Saturday 12 October 2019

எல்டிடிஇ- இரு சட்டமன்ற உறுப்பினர்களை ஜசெக தற்காக்கும்- லிம் குவான் எங்

கோலாலம்பூர்-
சொஸ்மா எனப்படும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மலாக்கா ஆட்சிக் குழு உறுப்பினர் ஜி.சாமிநாதன், நெகிரி செம்பிலான் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் இருவரும்  கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர்கள் இருவரையும் தற்காத்து ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
கைது செய்யப்பட்ட தங்கள் கட்சியின் இரு சட்டமன்ற உறுப்பினர்களும் குற்றமற்றவர்கள் என நம்புவதாகவும், இதுவரையில் தங்களின் கட்சியின் கோட்பாடுகளான நடுநிலைமை, சரிசமமான அணுகுமுறை, வன்முறையில்லாத அமைதியான முறையில் தீர்வு காணுதல் ஆகியவற்றிலிருந்து மாறுபட்ட நிலைப்பாட்டில் அவர்கள் செயல்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.

எனினும், ஜசெக அந்த இருவர் பின்னும் உறுதியாக நிற்கும் என சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் தான் கூறியிருப்பதாகவும் லிம் குவான் எங் மேலும் தெரிவித்தார்.

இவர்கள் இருவர் மீதான விசாரணைகள் சீக்கிரம் நடத்தி முடிக்கப்பட்டு, அதற்குரிய அறிக்கைகள் அரசாங்கத் தலைமை வழக்கறிஞரிடம் விரைவாக அனுப்பப்பட காவல் துறையினர் உறுதியளித்தனர். இதன் வாயிலாக அந்த இரு ஜசெக சட்டமன்ற உறுப்பினர்களும் சீக்கிரமாக விடுதலை செய்யப்பட முடியும்” என்றும் லிம் குவான் எங் தனது அறிக்கையில் தெளிவுபடுத்தினார்.

சாமிநாதன், குணசேகரன் கைது தொடர்பில் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்ப்பால், ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர் ஆகிய இருவரும் சட்ட ஆலோசகர்களாக நியமிக்கப்படுகின்றனர் என்றும் குவான் எங் சுட்டிக் காட்டினார். 

கைது செய்யப்பட்டவர்களைத் தொடர்பு கொள்ள அவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களின் வழக்கறிஞர்களுக்கும் அனுமதி வழங்கப்படும் எனவும் காவல் துறையினர் தெரிவித்திருப்பதாக குவான் எங் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்டவர்கள், அவர்களின் குடும்பத்தினர், வழக்கறிஞர்கள் மற்றும் அரசு தரப்பு அதிகாரிகள் ஆகியோருக்கு ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட ஜசெகவின் சார்பில் கட்சியின் உதவித் தலைவர் எம்.குலசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் குவான் எங் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment