Saturday, 7 September 2019

சீபில்ட் ஆலய மோதல், உயிரிழப்பு நான் காரணமா? வேடிக்கையானது- கணபதிராவ் விளக்கம்

ஷா ஆலம்-
சீபில்ட் ஆலயத்தில் நிகழ்ந்த மோதலை அடுத்து தீயணைப்பு வீரர் ஒருவரின் உயிரிழப்புக்கு தாம் காரணம் என குற்றஞ்சாட்டப்படுவது வேடிக்கையானது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் விளக்கம் அளித்துள்ளார்.

ஜசெக, பக்காத்தான் தலைவர்கள் சிலரை ‘இனவெறியர்கள்’ என்று குற்றஞ்சாட்டியுள்ள அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அஸ்ராஃப் வஜ்டி, எங்களை இனவெறியர்கள் என்று குற்றஞ்சாட்டி எங்களையே ஆயுதமாகக்  கொண்டு அரசியல் நடத்தி வரும் அம்னோகாரர்கள், இன்னமும் அதே பாணியையே தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.

பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் இனப் பிரிவினையை தூண்டுகிறது என அடுக்கடுக்கான பொய்களை சொல்லி மக்கள் மனதில் நஞ்சை விதைத்து வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையிலான கருத்துகளை அஸ்ராஃப் வஜ்டி வெளியிட்டு வருகிறார். அதில் என்னை பற்றியும் சில அவதூறுகளை பரப்பியுள்ளார்.

சீபில்ட் ஆலய விவகாரத்தில் நான் இனவாதத்தை தூண்டிவிட்டு தீயணைப்பு வீரரின் உயிரிழப்பு காரணமாக இருந்தேன் என்று அஸ்ராஃப் வஜ்டி கூறியுள்ளார். இவ்வள்வு நாட்கள் இவர் கோமாவில் இருந்தார் போல்.

சீபில்ட் ஆலயத்தில் நிகழ்ந்த கலவரத்திற்கு மூலக் காரணம் ஆலயத்திற்குள் அத்துமீறி 
நுழைந்த 50 பேர் கொண்ட கும்பல்தான். அவர்கள்தான் இந்த பிரச்சினையை கலவரமாக திசை திருப்பியவர்கள். திட்டமிட்டே கூலி கொடுத்து சில தரப்பினரால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள். இதனை கடந்த 28 நவம்பர் 2018இல் உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ முஹிடின் யாசினும் செய்தியாளர்களிடம் உறுதிபடுத்தியுள்ளார்.

பிரதமர், பக்காத்தான் தலைவர்களும் இந்த பிரச்சினைக்கு மூலக் காரணம் சம்பந்தப்பட்ட அந்த குண்டர் கும்பல்தான் என கூறும் நிலையில் அந்த பிரச்சினைக்கு நான் எப்படி காரணமாவேன்?

சில கும்பல் செய்த அட்டூழியத்தை தடுப்பதற்கும் ஆலயத்தை பாதுகாக்கவுமே அங்கு மக்கள் கூடினரே தவிர யாருடைய தூண்டுதலின் பேரிலும் அல்ல.
அத்துமீறி ஆலயத்திற்குள் நுழைந்த குணடர் கும்பல் குறிப்பிட்ட வார்த்தையை கூறி அத்துமீறி ஆக்கிரமிக்க நினைத்ததை இனவாதத்தை தூண்டும் நோக்கம் என்று கருதாமல் வேறு எப்படி குறிப்பிடுவது? விருந்துக்கு வந்தவர்கள் என்றா கருத முடியும்?

தன் மீது பொய்களை அள்ளி தெளித்த அந்த குண்டர் கும்பலின் அத்துமீறலை மட்டும் குறிப்பிட மறந்து விட்டார்.

மக்கள் எதிர்நோக்கி வரும் பல பிரச்சினைகளுக்கு ஜசெக குரல் கொடுத்து வந்துள்ளது. குறிப்பாக கடந்த கால ஆட்சியில் நிகழ்ந்த பல முறைகேடுகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்துள்ளோம்.

தாபோங் ஹாஜி முறைகேடு, பெல்டா பிரச்சினை, 1எம்டிபி, எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிதி முறைகேடு, நாட்டின் கடன், இந்தியர் விசுவாசம், சீனர்களை ‘விருந்தாளி’ என குறிப்பிட்ட ஸாகீர் நாய்க், ஈப்போவில் இந்து ஆலயத்தில் சிலைகளை உடைத்த இந்தோனேசிய ஆடவனின் செயலை கண்டிக்காத அம்னோவும் டாக்டர் அஸ்ராஃப் வஜ்டியும் ஜசெகவையும் பக்காத்தான் ஹரப்பான் தலைவர்களை குறை சொல்ல தகுதியற்றவர்கள்.


உங்களின் இனவாத அரசியலை மக்கள் புரிந்து கொண்டதால்தா கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் உங்களை தோல்வியடையச் செய்தனர். மக்கள் ஏன் அம்னோ, அதன் கூட்டணி கட்சிகளை  புறக்கணித்தனர் என்ற உண்மையை விளங்கி கொள்ள வேண்டும். அதை விடுத்து இன்னும் இனம், மதம் சார்ந்த விவகாரங்களை எழுப்பிக் கொண்டு மலேசியர்களிடையே நிலவும் நல்லிணக்கத்தை சீர் குலைக்க வேண்டாம் என்று கணபதிராவ் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment