Tuesday 26 November 2019

2020இல் தமிழ்ப்பள்ளியே நமது தேர்வாகட்டும்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
தேர்வு அடைவு நிலையில் தமிழ்ப்பள்ளிகளின் தேர்ச்சி கண்டுள்ள சூழலில் 2020ஆம் ஆண்டு 'தமிழ்ப்பள்ளியே நமது தேர்வாக'  அமைய வேண்டும் என்று சிலாங்கூர் மாநில இந்திய சமூகத் தலைவர் (தாமான் ஸ்ரீமூடா)அ.பத்மநாதன் வலியுறுத்தினார்.
கோப்பு படம்
இவ்வாண்டு யூபிஎஸ்ஆர் தேர்வில் தமிழ்ப்பள்ளிகள் 78.91 விழுக்காடு நிலையை பதிவு செய்துள்ளது. தேசியப்பள்ளி, சீனப்பள்ளிகளை காட்டிலும் தமிழ்ப்பள்ளிகள் சாதனை புரிந்துள்ளன.

தமிழ்ப்பள்ளிகளை புறக்கணித்து விட்டு பிற பள்ளிகளில் நம்மின மாணவர்கள் அதிகம் சேர்த்த காலம் மலையேறி இப்போது தமிழ்ப்பள்ளிகளில் நம் மாணவர்களை சேர்க்கும் காலம் கனிந்து விட்டது.

தாய்மொழி கல்வியை ஊக்குவிக்கும் வேளையில் தமிழ்ப்பள்ளிகளை காப்பதும் நமது கடமை. தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உதவி திட்டங்களை வழங்கி வரும் நிலையில் தமிழ்ப்பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப பெற்றோர்கள் முன்வர வேண்டும்.
பத்மநாதன்
வரும் 2020ஆம் தமிழ்ப்பள்ளியே நமது தேர்வாகட்டும் என்ற உயரிய சிந்தனையில் இந்திய பெற்றோர்கள் ஆக்ககரமாக செயல்பட வேண்டும்.

அதோடு மாணவர்களின் வெற்றிக்கு முழுமனதாக பாடுபடும் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாக பத்மநாதன் வலியுறுத்தினார்.

அன்வாரின் 'ரீஃபோர்மாசி' செய்யாததை 'ஹிண்ட்ராஃப்' சாதித்தது- கணபதிராவ்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
மலேசிய அரசியல் வரலாற்றில் டத்தோஸ்ரீ அன்வாரின் 'ரீஃபோர்மாசி' இயக்கம் செய்து காட்டாததை 'ஹிண்ட்ராஃப்' போராட்டம் சாதித்து காட்டியது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.
1998ஆம் ஆண்டு அன்றைய துணைப் பிரதமராக பதவி வகித்த டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறையில் அடைக்கப்பட்டபோது அவரது ஆதரவாளர்களிடையே எழுந்த அதிருப்தி அலை 'ரீஃபோர்மாசி' போராட்டமாக வெடித்தது.

இந்த போராட்டம் அதே ஆண்டு நடந்த தேர்தலில் எவ்வித விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, 3இல் 2 பெரும்பான்மை பெற்று தேசிய முன்னணி ஆட்சி புரிந்தது.

ஆனால் 2007ஆம் ஆண்டு இந்தியர் உரிமை போராட்ட களமாக அமைந்த 'ஹிண்ட்ராஃப்' போராட்டம் நாட்டின் அரசியல் சூழலையே ஆட்டி படைத்தது.
இந்த போராட்டத்திற்கு பின்னர் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற நாட்டின் 12ஆவது பொதுத் தேர்தலில் தேமு வசமிருந்த சிலாங்கூர், பேராக், பினாங்கு, கெடா ஆகிய மாநிலங்கள் அன்றைய எதிர்க்கட்சி வசமானதோடு நாடாளுமன்த்தில் 3இல் 2 பெரும்பான்மையை தேமு இழக்கவும் வழிவகுத்தது.

அதன் தொடர்ச்சியாக 13ஆவது பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியினர் பெரும்பான்மையில் வென்றதோடு 14ஆவது பொதுத் தேர்தலில் மத்திய அரசாங்கத்தை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சியமைக்க முடிந்தது.

'ஹிண்ட்ராஃப்' போராட்டம் ஒரு சமூகத்தின் போராட்டம் என்பதை காட்டிலும் சிறுபான்மை இனத்தின் உரிமையை பாதுகாக்கவும் இந்தியர்களிடையே நிலவும் அதிருப்தியை அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டு செல்லவும் வீதி போராட்டமாக அமைந்தது என்று அதன் 12ஆம் ஆண்டு நிறைவு நாள் குறித்து கருத்துரைத்த கணபதிராவ் இவ்வாறு கூறினார்.


வர்த்தகத் துறையில் இந்தியப் பெண்களும் பங்காற்ற வேண்டும்- மாதவன் வலியுறுத்து

கினேஷ் ஜி

கிள்ளான்- 
இந்திய பெண்களியடையே வியாபாரம் தொடர்பான விழிப்புணர்வு அதிகரிக்கப்பட வேண்டும். இந்திய சமுதாயத்தின் பொருளாதார நிலை மேம்பாடு காண பெண்களும் வர்த்தகத் துறையில் ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்று சிலாங்கூர் மாநில திறன், புத்தாக்க கழகத்தின் தலைவர் மாதவன் வேலாயுதம் கூறினார்.
பெண்களும் வர்த்தகத் துறையில் ஈடுபட்டு தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்வதற்கு ஏதுவாக இந்த பயிற்சி நடத்தப்படுகிறது.

சிறு தொழில்களை கற்றுக் கொள்வதன் மூலம் பெண்கள் வீட்டில் இருந்தவாறே எவ்வாறு வருமானம் ஈட்டிக் கொள்வது எனும் அடிப்படையில் பெண்களுக்கான விழா தட்டு அலங்கரிப்பு பயிற்சி நடத்தப்பட்டது.
பிறந்தநாள், திருமணம் உட்பட பல விழா காலங்களை நாம் கொண்டாடுகிறோம். இந்த விழாக்களில் முதன்மையாக இடம்பெறும் தட்டுகள் அலங்கரிப்பதுகூட சிறுதொழிலாக மாறுகின்ற நிலையில் இத்தகைய தொழில் துறைகளில் ஈடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அண்மையில் கிள்ளான் மாநகர் மன்றத்தின் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் சித்தி மரியாவின் சிறப்பு அதிகாரி கலந்து கொண்டு பங்கேற்பாளர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்.


டான்ஸ்ரீ கேவியசுக்கு ஆதரவாக திரண்ட பூர்வக்குடியினர்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
பிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியசின் கரங்களை வலுபடுத்த பிபிபி கட்சியின் 66ஆம் ஆண்டு கூட்டத்திற்கு 100 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து பூர்வக்குடி இன மக்கள் வந்திருந்தனர்.
கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்ந இவர்கள் நேற்று விஸ்மா கேவியஸ் வளாகத்தில் நடைபெற்ற கட்சி ஆண்டுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது ஆதரவை வெளிபடுத்தினர்.

கடந்த 14ஆவது தேர்தலுக்கு முன்னர் கேமரன் மலை தொகுதியின் வேட்பாளராக அறியப்பட்ட டான்ஸ்ரீ கேவியஸ் அங்கு பல மக்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்ததோடு பல இன மக்களின் ஆதரவையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Sunday 24 November 2019

'மைபிபிபி' இனி 'பிபிபி' மட்டுமே- டான்ஸ்ரீ கேவியஸ்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
'மைபிபிபி' கட்சி இனி 'பிபிபி' கட்சி என்ற மழைய அடையாளத்திற்கே திரும்ப உள்ளது என்று அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் தெரிவித்தார்.
மலேசிய அரசியலில் பிபிபி கட்சியாக பல ஆண்டுகளுக்கு ஒரு தனித்துவம் வாய்ந்த கட்சியாக திகழ்ந்தது. சில ஆண்டுகளுக்கு முன் பிபிபி கட்சி மைபிபிபி என பெயர் மாற்றம் கண்டது.

மைபிபிபி என கட்சி உருமாற்றம் கண்ட போதிலும் சிலர் கட்சியை தங்களுக்கு சொந்தமாக்க பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு கட்சியை சீர்குலைக்க முயற்சித்தனர்.

அதலால் நாளை நடைபெறவுள்ள கட்சியின் ஆண்டுக்கூட்டத்தில் கட்சி பெயர் மாற்றம் தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்படும்.

அதோடு, கட்சியில் குழப்பங்களை ஏற்படுத்த முயன்ற தரப்பினருடன் இணைந்து தமக்கெதிரான நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மனம் திருந்தி மீண்டும் கட்சியில் இணைய நினைத்தால் நாளை கம்போங் அத்தாப்பில் நடைபெறவுள்ள கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு தம்முடன் பரஸ்பர பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம் என்று அவர் மேலும் சொன்னார்.


மலேசிய அரசியலை புரட்டி போட்டது 'ஹிண்ட்ராஃப்' மட்டுமே - கணபதிராவ்

ரா.தங்கமணி

கிள்ளான்-
மலேசிய அரசியல் புரட்டி போட்டது இந்தியர்களின் உரிமை போராட்டமான 'ஹிண்ட்ராஃப்' மட்டுமே. ஆனால் இந்தியர்களின் போராட்டத்தில் இன்று பலர் குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றனர் என்று மலேசிய இந்தியர் குரல் அமைப்பின் தோற்றுனர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.
ஹிண்ட்ராஃப் போராட்டத்திற்கு முன்னர் டத்தோஸ்ரீ அன்வாரை உள்ளடக்கிய 'ரீஃபோர்மாசி' (Reformasi), தேர்தல் சீர்திருத்த இயக்கமான 'பெர்சே' போராட்டம் ஆகியவை நடத்தப்பட்டன.

ஆனால் இந்த இரு போராட்டங்களை காட்டிலும் 'ஹிண்ட்ராஃப்' போராட்டமே நாட்டின் அரசியல் தன்மையை ஆட்டம் காணச் செய்தது.
2007 நவம்பர் 25ஆம் தேதி கோலாலம்பூர் வீதியில் இந்தியர் பட்டாளம் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குரலாக எதிரொலித்ததோடு அடுத்த 4 மாதங்களில் நடைபெற்ற 12ஆவது பொதுத் தேர்தலில் ஆளும் தேசிய முன்னணி அரசை ஆட்டி வைத்தது.

பல மாநிலங்கள் மக்கள் கூட்டணி வசமான நிலையில் தேசிய முன்னணி மக்களவையில் மூன்றில் இரு பெரும்பான்மையை இழக்கச் செய்தது.

இன்றைய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆளும் அதிகாரத்தை பெறுவதற்கும் ஹிண்ட்ராஃபின் போராட்டமே  அடித்தளம் ஆகும்.
ஆனால் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் இந்தியர்களின் நலனை ஓரங்கட்டி விட்டு மதவாதத்தை தூக்கிக் கொண்டு அலைகின்றனர்.

மீண்டும் இந்தியர்களின் உரிமையை நிலைநாட்டிட இந்தியர்களிடையே ஒற்றுமை நிலைநாட்டப்படுவது அவசியமாகும் என்று மலேசிய இந்தியர் குரல் அமைப்பின் 12ஆம் ஆண்டு நிறைவுநாள் கூட்டத்தில் உரையாற்றுகையில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான கணபதிராவ் குறிப்பிட்டார்

'பாடாங் செட்டி' பெயர் மாற்றப்படக்கூடாது- MIV மணிமாறன் வலியுறுத்து

ரா.தங்கமணி

கிள்ளான்-
கிள்ளான் வட்டாரத்தில் இந்தியர்களின் பெருமையை பறைசாற்றுகின்ற 'பாடாங் செட்டி'யின் (செட்டி திடல்) பெயரை மாற்றம் செய்ய அனுமதிக்க முடியாது என்று மலேசிய இந்தியர் குரல் இயக்கத்தின் (MIV) சிலாங்கூர் மாநில தலைவர் மணிமாறன் வலியுறுத்தினார்.
இந்த திடல் இங்கு வாழ்ந்த செட்டியார்களின் வரலாற்றை எடுத்துரைக்கிறது. முன்பு இங்கு வாழ்ந்த அச்சமூகத்தினர் திடல் அமைந்துள்ள நிலம் உட்பட பல நிலங்களை தியாகம் செய்துள்ளனர். அந்நிலங்களில் இன்று பல அரசாங்க கட்டடங்கள் அமைந்துள்ளன.

கிள்ளான் வட்டார மக்களின் நலனுக்காக தங்களது நிலங்களை விட்டுக் கொடுத்துள்ள செட்டி சமூகத்திற்கு நன்றி கூறும் வகையில் அமைந்துள்ள பாடாங் செட்டியின் பெயரை மாற்றம் செய்யக்கூடாது.

பாடாங் செட்டியின் பெயரை மாற்றும் முயற்சியை கிள்ளான் மாநகர் மன்றம் முன்னெடுக்கக்கூடாது என வலியுறுத்திய மணிமாறன், பாடாங் செட்டியின் வரலாறு எக்காரணம் கொண்டும் அழிக்கப்படக்கூடாது என்று வலியுறுத்தினார்.

Friday 22 November 2019

யூபிஎஸ்ஆர் தேர்வில் 'கெத்து' காட்டிய தமிழ்ப்பள்ளிகள்

கோலாலம்பூர்-
தமிழ்ப்பள்ளிகள் என்றாலே ஏளனமாக நினைத்து தங்கள் பிள்ளைகளை பிறமொழி பள்ளிகளில் நடைமுறைக்கு சவுக்கடி கொடுத்து தமிழ்ப்பள்ளி மாணவர்களால் எதையும் சாதிக்க முடியும் என்று நிரூபித்துள்ளனர் யூபிஎஸ்ஆர் மாணவர்கள்.
இன்று வெளியான யூபிஎஸ்ஆர் தேர்வு முடிவுகளில் தேர்வு அடைவுநிலையில் தமிழ்ப்பள்ளி சாதித்துள்ளது. தேசிய பள்ளி, சீனப்பள்ளிகளை காட்டிலும் தமிழ்ப்பள்ளிகளின் அடைவுநிலை வெகுவாக உயர்வு கண்டுள்ளது.

இவ்வாண்டு தேர்வு அடைவுநிலையில் தேசியப்பள்ளி 69.77 புள்ளிகளையும் சீனப்பள்ளிகள் 66.16 புள்ளிகளையும் பெற்ற நிலையில் தமிழ்ப்பள்ளிகள் 78.51 புள்ளிகளை பெற்று முதலிடம் பெற்று சாதித்துள்ளது.

இந்த சாதனை நிகழ்த்தப்படுவதற்கு ஆசிரியர்கள், மாணவர்களின் பங்களிப்பு முதன்மை காரணமாக திகழ்கின்றது.

தமிழ்ப்பள்ளிகளை புறக்கணித்தவர்களுக்கு மத்தியில் தமிழ்ப்பள்ளிகளால் சாதிக்க முடியும் என்று 'கெத்து' காட்டியுள்ள ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கு வாழ்த்துகளை கூறுவோம்.

யூபிஎஸ்ஆர் தேர்வில் 8ஏ பெற்றார் கெளரி

கிள்ளான் -
சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவின் புதல்வி கெளரி யூபிஎஸ்ஆர் தேர்வில் அனைத்து பாடங்களிலும் சிறப்பு தேர்ச்சி பெற்றுள்ளார்.
இன்று வெளியான யூபிஎஸ்ஆர் தேர்வு முடிவுகளில் கெளரி அனைத்து பாடங்களிலும் ‘ஏ’ புள்ளியை பெற்றுள்ளார்.

கிள்ளான் ஹைலண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியில் பயின்ற கெளரி 8ஏ பெற்று பெற்றோருக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

தமிழ்ப்பள்ளிகள் மீது பற்று கொண்ட கணபதிராவ், அவரின் துணைவியார் திருமதி புவனேஸ்வரி தங்களது பிள்ளைகளை தமிழ்ப்பள்ளியிலே கல்வி பயில வைத்துள்ளனர்.

கணபதிராவின் மூத்த புதல்வி ஜனனி, ஶ்ரீ மூடா எமரால்ட் தமிழ்ப்பள்ளியில் பயின்றவர் ஆவார்.

Thursday 21 November 2019

யார் வேண்டுமானாலும் பிரதமர் ஆகலாம்- டத்தோஶ்ரீ அன்வார்

கோலாலம்பூர்-

யார் வேண்டுமானாலும் பிரதமர் பதவிக்கு ஆசைப்படலாம். ஆனால் அதனை சரியான வழியில் அடைய வேண்டும் என்று பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
பிரதமர் பதவியை அடைய விரும்புபவர்களை நான் தடுப்பதில்லை. ஆனால் அதற்கென்று வகுக்கப்பட்டுள்ள நடைமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் புரிந்துணர்வுபடி இதற்கான நடைமுறை வகுக்கப்பட்டுள்ளது. அதனை மீறி யாரும் செயல்பட வேண்டாம் என்று போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வார் இப்ராஹிம் மேலும் சொன்னார்.

விரைவில் அமைச்சரவை மாற்றம்- பிரதமர்

கோலாலம்பூர்-

நடப்பு அமைச்சரவையில் சில அதிரடி மாற்றங்கள் நிகழ்த்தப்படலாம் என்று பிரதமர் துன் மகாதீர் கோடி காட்டியுள்ளார்.
நம்பிக்கைக் கூட்டணியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் செயல்திறன் நன்கு ஆராய்ந்த பின்னரே அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படும்.

இன்றோ நாளையோ இந்த மாற்றம் நிகழ்த்தப்படாது. ஆனால் விரைவில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என்று அவர் மேலும் சொன்னார்.

Tuesday 19 November 2019

அரசாங்கத்தின் தவறுகளை கண்மூடித்தனமாக ஆதரிக்க வேண்டாம்- கணபதிராவ்

ரா.தங்கமணி


ஷா ஆலம்-
இனியும் அரசாங்கம் செய்யும் தவறுகளை கண்மூடித்தனமாக ஆதரித்துக் கொண்டிருக்காமல் தவறு சுட்டி காட்டுவதற்கு ஆளும் கூட்டணியின் மக்கள் பிரதிநிதிகள் துணிய வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் வலியுறுத்தினார்.
கடந்த பொதுத் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பக்காத்தான் கூட்டணி மக்கள கொண்டிருந்த நம்பிக்கையை  பூர்த்தி செய்யாத காரணத்தினாலேயே தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளில் நாம் நிராகரிக்கப்பட்டிருக்கிறோம்.

கடந்த பொதுத் தேர்தலில் இன பாகுபாடு, வயது பின்னணி என எதுவும் பாராமல் ஒட்டுமொத்த மலேசியர்களும் பக்காத்தான் கூட்டணிக்கு ஆதரவாக அணி திரண்டனர்.
தங்களின் உரிமைகள் நிலைநாட்டப்படுமா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பெரும்பான்மை மலாய்க்காரர்கள் பக்காத்தான் கூட்டணியை ஆதரிக்காத நிலையில் மலாய்க்காரர் அல்லாதவர்களே பக்காத்தானை முழுமையாக ஆதரித்து ஆட்சி அதிகாரத்தில் அமர வைத்தனர்.

ஆனால், ஆட்சியை கைப்பற்றிய பின்னர் மலாய்க்காரர் உரிமையை தற்காக்க தன்மான மாநாடு, ஜாவி எழுத்து திணிப்பு, சர்ச்சைக்குரிய சமய போதகருக்கு  விருந்துபசரிப்புடன் பலத்த பாதுகாப்பு என்று மலாய்க்காரர் உரிமையை பற்றி பேசும் அதே வேளையில் மலாய்க்காரர் அல்லாதோரின் நலன் காக்க தவறுகிறோம்.

உயிர்ப்புடன் இல்லாத விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என குற்றஞ்சாட்டி ஆளும் கூட்டணியைச் சேர்ந்த ஆட்சிக்குழு உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் உட்பட 12 பேர் சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிருப்தி அலையாக உருவெடுத்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை காரணம் காட்டி தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டோம். ஆட்சியை கைப்பற்றினால் 100 நாட்களில் குடியுரிமை, அடையாள அட்டை இல்லாத இந்தியர்களுக்கு அவை வழங்கப்படும் என வழங்கப்பட்ட வாக்குறுதிக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் என்ன சம்பந்தம்?

பல்வேறு தவறுகள் நிகழ்ந்து கொண்டிருப்பதால் மக்கள் பக்காத்தான் கூட்டணி மீது கொண்டிருந்த நம்பிக்கை குறைந்து கொண்டு வருகிறது என்ற உண்மையை ஆளும் தலைவர்கள் உணர வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகள் அரசாங்கம் செய்யும் தவறுகளை இனியும் கண்மூடித்தனமாக ஆதரிக்கக்கூடாது. தேவை ஏற்பட்டால் அரசாங்கத்தின் தவறுகளை துணிந்து கேள்வி எழுப்ப வேண்டும் என்று பிரதமர் மகாதீர் கூறியுள்ளார். இனி அவரின் கூற்றையே தாம் பின்பற்றப் போவதாக கணபதிராவ் வலியுறுத்தினார்.

Monday 18 November 2019

பக்காத்தான் கூட்டணிக்கு 'மரண அடி' கொடுத்துள்ள தேமு

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
நேற்று நடைபெற்று முடிந்த தஞ்சோங் பியாய்  நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான்  கூட்டணிக்கு தேசிய முன்னணி 'மரண அடி' கொடுத்துள்ளது.
நடப்பு அரசாங்கத்தை ஆளும் அதிகாரத்தை கொண்டுள்ள பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி வேட்பாளரை 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கச் செய்துள்ளது தேசிய முன்னணி.

ஆட்சியாளும் அதிகாரம் கொண்ட போதிலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு துணை அமைச்சராக பதவி வகித்த போதிலும் இத்தொகுதியை பக்காத்தான் கூட்டணி தற்காக தவறியுள்ளது உண்மையிலேயே இக்கூட்டணிக்கு விழுந்த முதல் அடியாகும்.

14ஆவது பொதுத் தேர்தலில் 80% மக்களின் நம்பிக்கையோடு ஆட்சி பிடித்த பக்கத்தான் கூட்டணியை  இந்த இடைத்தேர்தலில் மக்கள் வெகுவாக புறக்கணித்திருப்பது இரண்டாவது அடியாகும்.

முன்பெல்லாம் தேசிய முன்னணியும் மசீசவையும்  சாடிய மக்கள் இன்று அதே கூட்டணி வேட்பாளரை பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்திருப்பது பக்கத்தான் கூட்டணிக்கு விழுந்த மூன்றாவது அடி ஆகும்.

இந்த இடைத்தேர்தலில் மக்கள் உண்மையான விருப்பத்தின் பேரில்தான் தேசிய முன்னணி வேட்பாளரை வெற்றிபெற செய்துள்ளார்களா? என்ற கேள்வி எழலாம். ஆனால் பக்கத்தான் அரசாங்கத்தின் மீதுள்ள வெறுப்பினாலலேயே தேசிய முன்னணி வேட்பாளரை வெற்றி பெறச் செய்துள்ளோம் என மக்கள் மண்டையில் உறைக்கும் படி மிகப்பெரிய தோல்வியை கொடுத்து பாடம் புகட்டியுள்ளனர்.

புறக்கணிக்கப்பட்ட ஒரு கட்சியை, கூட்டணியை மக்கள் மீண்டும் தலைதூக்க செய்துள்ளது ஒரு  ஆளும் அரசாங்கம் கொண்டுள்ள பலவீனத்தின் எச்சரிக்கையாகவே கருதமுடிகிறது.

எது எப்படியாயினும் இந்தத் தேர்தலை பொறுத்தவரைஃ தன்மீதான கரைகளையும் குற்றச்சாட்டுகளையும் துடைத்தெறிந்து மீண்டும் நம்பிக்கை நட்சத்திரமாக உலா வர தொடங்கியுள்ள தேசிய முன்னணி பக்கத்தான் கூட்டணிக்கு கொடுத்துள்ள 'மரண அடி'யாக இது அமைந்துள்ளது.

இந்த தோல்விகள் பாடம் கற்றுக்கொண்டு பக்கத்தான் கூட்டணி தன்னை சீர்திருத்திக் இல்லை என்றால் நிஜமாகவே இக்கூட்டணி 'மரணக்குழியில்' தள்ளப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை.

 பக்கத்தை நடப்பான் காலாவதி ஆகிவிடும் தூரம் வெகு தொலைவில் இல்லை

Saturday 16 November 2019

சிலாங்கூர் மாநில அரசின் தீபாவளி கொண்டாட்டம்


ஷா ஆலம்-
சிலாங்கூர் மாநில அரசின் தீபாவளி கொண்டாட்டம் நாளை 16ஆம் தேதி மிக விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது
நாளை 16ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு  Dewan Orang Ramai, Sungai Pelek, Sepang எனும் இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுக்கு சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிருடின் சாரி, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் உட்பட பல தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

கண்ணை கவரும் கலை நிகழ்ச்சிகளோடும் சுவையான விருந்துபசரிப்போடும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த தீபாவளி கொண்டாட்டத்திற்கு சுற்றுவட்டார மக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கணபதிராவ் அனைவவரையும் அழைக்கின்றார்.

எம்பி பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் – பிரபாகரன்

கோலாலம்பூர்-
பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தாம் விலகப் போவதில்லை என்று பி.பிரபாகரன் தெரிவித்தார்.
பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் தியான் சுவா இத்தொகுதியில் போட்டியிடுவதற்கு ஏதுவாக தாம் பதவி விலக வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்தாலும் தாம் இப்பதவியிலிருந்து விலக் போவதில்லை.

பதவி விலகுமாறு பலர் கோரிக்கை விடுத்தாலும் மக்களுக்கான எனது சேவை தொடரும் என்று அவர் மேலும் சொன்னார்.

கடந்த 14ஆவது பொதுத் தேர்தலின்போது தியான் சுவா போட்டியிட தேர்தல் ஆணையம் அனுமதிக்கவில்லை. அதனை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் தியான் சுவா தேர்தலில் போட்டியிட தடையில்லை என்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து பத்து தொகுதியில் தியான் சுவா மீண்டும் போட்டியிடுவதற்கு ஏதுவாக பிரபாகரன் தமது ராஜினாமா செய்ய வேண்டும் என்று 14 அரசு சார்பற்ற இயக்கங்கள் கோரிக்கை விடுத்தன.

Advertisement


Wednesday 13 November 2019

சிலாங்கூர் அரசின் இலவச குடிநீருக்கான விண்ணப்பப் பதிவு

சிப்பாங்-

மாதந்தோறும் வெ.4,000க்கும் குறைவான குடும்ப வருமானத்தை பெறும் குடும்பங்கள் சிலாங்கூர் மாநில அரசின் இலவச குடிநீர் திட்டத்திற்கான விண்ணப்பப் பாரங்களை பண்டார் பாரு சாலாக் திங்கி மக்கள் பூர்த்தி செய்தனர்.
அடுத்தாண்டு மார்ச் மாதம் அமலுக்கு வரும்  இத்திட்டத்திற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில்  அண்மையில் பண்டார் பாரு சாலாக் திங்கி மகா மாரியம்மன் ஆலயத்தில் மனுக்கள் விநியோகிக்கப்பட்டது.
இவ்வாண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இலவச குடிநீர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்று சிலாங்கூர் மாநில தகவல் இலாகா இயக்குனர் தேவராஜ் சுப்பிரமணியம் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் விண்ணப்பங்களை பதிவு செய்து சிப்பாங் குடிநீர் வாரிய நிர்வாக அதிகாரி நிஜாமிடம் வழங்கினர்.
சுங்கை பிலே மலேசிய சமூக நம்பிக்கை இயக்கத்தின் தலைவர் பூ.அன்பரசு, விண்ணப்பப் பாரங்களை சரி பார்க்கும் பணியை சிறப்பாக செய்தார்.

Advertisement


Sunday 10 November 2019

'சொஸ்மா' திருத்தம்: வாக்களித்த மக்களுக்கு செய்யும் துரோகம்- ரோனி லியூ

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலின்போது ஆட்சியை கைப்பற்றினால் ‘சொஸ்மா’ சட்டம் அகற்றப்படும் என்று வழங்கிய வாக்குறுதியை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அமல்படுத்த வேண்டும் என்று சுங்கை பீலேக் சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியூ வலியுறுத்தினார்.
சொஸ்மா சட்டம் மனித உரிமையை மீறச் செய்வதாகும். அதனாலேயே அதனை அகற்றுவதற்கு பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தனது தேர்தல் கொள்கைகளில் ஒன்றாக அதனை கொண்டிருந்தது.

ஆனால், இன்று சொஸ்மா சட்டம் அகற்றப்படாது, திருத்தம் மட்டுமே செய்யப்படும் என கூறுவது நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.

நாட்டில் நிலவும் குற்றச்செயல்களையும் பயங்கரவாதத்தையும் துடைத்தொழிப்பதற்கு பல்வேறு சட்டங்கள் அமலில் உள்ளன. அதை கொண்டே நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யலாம்.

சொஸ்மா சட்டத்தின் கீழ் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 பேர் உட்பட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். கடுமையான குற்றங்களை புரிந்தவர்களை பிற சட்டங்களின் கீழ் தண்டிக்கலாம்.

'திருத்தம்'  என்ற பெயரில்  சொஸ்மா சட்டத்திற்கு இன்னும் உயிர் கொடுத்து கொண்டிருப்பதை விட அதை முற்றாக நீக்குவதே சிறந்ததொரு தீர்வாக அமையும் என்று ரோனி லியூ மேலும் கூறினார்.
Advertisement 

பக்காத்தான் தலைமைத்துவம் மீது இந்தியர்கள் அதிருப்தி: கணபதிராவ்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
இந்திய சமுதாயத்திற்கு என்ன வாக்குறுதிகள் வழங்கி ஆட்சியை பிடித்தோம் என்பதை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தலைவர்கள் மறந்துவிடக்கூடாது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.
கடந்த 14 பொது தேர்தலின் போது இந்திய சமுதாயத்திற்கு பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ஆயினும் ஆட்சி பிடித்து ஒன்றரை ஆண்டுகள் கழிந்த பின்னரும் சில வாக்குறுதிகள் நிறைவேற்ற படாதது இந்திய  சமுதாயத்தில் பெரும் அதிருப்தி அலையாக உருவெடுத்துள்ளது.

பக்காதான் ஹராப்பன் கூட்டணிக்கு இந்திய சமுதாயம் வழங்கிய ஆதரவு மிகப் பெரியது. ஆனாலும் இந்த ஒன்றரை ஆண்டு ஆட்சி காலத்தில் இந்திய சமுதாயம் பெரும் அதிருப்தி கொண்டிருப்பது இக்கூட்டணி பலவீனமானது.

இந்த ஒன்றரை ஆண்டு ஆட்சி காலத்தில் தலைதூக்கியுள்ள பல்வேறு விவகாரங்களால் இந்த அதிருப்தி அலை உருவாகியுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலின் போது இந்திய சமுதாயத்திற்கு என்னென்ன வாக்குறுதிகள் வழங்கப்பட்டன, எதைக்கொண்டு நாம் ஆட்சி அமைத்தோம் என்ற உண்மையை பக்காத்தான் கூட்டணி மறந்துவிடக்கூடாது.

இந்திய சமுதாயத்தின் ஆதரவை கொஞ்சம் கொஞ்சமாக நாம் இழந்து கொண்டிருக்கிறோம் என்ற உண்மையை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் அவர் குறிப்பிட்டார்.

அதனை சீர்செய்யும் வகையில் இப்போதே ஆக்ககரமான நடவடிக்கையில் நாம் இறங்க வேண்டும்.

மாற்றத்தை விரும்பிய மக்களுக்கு நாம் ஏமாற்றத்தை கொடுத்து விடக்கூடாது என்று கணபதிராவ் மேலும் சொன்னார்.
Advertisement


Saturday 9 November 2019

ஸாகீர் நாய்க்கை அனுப்ப மாட்டோம் - இந்தியாவுக்கு விஸ்மா புத்ரா அதிகாரப்பூர்வ கடிதம்

கோலாலம்பூர்-
சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாக்கீர் நாய்க்கை சொந்த நாட்டுக்கு திரும்ப அனுப்புவதில்லை என்ற நிலைப்பாட்டில் புத்ராஜெயா உறுதியாக உள்ளது என்று விஸ்மா புத்ரா இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பும் என்று வெளியுறவு அமைச்சர் சைஃபுடின் அப்துல்லா தெரிவித்தார்.
இவ்விவகாரம் குறித்து சட்டத்துறை தலைவர் தோம்மி தோமஸிடம் விவரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
ஸாகீர் நாய்க்கை சொந்த நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் ஏன் அனுப்ப முடியாது என்பதற்கு பிரதமர் துன் மகாதீர் பதிலளித்துள்ளார் என்று அவர் சொன்னார்.
Advertisement


Friday 8 November 2019

ஆஸ்ட்ரோ உறுதுணை ஏற்பாட்டில் இலவச நிதி கல்வியறிவு பட்டறை

கோலாலம்பூர்-
பணத்தைச் சேமிக்க வேண்டுமா? பணி ஓய்வு திட்டம் குறித்த தகவல்கள் அறிய வேண்டுமா? அப்படியென்றால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 10ஆம் தேதி சுபாங் டெய்லர் பல்கலைக்கழகத்தில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை ஆஸ்ட்ரோ உறுதுணை ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இலவச நிதி கல்வியறிவு பட்டறையில் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்.
இப்பட்டறையில் பணத்தை எவ்வாறு சேமிப்பது, விருப்பம் மற்றும் தேவைக்கு இடையிலான வேறுபாடுகள், ஒரு பட்ஜெட்டை உருவாக்கி அதனை எவ்வாறு செயல்படுத்துவது, மேல்கல்வி பட்டப்படிப்பு செலவுகள், சொந்த வீடு வாங்கும் வழிமுறைகள்,  பணி ஓய்வு திட்டம் என பல அரிய தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படும்.

இந்தத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள விநியோக சங்கிலி மேலாண்மையில் நன்கு புலமைப் பெற்ற டெய்லர் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் முருகன் கிருஷ்ணமூர்த்தி, AKPK எனப்படும் நிதி ஆலோசனை மற்றும் கடன் நிர்வாக நிறுவனத்தின் நிதி கல்வித் துறை மேலாளர் நிர்மலா சுப்பிரமணியம், ASNB சந்தைப்படுத்தல் மற்றும் நிதி கல்வியறிவு பகுதியின் துணைத் தலைவர் சித்தி நோரிலா ஷம்சுல் பஹ்ரி மற்றும் இளம் செய்தி வாசிப்பாளரும் இந்தியாவில் ஹானர் விருது பெற்ற நேசன் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

ஆகவே, இப்பட்டறையில் கலந்து கொண்டு பயன் பெற விரும்புவார்கள் http://bit.ly/JomSave அகப்பக்கத்தை நாடி இப்பொழுதே பதிவுச் செய்யுங்கள்.
இந்த இலவச பட்டறை ஆஸ்ட்ரோ உறுதுணை நிதி ஆலோசனை மற்றும் கடன் நிர்வாக நிறுவனம் மற்றும் டெய்லர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்குகின்றது. 

Thursday 7 November 2019

எல்டிடிஇ; குணசேகரன் மீதான குற்றச்சாட்டுகள் ரத்து

சிரம்பான்
சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரன் மீது சுமத்தப்பட்ட இரு குற்ற்ச்சாட்டுகளை இன்று சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றம் ரத்து செய்தது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்க முயற்சித்தார் எனும் குற்றச்சாட்டின் கீழ் சொஸ்மா சட்டத்தில் பி.குணசேகரன், மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் ஜி.சாமிநாதன் உட்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதில் விடுதலைப் புலிகள் சார்ந்த பொருட்களை வீட்டிலும், அலுவலகங்களிலும் வைத்திருந்ததாக குணசேகரன் மீது 2 குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

குணசேகரன் மீதான குற்றச்சாட்டை ரத்து செய்யுமாறு அரசு தரப்பு வழக்குரைஞர் அஸ்லிண்டா நீதிபதி மடிஹா ஹருல்லாவை கேட்டுக் கொண்டார்.

இன்றைய வழக்கு விசாரணையின்போது குணசேகரன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

மதவாதத்தை தூண்டுவோரின் சுயநலனுக்கு பலியாகாமல் மலேசியராய் ஒன்றிணைந்திருப்போம்- கணபதிராவ்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
மலேசியர்களாகிய நம்மிடம் சகிப்புத்தன்மையும் பல இனங்களுக்கிடையிலான நல்லிணக்கமும்  அனுசரிக்கப்பட்டு வருகிறது. மக்களாகிய நம்மிடம் எவ்வித வேறுபாடும் இல்லை. ஆனால் சிலரின் சுயநலப் போக்கினாலே மத, பிரிவினைவாதப் போக்கு தலைதூக்குகின்றது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.
அனைத்து மக்களிடமும் ஒரு பரஸ்பர நல்லுறவு கடைபிடிக்கப்படுகிறது. அதனாலேயே அனைத்து மக்களின் பெருநாள் காலங்களிலும் அனைத்து இன மக்களும் பங்கெடுக்கின்றனர்.

சீனப் பெருநாள், ஹரிராயா, தீபாவளி என எந்தவோர் இனத்தின் பெருநாள் கொண்டாட்டமாக இருந்தாலும் அனைவரும் பங்கெடுக்கிறோம். மலேசியர் என்ற உணர்வாலேயே நாம் அனைத்து இன மக்களின் பெருநாள் கொண்டாட்டங்களில் கூடி மகிழ்கிறோம்.

ஆனால், அவ்வப்போது நாட்டில் எழும் மதம் சார்ந்த பிரச்சினைகள் மலேசியர்களியடையே நிலவும் நல்லிணக்கத்தை சீர் குலைத்து விடக்கூடாது. இந்த மதம் சார்ந்த பிரச்சினைகள் சில தரப்பினராலேயே தூண்டி விடப்படுகிறது. அவர்களின் சுயநலப் போக்கு இந்த பிரச்சினை உருவாவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது.

சில தரப்பினரின் சுயநலப் போக்குக்கு பலியாகாமல் மலேசியராய் நமக்குள் நிலவும் நல்லிணக்கத்தை நாம் ஒருபோதும் தொலைத்து விடகூடாது என்று அண்மையில் கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியின் ஏற்பாட்டில் நடைபெற்ற தீபாவளி உபசரிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட சிறார்களுக்கு கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினருமான கணபதிராவ் பணமுடிப்புகளை வழங்கினார்.

Advertisement

முந்தைய தவறுகளை மீண்டும் செய்ய விரும்பவில்லை- துன் மகாதீர்

கோலாலம்பூர்-
ஐந்தாண்டு கால தவணை முடிவதற்கு முன்னரே பிரதமர் பதவியிலிருந்து விலகும் தமது நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ள பிரதமர் துன் மகாதீர், கடந்த காலங்களில் செய்த தவற்றை மீண்டும் செய்ய விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
தமக்கு பின்னர் நடைபெற்ற நியமங்களில் பல தவறுகள் நிகழ்ந்துள்ளன. அதே போன்ற இன்னுரு தவற்றை செய்ய விரும்பவில்லை.

2003ஆம் ஆண்டு தாம் பிரதமர் பதவியிலிருந்து விலகிய பின்னர் அப்பதவிக்கு துன் அப்துல்லா அஹ்மட் படாவி, டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டதில் தமக்கு அதிருப்தி நிலவுகிறது.

நாட்டின் 5ஆவது பிரதமராக அப்துல்லா அஹ்மாட் படாவி 2003- 2009 வரையிலும் டத்தோஶ்ரீ நஜிப் 2009 முதல் 14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி ஆட்சி அதிகாரத்தை இழக்கும் வரையிலும் பிரதமராக பதவி வகித்தனர்.
தமது பதவி விலகலுக்கான தேதியும் நேரமும் எப்போது என குறிப்பிட மறுத்த துன் மகாதீர், இந்த தவணை முழுமைக்கும் தாம் பதவியில் நீடிக்கப்போவதில்லை என்றார்.

தாம் பதவியில் நீடிப்பது இரண்டு ஆண்டுகளா? மூன்றாண்டுகளா? என்பதை சொல்ல முடியாது. ஆனால் வாக்குறுதி அளித்ததுபோல திடீரென அப்பதவியிலிருந்து விலகுவேன் என்று அவர் மேலும் சொன்னார்.
Advertisement

Tuesday 5 November 2019

பிரதமர் பதவி அன்வாரிடமே ஒப்படைக்கப்படும்- துன் மகாதீர்

பேங்காக்-
தமக்கு பின்னர் பிரதமர் பதவியை பிகேஆர் கட்சியின் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் ஒப்படைப்பேன் என்று பிரதமர் துன் மகாதீர் மறுஉறுதிப்படுத்தியுள்ளார்.
வரும் 15ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னரே பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக குறிப்பிட்ட அவர், அன்வாரிடம் அப்பதவி ஒப்படைக்கப்படுமே தவிர பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலியிடம் அல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆயினும் தாம் பதவி விலகும் தேதி இன்னமும்  நிர்ணயிக்கப்படாத நிலையில் தாம் செய்ய வேண்டிய கடமைகள் இன்னமும் உள்ளன. அந்த கடமைகள் நிறைவேறிய பின்னர் தாம் அப்பதவியிலிருந்து விலகுவதாக் அவர் அறிவித்தார்.

ADVERTISEMENT

Monday 4 November 2019

தேசிய நிலையிலான தீபாவளி உபசரிப்பை அரசாங்கம் நடத்தாதது ஏன்? டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் கேள்வி

கோ.பத்மஜோதி

கோலாலம்பூர்-
தேசிய நிலையிலான தீபாவளி பொது உபசரிப்பை பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் இன்னும் நடத்தாதது ஏன்? என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பினார்.
கடந்த தேசிய முன்னணி ஆட்சியின்போது ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி பொது உபசரிப்பு நடத்தப்பட்டு வந்தது.

என் நாட்டின் மூன்றாவது பெரிய நமது இருக்கின்ற இந்தியர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் அவர்களின் பெருநாள் கொண்டாத்தை தேசிய அளவில் அனுசரிப்பதை தேமு அரசாங்கம் ஒருபோதும் தவறவிட்டதில்லை.

ஆனால் பக்காத்தான் அரசாங்கம் இந்தியர்களுக்கு மதிப்பளிக்கிறதா? எனும் கேள்விக்குறி எழும் வகையில் தீபாவளி  முடிந்து ஒரு வாரம் கடந்த பின்னரும் தேசிய நிலையிலான தீபாவளி உபசரிப்பை பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் மேற்கொள்ளாதது ஏன்?

தீபாவளி பொது உபசரிப்பை பக்காத்தான் ஹராப்பான் நடத்தவில்லை என்பது முன்கூட்டியே  தெரிந்திருந்தால் மஇகாவின்  தீபாவளி உபசரிப்பு இன்னும் பெரிய அளவில் கொண்டாடி இருப்போம் என்று மஇகாவின் தீபாவளி பொது உபசரிப்பின்போது மேலவை தலைவருமான டான்ஶ்ரீ வின்கேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.

மஇகா மீண்டும் எழுச்சி பெறும்- டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் நம்பிக்கை

கோ.பத்மஜோதி
படங்கள்: கினேஷ் ஜி

கோலாலம்பூர்-
மஇகா என்றுமே இந்தியர் நலன் காக்கும் கட்சி. இந்தியர்களுக்காகவே தோற்றுவிக்கப்பட்ட இக்கட்சி இந்தியர் நலன் சார்ந்த எந்த விவகாரத்திலும் விட்டுக் கொடுக்கும் போக்கை கடைபிடிக்காது என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இந்தியர்களை காக்கும் கட்சியாக மஇகா இருப்பதால்தான் ஆட்சியில் இல்லாவிட்டாலும் தீபாவளி பெருநாள் கொண்டாட்டத்தை நாம் ஒருபோதும் ஓரங்கட்டியதில்லை.

கடந்த 60 ஆண்டுகளாக மஇகாவை ஆட்சி அதிகாரத்தில் அமர வைத்த இந்திய சமுதாயத்திற்கு நன்றி கூறிக் கொள்ளும் கடப்பாடாகவே இந்த தீபாவளி உபசரிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியர்கள் மஇகாவை புறக்கணித்திருந்தாலும்  மஇகா ஒருபோதும் இந்தியர்களை கைவிட்டதில்லை. இந்தியர் நலன் காக்கும் அரணாகவே மஇகா எப்போதும் செயல்படும்.  இந்தியர்களின் மிகப் பெரிய ஆதரவோடு மஇகா மீண்டும் எழுச்சி பெறும் காலம் வெகு தூரம் இல்லை என்று மஇகாவின் தீபாவளி உபசரிப்பு நிகழ்வில் செய்தியாளர் சந்திப்பின்போது டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார்.


இன்றைய பக்காத்தான் ஹராப்பானின் பலவீனத்தை இந்தியர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். ம இகாவை முன்பு கடுமையாக சாடிய பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களின் 'மெளனம்' இந்தியர்களிடையே அதிருப்தி அலையை ஏற்படுத்தியுள்ளது.

அவர்களின் பலவீனமே மஇகா பலம் பெறுவதற்கு அடிகோலாக அமைந்துள்ளது. இந்தியர்களின் நம்பிக்கை பெற்ற கட்சியாக மஇகா மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் என்று மேலவை தலைவருமான டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக், மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் துன் ச.சாமிவேலு, மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், அம்னோ தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி, மசீச தலைவர் வீ கா சியோங், மேலவை துணை தலைவர், மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எஸ்.சரவணன், உதவித் தலைவர்கள், டத்தோ டி.மோகன், டத்தோ தோ.முருகையா, டத்தோ சி.சிவராஜ் உட்பட மஇகா மாநில, தொகுதி, கிளைத் தலைவர்களும் உறுப்பினர்களும் பொதுமக்களும்  திரளாக கலந்து கொண்டனர்.