புத்ராஜெயா-
2020-ஆம் ஆண்டு கல்வித் தவணையில் சேர்ந்துள்ள முதலாம் படிவ மற்றும் புகுமுக வகுப்பு மாணவர்களுக்கு தொடக்கக் கல்வி உதவி நிதி மித்ரா மூலம் வழங்கப்படுகிறது. இது, இடைநிலைப் பள்ளியில் சேர்ந்துள்ள இந்திய மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையின் வெளிப்பாடு என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் ‘மைகாசே’ அறவாரியத்தின் மூலம் 150 வெள்ளி மதிப்புள்ள பற்றுச் சீட்டு வழங்கப்படும். மாணவர்கள் தங்களுக்குத் தேவையான பள்ளி உபகரணங்களை இதன்மூலம் வாங்கிக் கொள்ளலாம். இது, பெற்றோருக்கும் சற்று துணையாக அமையும்.
‘மைகாசே’ கட்டண முகப்பிடத்தைக் கொண்டுள்ள பேரங்காடிகளில் பள்ளிச் சீருடை, பள்ளிக் காலணி, விளையாட்டுக் காலணி, விளையாட்டு உடை, பந்து துடுப்பு போன்ற விளையாட்டுக் கருவிகள், பேனா உள்ளிட்ட எழுதுபொருட்கள், குறிப்பேடு, பயிற்சி ஏடு, கால்குலேட்டர், வண்ணப் பென்சில் உள்ளிட்ட உபகரணங்களை மாணவர்கள் வாங்கிக் கொள்ளலாம்.
இதன் தொடர்பில் நாடு முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான பேரங்காடிகளில் மை காசே கட்டண முகப்பிடங்கள் திறக்கப்பட்டு உள்ளன. தவிர, மை காசே பற்றுச் சீட்டுக்களை பெற்றுக் கொள்ளும் தமிழ்ப் பள்ளிகளிலும் கட்டண முகப்பிட விவரம் குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்று இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment