆட்சியமைக்கும் பரபரப்பான சூழலில் இந்த 4 இந்திய அமைச்சர்கள், ஓர் துணை அமைச்சரின் பதவி இழக்கப்படலாம்.

Friday, 21 February 2020

மாட்டுப்பண்ணை உடைபட்டதை இன விவகாரமாக மாற்ற வேண்டாம் - கணபதிராவ்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
கிள்ளான் பண்டார் பொட்டானிக்கில் இருந்த இந்தியருக்கு சொந்தமான மாட்டுப் பண்ணை அகற்றப்பட்ட விவகாரத்தை யாரும் இன விவகாரமாக மாற்ற முயல வேண்டாம் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.
இந்த மாட்டுப் பண்ணை அமைந்திருந்த நிலம் சீன பள்ளிவாசலை கட்டுவதற்கு 2003இல் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிலத்தில் அத்துமீறி மாட்டுப்பண்ணை அமைக்கப்பட்டதோடு அதன் அருகில் இருந்த 3 ஆலயங்களையும் சுற்றி வேலி தடுக்கப்பட்டது.

நிலத்தை கையகப்படுத்த நில உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்தபோது 5 ஆண்டுகளாக தன்னை நாடி வராத தரப்பினர் தற்போது அனைத்தும் எல்லை மீறி போன சமயத்தில் தன் பெயரை களங்கமடையச் செய்வது ஏன்?

பல்வேறு இடங்களில் கால்நடை வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டு வந்த 7 பேருக்கு மாற்று நிலங்கள் வழங்கப்பட்ட நிலையில் தற்போது உடைபட்ட மாட்டுப்பண்ணை உரிமையாளருக்கும் நிலம் வழங்கப்பட்டது.

ஆனால் அரசாங்கத்தால் வழங்கப்படும் நிலம் ஒப்பந்த அடிப்படையில் இல்லாமல் நில பட்டாவுடன் வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை சம்பந்தப்பட்ட தரப்பினர் விதித்ததால் அவருக்கான நில ஒதுக்கீடு நிராகரிப்பட்டது. அந்த எழுவரில் 4 பேருக்கு மட்டுமே மாற்று நிலங்கள் வழங்கப்பட்டன.

இது மாட்டுப்பண்ணை உடைபட்ட சம்பவமாக மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர ஆலய உடைப்பு நடவடிக்கையாக மாற்றி இன பதற்றத்தை உருவாக்க வேண்டாம்.

தனிநபரின் சுயநல விருப்பு வெறுப்புக்காக இவ்விவகாரத்திற்கு இனவாத சாயம் பூச வேண்டாம் என்று கணபதிராவ் வலியுறுத்தினார்.



Friday, 7 February 2020

'இறைவன் இல்லம்' இசை குறுந்தட்டு வெளியீடு

ரா.தங்கமணி

கிள்ளான்-
இறைவன் இல்லம் கலை, கலாச்சார, கல்வி இயக்கத்தில் ஏற்பாட்டில் ‘இறைவன் இல்லம்’ பக்தி பாடல்கள் அடங்கிய குறுந்தட்டு அண்மையில் மிகச் சிறப்பாக வெளியீடு கண்டது.

இறைவன் இல்லம் இயக்கத்தின் நிறுவனர் சி.கைலாசம் இந்த குறுந்தட்டை தயாரித்து வெளியிட்டுள்ளார்.
டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ சத்குரு ஸ்ரீ ஜெயபிரகாஷேந்திரா சரஸ்வதி மகாசுவாமிஜி 'இறைவன் இல்லம்' குறுந்தட்டை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

இந்து சமயம் மீதான பற்று இன்றைய இளம் தலைமுறையினரிடையே குறைந்து வரும் நிலையில் அதனை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாகவே இந்த இசை குறுந்தட்டு வெளியிடப்படுகிறது.

இந்த குறுந்தட்டை வெளியிட வேண்டும் என்று கடந்த ஈராண்டுகளாக முயற்சிகளை மேற்கொண்டு வந்ததாக கூறிய அவர், இசையமைப்பாளர் தீபனின் பேருதவியோடு இந்த  இசை குறுந்தட்டு உருவாக்கம் கண்டது என்றார்.

‘இறைவன் இல்லம்’ இசை குறுந்தட்டில் இடம்பெற்றுள்ள 10 பாடல்களையும் தானே எழுதியுள்ள கைலாசம்,  ஒரு பாடலையும் பாடியுள்ளார்.

'இறைவன் இல்லம்' பக்தி பாடல்கள் தொடர்பில் கருத்துரைத்த இசையமைப்பாளர் தீபன், இந்த இசை குறுந்தட்டை வெளியிட வேண்டும் என்ற கைலாசத்தின் விருப்பத்திற்கு ஏற்ப பாடல்கள் அமைந்துள்ளன.

இதில் இசை குறுந்தட்டில் புகழ் பெற்ற பாடகர்களான வீரமணிதாசன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், திலீப் வர்மன், ஆனந்தா ராஜாராம், அபிராமி, பரிமளா தேவி ஆகியோர் பாடியுள்ளனர்.
இது குறித்து கருத்துரைத்த இசையமைப்பாளர் தீபன், சமயத்தின் மீது இளைஞர்கள் பற்று கொள்ள வேண்டும் எனும் நோக்கில் 'இறைவன் இல்லம்' குறுந்தட்டுக்கு தயார்செய்யப்பட்டதாக கூறினார்.

இந்த இசை வெளியீட்டு விழாவில் வணிக பெருமக்களும் ஆதரவாளர்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

Saturday, 1 February 2020

சமுதாயத்திற்கு ஒரு தலைவனை தந்த ‘திரை மறைவு போராளி’ தோபுவான் உமா சம்பந்தன்


ஷா ஆலம்-
இந்திய சமுதாயத்தின் முன்னோடி தலைவர்களில் ஒருவரான துன் வீ.தி.சம்பந்தனின் துணைவியார் தோபுவான் உமா சம்பந்தனின் மறைவு அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின்போது இந்நாட்டிலுள்ள இந்திய சமுதாயத்தின் பிரதிநிதியாக சுதந்திர சாசனத்தில் கையெழுத்திட்ட ஒப்பற்ற தலைவர் துன் சம்பந்தன் ஆவார்.

ஒரு சமுதாயத்தின் தலைவராக உயர்வதற்கு சமுதாயம் உணர்வும் போராட்ட குணமும் மட்டுமே போதாது. அதற்கு உறுதுணையாக வாழ்க்கை துணைவியரின் முழுமையான ஆதரவும் கிடைக்கப்பெற வேண்டும்.
மஇகாவின் 5ஆவது தலைவராக  சமுதாயப் போராட்டத்தில் துன் சம்பந்தன் களம் கண்ட வேளையில் குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பை முழுமையாக ஏற்றுக் கொண்டு சமுதாயத்திற்காக ஒரு தலைவனை உருவாக்கி தந்த தோபுவான் உமா சம்பந்தனின் அர்ப்பணிப்பும் தியாக குணமும் அளவிட முடியாது.

அவ்வகையில் இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிக்காக தன் கணவரை அரசியலில் களம் காண விட்டு குடும்பத்திற்காகவும் கணவரின் லட்சியப் பயணத்திற்காகவும் திரை மறைவில் ஒரு போராளியாக வாழ்ந்து மறைந்துள்ள தோபுவான் உமா சம்பந்தனின் வரலாறு மலேசிய இந்தியர்களின் சரித்திரத்திலிருந்து அகற்ற முடியாது.

திடீர் மறைவை எய்தி அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாக குறிப்பிட்ட கணபதிராவ், அன்னாரை பிரிந்து துயருறும் அவர்தம் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.

முதுமையின் காரணமாக இன்று பிற்பகல் 1.30 மணியளவில் தோபுவான் உமா சம்பந்தன் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.