Tuesday 27 August 2019

ஆலயங்களுக்கு மானியம்; உயர்கல்வி மாணவர்களுக்கு கல்வி நிதி- கணபதிராவ் வழங்கினார்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
சிலாங்கூர் மாநிலத்தில் அமைந்துள்ள ஆலயங்களுக்கும் உயர்கல்வி பயிலும் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கும் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் இன்று மானியங்களை வழங்கினார்.

இவ்வாண்டு ஐந்தாவது முறையாக 30 கோயில்களுக்கு வெ. 210,000 மதிப்புள்ள மானியங்களை சம்பந்தப்பட்ட ஆலய நிர்வாகங்களிடம் கணபதிராவ் வழங்கினார். அதேபோன்று 6ஆவது முறையாக உயர்கல்வி பயிலும் 19 மாணவர்களுக்கு வெ.93,000 மதிப்பிலான காசோலைகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய கணபதிராவ், ஆலயங்களுக்கு மானிய ஒதுக்கீடு வழங்குவது அவர்களின் சேவை அடிப்படையை பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. பெரிய ஆலயங்களை கொண்டிருப்போருக்கு குறைந்த மானியங்களும் சமயம் சார்ந்த அமைப்புகளுக்கு கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்வது அவரவர்களின் சமய நடவடிக்கைகளை பொறுத்ததே ஆகும்.

அதனால் கூடுதலாக நிதி வழங்கப்பட்ட அமைப்புகளுக்கும் தனக்கும் ஏதோ சம்பந்தம் உள்ளது என்ற தோரணையை உருவாக்கி அதில் சிலர் குளிர் காய முயலலாம். மானியம் வழங்கப்படும் அனைவரையுமே சமமாகத்தான் கருதுகிறேன். அதில் சில திட்டங்களுக்கு கூடுதலான நிதி தேவைபடுவதால் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறதே தவிர எனக்கும் அந்த அமைப்புக்கும் தொடர்பு கொண்டிருப்பதால் அல்ல.

அதேபோன்றுதான் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை கூட வீண் செலவுகளை குறைத்து சிக்கனப்படுத்துவதன் வாயிலாக வழங்கப்படுகிறது. பொங்கல், தீபாவளி போன்ற விழாக்காலங்களில் செய்யப்படும் வீண் செலவுகளை குறைத்து அந்த நிதியை இதுபோன்ற ஏழை மாணவர்களுக்கு வழங்கி வருகிறோம் என்று கணபதிராவ் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment